Pages

வெள்ளி, 2 மார்ச், 2018

செல்வம், பணம், பண்டம், சம்பளம் இன்ன பிற



செல்வம் என்ற சொல்,  பெருவழக்கினதாகும்.  தாய்மாரும் தம் குழந்தையைச் செல்வம் என்பர்.  மேலும் தமிழர் பதினாறு செல்வங்களைக் கண்டுரைத்துள்ளனர்.

ஆனால் செல்வம் விளிதலை உடையது.  செல்வம் வரினும் பின்னர் செலவாகி இல்லாமல் ஆகிவிடும். மீண்டும் அதைச் சேர்க்கவேண்டும்.  இப்படிச் சேர்க்கவும் செலவாக்கவும் ஆன நிகழ்வுகளுக்கு உட்படுவது செல்வம்.

சேர்க்கும்போதே அது சேமிப்பு ஆகிறது.  சேர் > சேர்மி.> சேமி > சேமிப்பு எனச் சொல் அமைந்தது. வார்> வா என்பன வரு என்பதிலிருந்து அமைந்ததைப் படித்துள்ளீர்கள். வார் > வா ஆனதுபோல சேர்>  சே ஆயிற்று.

பெயர்ச்சொல் ஆகும்போது சில வினையாக்க விகுதிகள் கெடும்.  உதாரணத்துக்கு: குவி > குவிப்பு > குப்பு> குப்பை என்பது காண்க. இதில் வி என்ற வினையின் ஈற்றெழுத்துக் கெட்டது.  இதைக் குவிப்பு> குவிப்பை> குப்பை என்று காட்டினும் அதுவே.  வேறுவழிகளிலும் காட்டலாம்.

இனிச் செல்வம்.  செல்வமென்பது சேமிப்பைக் குறிக்கவில்லை.  செல்வதையே குறித்தது.   சேமித்துவைத்தாலும் சென்றுவிடுகிறது.  சகடக்கால் போல் வருவதும் போவதும் உடையதாயினும், அது வரும்போது மனிதர்க்கு ஆக்கும் மகிழ்ச்சியை விட அது செல்லும்போது ஆக்கும் துயரே பெரிதாகும். இதன் காரணமாகவே,  செல்> செல்வு> செல்வம் என்று சொல் அமைந்தது.  சொல் இப்படி அமைந்ததுதான் என்றாலும் “எசமான் ( இயமான் ) பெற்ற செல்வமே” என்று பாராட்டுங்காலை இந்தச் சொல் செல் என்பதிலிருந்து வந்தது என்பதை யாரும் உன்னுவதில்லை. அப்படி உன்னாமல் இருப்பதே சொல்லின் பயன்பாட்டுக்கு இனியது.

நடிப்பவர்களும் வணிகன்மாரும் பணம் பண்ணுகிறார்கள். பண்ணுவது என்றால்  நல்வாழ்வுக்கு வேண்டியபடி சேர்த்துக்கொள்வது, சம்பாதிப்பது என்று பொருளாகிறது.  ஆடுகிறவர்களும் பணம் பண்ணுகிறார்கள்.

மிகப்பழங்காலத்தில் பண்களை வீடுவீடாகப் போய்ப் பாடியவர்களே பணம் பண்ணினார்கள்.  பண் > பண்+அம்=  பணம் ஆகிறது.    பண்ணுக்குக் கிடைத்ததே பணம்.  இது முற்காலத்தில் நெல்லாகவோ வேறு பொருளாகவோ  இருந்திருக்கலாம்.  இவர்களுக்கெல்லாம் குடியானவர்களே ஆதரவு தந்தனர் என்று தெரிகிறது.   இன்றோ  திரைப்படங்களைக் காட்டிப் பணம் பண்ணுகிறார்கள். பண்டமாற்றுக் காலம் முடிந்து நாணயங்கள் வந்தபோது அவை பணம் என்ற சொல்லுக்கு உரியவாயின.   பண்> பணம்;  பண்> பண்> பண்டம் ( பண்+து+ அம் )  பண்டம் என்ற சொல்லை விரித்தால் அது பண்ணுக்கு உரித்தானது என்ற பொருளைத் தருகிறது.

பண்டாரமும் பண்ணால் இறைவனைப் பணிந்தவன்.  பண் தந்தவன். பண்+தரு+ஆர்+ அம் = பண்டாரம். பண்ணப்படுவதும் பண்டமாகலாம். சில சொற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் வெளிப்படும்.

சம்பாவும் உப்பும் சேர்த்து ஊதியமாகக் கொடுத்து அது சம்பளம் ஆனது.  சம்பு+ அளம்.   சம்பு என்பது ஒரு நெல்வகை. அளம் என்பது உப்பு.   இந்த வரலாற்றை இத்தமிழ்சொல்லே வழங்குகிறது.  ஆங்கிலத்தில் உள்ள சாலரி என்ற சொல்லும் உப்பு வழங்கப்பட்ட காலத்தைக் குறிக்கிறது.  சால்ட் .  சாலரி.


குறிப்பு:
அரசனின் படம் போட்டிருப்பதால் படம்> பணம் என்று வந்ததென்று கருதுவோருமுண்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.