Pages

சனி, 31 மார்ச், 2018

திட்டம் தீட்டு



இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சொல்லைப் பற்றிச் சற்றுத் தெளிவாக அறிந்துகொள்வோம்.

நம் முன் இருக்கும் சொல் “திட்டம்” என்பது. ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க அந்தத் தொண்டு நிறுவனத்திடம் “திட்டம்” எதுவும் இல்லை என்று ஒரு வாக்கியம், நம் கவனத்தை ஈர்க்கிறது. “திட்டம் தீட்டினால்தானே இருக்கும்” என்றொருவர் சொல்கிறார்.

ஆம்.  திட்டம் என்பது தீட்டப்படுவது.  திட்டம் போடுவது என்ற வழக்கும் உள்ளது.
திட்டம் தீட்டு.

தீட்டு என்பதே வினைச்சொல். திட்டம் என்பது இவ்வினையினின்று பிறந்த சொல்.
தீட்டுதல் > தீட்டு+அம் = திட்டம்.

அம் விகுதி சேர்ந்து சொல் அமைவது இயல்புதான். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது:  தீட்டு என்ற வினை, அம் என்ற விகுதியை எதிர்கொள்ளும்போது  திட்டு என்று குறுகி அப்புறம் விகுதியை ஏற்கிறது.

இங்கு சொல் என்பது தீட்டு என்ற வினைதான். அது திட்டு என்று விகுதி ஏற்பதற்காக உருமாறும்போது அந்த  இடைமாற்ற உருவினை ஒரு சொல்லாக ஏற்பதில்லை.  ஆகவே விளக்கத்தின்பொருட்டு அதனை பிறைக்கோடுகளுக்குள் போடலாம்.

தீட்டுதல்:   தீட்டு+ அம் =  (திட்டு+அம்) > திட்டம் என்று காட்டவேண்டும்.

கருவில் வளரும் குழந்தை,  அதன் வெவ்வேறு வளர்ச்சி வடிவங்களில் ஒரு கால் தவளை போலவும் இன்னொரு கால் வாலுடனும் இருக்கிறது.  அவையெல்லாம் எப்படி குழந்தையின் வடிவங்கள் என்று நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையோ  அதுபோலவே இதுவும். சொற்கள் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளைக் கடந்து பின் முழுச்சொல் ஆகலாம்.

தீட்டு என்ற வினையிலிருந்து முதனிலை குறுகி அமைந்த பின் விகுதி பெற்று அமைந்ததே திட்டம் என்ற சொல்.

இதுபோல முதனிலை திரிந்து விகுதி பெற்ற இன்னொரு சொல்: சவம் என்பது.
சா(தல்)  >  சா(வு)+ அம் =  சாவம் >  சவம். இங்கும் முதனிலை குறுகி விகுதி ஏற்றது
.
சா+அம் என்று காட்டி, இடையில் ஒரு வகர உடம்படு மெய் தோன்றிற்று எனினும்  அதுவுமது. ஆகவே வுகரம் இடப்பட்டு விளக்கம் தரப்படினும் அஃதே என்`க.

இங்கு உணர்த்த முனைவது சா என்பதினின்று அமைந்ததே சவம் என்னும் சொல். மற்றவற்றைப் பேசி நேரம் கடத்த நம் பண்டிதர்கள் உள்ளனர்.

இனிச் சா+வ்+அம் = சவம் எனினும் ஒக்கும்.

முதனிலை குறுகிய சொல்லுக்கு இன்னொன்று எ-டு:  தோண்டு -  தொண்டை. ஐ விகுதி.

ஆனால் தீட்டு+அம் > திட்டம் என்பதில் டுகரத்தில் ஏறிநின்ற உகரம்1 கெட்டு,  தீட்+ட்+அம் = திட்டம் எனக் குறுகிப் பிறந்தது சொல்.  தமிழில் தீட் என்பது சொல் அன்று.  பிறமொழிக்கு ஏலும். தமிழில் அது ஓர் இடைவடிவம் ஆம்.

குறிப்பு: 

1இங்கு கள்ளப்புகவர் ஏற்றிய பிசகு கண்டுபிடித்துத்
திருத்தப்பட்டது. 

வேறு மாற்றங்கள் காணின் தெரிவிக்கவும்,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.