Pages

சனி, 21 ஏப்ரல், 2018

தருமம் என்ற சொல்: பொருளும் அமைப்பும்.

ஈ என இரத்தல் இளிந்தன்றே....... என்`கின்றன நம்
தமிழ் நூல்கள்.

ஈ என்றால் எனக்கு நான் கேட்கும் பொருளை
ஈந்துவிடு என்று பொருள்.

ஈந்துவிடு என்று ஒரு பாடலில் வந்தால் அதற்குக்
 "கொடுத்துவிடு" என்று பொருள் எழுதுவோம்.
நல்லாசான் ஒருவர் நம்மிடம் வந்து
நீ எழுதிய பொருள் தப்பு என்பார்.  அப்படிப்
பொருள் சொன்னது தப்புதான் என்று ஒப்பவேண்டும்.
ஏனென்றால் ஈவது என்பது உயர்ந்தோன் ஒருவன்
தன்னிலையில் தாழ்ந்த ஒருவனுக்கு ஒன்றைச்
சேர்ப்பிப்பது (கொடுப்பது என்று இங்கு எழுதவில்லை,
கவனிக்கவும்)   ஆகையால் அது நல்ல தமிழின்படி
தவறானது தான்.

ஒத்த ஒருவனுக்கு ஒன்றைச் சேர்ப்பிப்பது தருதல்.
அப்புறம் தன்னினும் உயர்ந்தோன்,  தன்னிடம்
ஒன்றைச் சேர்ப்பிப்பது கொடுத்தல்.

ஆகவே ஈதல், தருதல், கொடுத்தல் என்ற சொற்களுக்
கிடையில் மிக்கத் துல்லியமான பொருள்
வேறுபாடுகள் ஒரு காலத்தில் இருந்தன.
அவைமறைந்து பிற்காலத்தில் முச்சொற்களும்
ஏறத்தாழ் ஒரே பொருளில் வழங்கத் தலைப்பட்டன.

ஓராயிரம் ஆண்டுகள் சென்றிருக்கலாம்.  எந்தக்
காலக் கட்டத்தில் இருந்து ஆயிரம் ஆண்டுகள்
என்று சொல்ல இயலாது. அப்புறம் ஒருவன்
ஒன்றை இன்னொருவனுக்குச் சேர்ப்பிப்பது "தருமம்"
என்று சொல்ல முனைந்து அந்தத் தருமச் சொல்லையும்
படைத்தனர்.

தரு என்பது வினைப்பகுதி.  தருதல் என்று தொழிற்
பெயராகவும் (a noun formed from a verb, such as giving, gift etc )
( gerund, participial noun )   தருகிறான்,  தருகிறாள் என்று
வினைமுற்றுக்களாகவும் வரும்.பிறருக்குத்
தருதலினால் உன்பால் இறைவனுக்கு மேலும்
அன்பு உண்டாகும்  என்ற வாக்கியத்தில்   தருதல் என்ற
பெயர்ச் சொல்  உருபு ஏற்றது காணக. A noun because it is
declinable.  உருபு ஏற்றல் declensions  எனப்படும். சமஸ்கிருதம்,
இலத்தீன் முதலிய மொழிகளில் பெயர்கள் உருபு ஏற்று
வேற்றுமைப்படும்.

தரு ( ஒன்றை ஒருவனிடம் சேர்ப்பி)  என்னும்
சொல்லினின்று (வினைப்பகுதி )   தரு+ ம் + அம்
 என்று விகுதி சேர்க்கப்பட்டுத்  தருமம் என்ற
சொல் அமைந்தது.  ஒத்தவனுக்குத் தருவதே
தருதல்,  தாழ்ந்தோன் (பிச்சைக்காரன் போல)
ஒருவனுக்கு ஒன்றைச் சேர்ப்பிப்பது ஈதல்.
ஆகையால்  தருமம் என்பது பொருளை
அளித்தல் என்று பொருள் படுமானால் அது
தமிழன்று என்று வாதிட்டனர்.  ஏனென்றால்
பழங்காலப் பொருண்மையுடன் அது மாறு
கொள்கின்றது என்றனர். ஈதல், தருதல்,
கொடுத்தல் என்பனவற்றுக்குள்ள பழம்பொருள்
வேறுபாடுகளைத்  துறந்தபின் அல்லது மறந்தபின்
அமைத்த சொல்லுக்கு என்ன  பொருள்
கிட்டப்போகிறது?

காலமும் பொருளும் வழுவி அமைந்த சொல்
தருமம்.  அதற்கும் அளித்தல் என்பதே பொருள்.
எதையும் எதிர்பாராமல் அளித்தல்.இற்றை
நாளில் இத்தகு பொருள்வேறுபாடுகள் ஒழிந்தன.
பிற்காலச் சொல்லமைப்புக்கு முற்காலப் பொருள்
கூறலாகாது என்பது பல்கலைக்கழகத்துக்குப்
போய்ப் படித்தால்தான் புத்தி வருமோ?

உயர்ந்தோன் முன் நின்றுகொண்டு வளைந்து
கொண்டு கொடுத்தலே கொடுத்தல்.  கொடு
என்றாலே வளைவுதான். கன்னத்தில் வளைந்த
 பகுதி கொடும்பு.  கொடு> கொடும்பு.
வளைந்த நண்டுக்கால் கொடுக்கு.  கொடு> கொடுக்கு.
வளைந்து வளைந்து காற்றிலாடுவது கொடி.
கொடு> கொடி.(கொடு+இ). வளைந்து
வளைந்து மேலேறும் தா(ழ்)வர வகை:  கொடி.
நேர்மை இல்லாத செயல் :  கொடு > கொடுமை.
உம்மைச் சுற்றி வளைவாய் நிற்கும் ஒரு
கூட்டம் கோட்டி.  (கொடு+ இ = கோட்டி.
முதனிலை நீண்டு விகுதி பெற்ற சொல்).  வளைத்துப்
பெரிதாகக் கட்டப்பெற்ற ஒரு பெருங்கட்டடம்  கோட்டை.
(கொடு+ ஐ).

கொடு என்ற சொல்லில் இந்த வளைவுப் பொருள்
ஒழிந்து விட்டது. இப்போது கொடுக்கும்போது
யாரும் வளைவதைப் பார்ப்பது அரிது.

இப்போது வளைவில்லாத கோடும் கோடுதான்.

செங்குத்தாக ஏறிப் பின் வளையும் மலையுச்சி:
செங்கோடு.திருச்செங்கோடு.   அதங்கோடு:
திருவதங்கோடு> திருவாங்கூர்!! அங்கிருந்த
ஒரு முதுதமிழ்ப் பெரும்புலவன் அதங்கோடு
ஆசான்.அவ்வாசான் தொல்காப்பிய
 அரங்கேற்றத்துக்குத் தலைமை
ஏற்றவர்.

தருமம் என்பது பயன் கருதாது ஒன்றை ஒருவற்கோ
ஒரு காரியத்துக்கோ அளித்தல்.  தருதலடிப் பிறந்த
தமிழ்ச்சொல். ஆனால் தரு என்ற சொல்லின் பொருள்
 மாற்றமடைந்தபின் புனையப்பட்டது.

அது பிற மொழிக்குத் தாவி பல்வேறு பரிணாமங்களை
அடைந்தது.

திருத்தம் பின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.