Pages

ஞாயிறு, 11 மார்ச், 2018

ஐம்பூதம், பூதம் ஆகியவை



பூதம் என்ற சொல்லை முன்போர் இடுகையில் விளக்கியது நினைவிலுள்ளது.  அதை இங்கு மீண்டும் விளக்குவோம்.

பூதம் என்பது தோற்றம் என்றே அடிப்படைப் பொருளைத் தரும்.
பூத்தல்  என்பதற்குப் பல பொருள் உள்ளன வென்றாலும்,  அவற்றுள் தோன்றுதல் என்பது மொன்றாகும்.

பூ (வினைச்சொல்).

பூ+ து + அம் = பூதம் என அமையும்.
நிலம், தீ, விசும்பு.  நீர், வளி (காற்று)  என்பன ஐம்பூதங்கள்.

விசும்பு என்பதில் செங்கதிர், நிலவு, உடுக்கள் என்னும் நட்சத்திரங்கள் , ஆகாயம் எனப்படும் வெட்டவெளி என யாவும் அடங்கும்.

பூ > பூ+து+ அம் > பூத்தம் , இது இடைக்குறைந்து  பூதம் என்றாம் எனினும் விளைவு ஒன்றே.

பூமி என்ற சொல்லும் பூத்தல் என்பதனடிப் பிறந்தது.  இது முன்னர் ஓர் இடுகையில் விளக்கப்பட்டது.  அங்குக் காண்க.

சொல்லமைப்பில் பகுதியும் சொல்லீறும் இருவகையாகவும் புணரும். அதனைப் பின் வரும் உதாரணத்தால் அறிந்துகொள்க.

அறு + அம் =  அறம்.  ( வரையறுக்கப்பட்ட விதிகள் என்பது பொருள்).

அறு+ அம் =  அற்றம்.  ( அறுத்தமைந்ததுபோன்ற சரியான நேரம்).
ஒன்றில் றகரம் இரட்டித்தது; ஒன்றில் இரட்டிக்கவில்லை.  இரண்டு சொற்கள் உருவாக்கப்பட்டு இருவேறு பொருள்களில் வழக்குக்கு வந்தன.  தமிழ்மொழியில் சொல்லாக்கம் இத்தகையது.

பூத்தம் என்ற ஒரு தனிச்சொல்லையும் அமைத்து வேறொரு பொருளுக்குப் பெயராய் இடலாம்.  அப்போது இன்னொரு சொல் கிடைக்கும்.  இனி வேண்டுமானால் ஒரு சொல்லைப் படைத்துக்கொள்ளலாம், தேவைக்கேற்ப.

சொற்களுக்கு ஏற்படும் தேவைகளைச் சமாளிக்கத் தமிழில் போதுமான வசதிகள் உள்ளபடியால், கடன்வாங்கத் தேவையில்லை. ஆராய்ந்து அமைத்துக்கொள்ளலாம்.

இனி, பூ+த் +அம் = பூதம் என விளக்கி, த் என்பது சொல்லமைப்பில் ஓர் இடைநிலை எனினும்  விளைவு ஒன்றே ஆகும்.

தோற்றங்கள் ஐந்து ஆதலின் பூதங்கள் ஐந்து  எனப்படும்:  ஐம்பூதம்.

பிறப்பு+ அஞ்சு+ அம் =  பிறப்பஞ்சம் > பிரபஞ்சம் என்பதும் ஓர் இடுகையில் விளக்கப்பட்டது.

சொற்களை அமைப்பதில் விளையாடியிருக்கிறார்கள். நீங்களும் நீக்குப்போக்காகவே நின்று கண்டுபிடிக்கலாம்.  சொல்லமைப்புக்கு விதிகள் சிலவே.  விதிகள் என்பதினும் இவற்றை வழிகள் என்று கொள்வதே மதிநுட்பம் ஆகும்.

மக்கள் அமைத்த சொல்லாயின் இலக்கணம் பேசவேண்டியதில்லை. பின்பற்றிப் பயன்படுத்த வேண்டியதுதான்.  வல்லெழுத்து மிக வேண்டுமா வேண்டாமா என்பதொன்றும் மக்கள் கவலையன்று.  குறிக்க ஒரு சொல் வேண்டும். மற்றவை தள்ளுபடி.

இனிப் புதிதாக உங்கள்முன் தோன்றும் உருவும்  பூதம்தான்.  பூ என்பதே பகுதி.

பூ >  பூது > புது.
பூ > புது > புத்தி.  ( அறிவில் தோன்றுவது).   பூ+ தி = பூத்தி. முதனிலை குறுகி “புத்தி.” இருவகையிலும் சரிதான். இதைப் பிறமொழிகளும் பெற்றது நமது மொழித்திறம்.

பூ> பூமி  முன்னர் சொல்லப்பட்டது.

எல்லாம் தோன்றற் கருத்து,   அறிக மகிழ்க.

தமிழே மூலம்.

பிழைகள் மறு ஆய்வில் கவனிக்கப்பெறும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.