Pages

சனி, 10 மார்ச், 2018

சொல்லமைப்பு நெறிமுறை: நிகழ்வு பயன்.(ஆதாயம், சீலை)



ஆதரவு,  ஆதாயம்  என்ற சொற்களுக்கு யாம் விளக்கம் எழுதியுள்ளோம்.

உண்மையில் இவ்விளக்கங்களில் சில அழிவுண்டன. எனினும் அவற்றுக்கு ஈடாக மீண்டும் ஒருமுறை பதிவு செய்துள்ளோம்.

தமிழ்ப் பொருளிலக்கணத்தில் வெட்சித்திணை நிகழ்வுகளில் ஆதரவு ஆதாரம் முதலிய நிகழ்ந்தன. ஆநிரை கவர்தலில் கவர்ந்துவந்த ஆக்களை ஊர்மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பர்.  ஆதரவு கிட்டாதிருந்தோருக்கு அப்போது ஆதரவு கிட்டியது. பணம் என்பது பெரிதும் வழங்காத பண்டமாற்றுக் காலத்தில் ஆ இல்லாத ஊர்மகனுக்கு ஓர் ஆ கிடைத்தால் அதை ஆதரவு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?   ஆவைத் தந்து பால் மோர் தயிர் முதலிய உண்டு வாழ வழிசெய்தபின் ஆதரவு கிடைத்தது  நல்ல படியாக இருக்கிறோம்; இதை நிகழ்வித்த வேந்தன் வாழ்க என்பதில் என்ன தப்பு இருக்க முடியும்.

தமிழரசுகள் அழிந்தபின் ஆநிரை கவர்தலும் பாதீடு முதலியனவும் வழக்கிழந்தபின்  ஆதரவு ஆதாரம் ஆதாயம்  முதலியவற்றுக்குப் புதிய சூழ்நிலையில் புதிய பொருள் ஏற்பட்டது ஒன்றும் எமக்கு வியப்பில்லை.

சிறப்புப் பொருள் நீங்கி பொதுப்பொருளில் பிற்காலத்தில் இச்சொற்கள் வழங்கின.

இன்னோர் நிகழ்வு:  சீலை

சீரை என்பது மரப்பட்டை.  மனிதன் ஒருகாலத்தில் மரப்பட்டை அணிந்துகொண்டு காட்டில் வாழ்ந்த காலம் அது.  மெதுவாக அந்தச் சொல் சீலை என்று மாறியது.  அப்போது நெசவு முதலியவை கண்டுபிடிக்கப்பட்டு துண்டு துணி முதலியவை வழக்குக்கு வந்தன.    
துணி என்றால் ஒரு நீளமான நெசவிலிருந்து துணிக்கப்பட்டது என்று பொருள்.  கொஞ்சம் நீளமான துணியை மரப்பட்டைக்குப் பதிலாக அணிந்து மகிழும் முன்னேற்றம் ஏற்பட்டது. அதுவும் சீலை என்றே பெயர் பெற்றது.  சீரை சீலை ஆனது. இது ரகர லகர ஒலிமாற்றம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? பலமுறை இங்கு சொல்லி இருந்தோம்.

தமிழ் காட்டுவாசிகள் காலத்தில் உருவாகி கணினிக் காலம் வரை நின்று நிலவும் மொழி ஆதலால் இதை நம்மால் தெரிந்து கூற முடிகிறது.  புதிய மொழிகளில் இதைக் கண்டுரைப்பது கடினம். 

ஆங்கிலச் சொல் என்றால் இலத்தீன் வரை போகலாம். வளம்பெறும் பொருட்டுப் பல இலத்தீன் சொற்களை அது கடன்பெற்று வளர்ந்தது.  தமிழுக்கு அந்த நிலை இல்லை.  ஒருவன் கடன் பெற்றுப் பிழைத்திருப்பான். இன்னொருவன் கடன் பெறாமல் பிழைத்திருப்பான். ஒவ்வொருவனுக்கும் சூழ்நிலைகளும் சுற்றுச்சார்புகளும் வேறுபடும். வரலாறும் வேறுவேறு. இவன் கடன்வாங்கியதால் அவனும் கடன் வாங்கினான் என்பது மடத்தனம். கடன்வாங்கிப் பிழைத்தவன் தாழ்ந்தவனும் அல்லன்; கடன் வாங்காமல் பிழைத்தவன் உயர்ந்தவனும் அல்லன். வந்தவழி வேறு அவ்வளவுதான். கிபி 1066 வாக்கில் முன்னிருந்த பழம் பிரித்தானிய மொழி அழிந்தபின் ஆங்கிலோ செக்சானிய மொழி அமைந்தது. முன் இருநூறு ஆண்டுகள்  உரோமப் பேரரசில் இங்கிலாந்து இருந்தது. இவற்றால்  இலத்தீனிலிருந்து கடன்பெறவேண்டிய நிலை ஆங்கிலத்துக்கு ஏற்பட்டது வரலாறு ஆகும்.

மீண்டும் ஆதாயத்துக்கு வருவோம்.  ஆதாயம் என்றால் மாடு பெறப்பட்டது இலாபம் என்பது பொருள்.  ஆ- மாடு; தா = தரப்பட்டது;  அம் விகுதி.  மாடு ஒன்று கிட்டினால் அது இலாபம் இல்லையா?   யகரம் உடம்படு மெய்.

சில சொற்கள் நிகழ்வு குறித்துப் பொருள்தரும். வேறு சில நிகழ்விலிருந்து பயன் குறித்துப் பொருள்தந்து மகிழ்த்தும்.  அவ்வளவுதான்.  இது சொல்லமைப்பின் நெறிமுறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.