Pages

புதன், 14 பிப்ரவரி, 2018

வைத்தியம், மருத்துவம்,

வழக்குப்பொருளும் அமைப்புப் பொருளும்

ஒரு சொல்லின் வழக்குப் பொருளும் அமைப்புப்
பொருளும் ஒன்றாகவும் இருக்கலாம்; வேறுபட்டு
மிருக்கலாம். இங்கனம் அமைப்புப் பொருள் வேறு
படுவனவற்றை யாம் பல இடுகைகளில் ஆங்காங்கு
குறித்துச்சென்றதுண்டு.

ஒரு முழுச்சொல்லின் அடிச் சொற்கள் ஒரே
பொருளனவாக இருந்தாலும்  அதன் சொல்லமைப்பின்
பின்வரும் வழக்கு அல்லது ஆட்சி வேறுபட்டிருக்கலாம்.
இதற்கோர் எடுத்துக்காட்டு ஈண்டு தரப்படும்.

இவை இரண்டும் பண்டைத் தமிழில் காணரிய புதுமைச்
சொற்கள்:

ஒன்று:  மருந்தகம்.   இச்சொல் ஆங்கிலத்தில் வழங்கும்
"பார்மஸி "  என்னும் பொருளில் வழங்கப்படுகிறது.

மற்றொன்று:  மருத்துவமனை என்பது.  இங்கு மனை
என்பது அகம் என்பதனுடன் ஒரு பொருளினதாக
வழங்கினும், மருந்தகம் வேறு;  மருத்துவமனை வேறு.
அகம், மனை இரண்டும் வீடுதான். இவை இருவேறு
சொற்கள் . பொருண்மை ஒன்று.

வேறுபடுத்துவது எது?

இவற்றை வேறுபடுத்துவது: மருந்து மருத்துவம் என்ற
சொற்கள்.  மருத்துவமென்பதும் மருந்து என்ற அடிச்
சொல்லிலிருந்தே வருகிறதென்றாலும் மருந்து வேறு;
மருத்துவம் வேறு.   அகமும் மனையும் ஒன்றாயினும்
மருந்து என்பது நோய் நீங்க உண்பதையும் மருத்துவம்
என்பது தொழிலையும்  ந`ன்கு வேறுபடுத்திற்று என்று'
கூறலாம்.

வைத்தியம் என்பதென்ன?

ஓரு நோயாளியை மருத்துவர் ஓரிடத்தில் வைத்துப் பார்த்து
மருந்து கொடுத்துக் கவனித்துக் கொள்ளுதலே வைத்தியம்
ஆகும்.  வைத்து+ இயம் :   வைத்தியன் நோயாளியை 
ஓரிடத்தில் வைத்துப் பார்த்தல். மருந்தை இடிப்பது,
காய்ச்சுவது, நோயாளிக்கு அளிப்பது, மருந்துண்ணுதலை
மேற்பார்ப்பது  ஆகியவை இங்கு குறிக்கப்பெறுகிறது .  
 வைத்து என்ற  வினை எச்சத்தினின்று சொல்
அமைக்கப்பட்டுள்ளது.  இதுபோல எச்ச வினையினின்று
சொல்லை அமைத்தல் பாலி, சமஸ்கிருதம் ஆகிய
மொழிகளில் உண்டு. இத்தகு அமைப்புகளைத்
 தமிழிலும் காணலாம். எடுத்துக்காட்டு:  ஆண்டு
( வினை எச்சம்:) + அவன் = ஆண்டவன் எனக்
காண்க. இதனை மறுத்தலாகாது.

மருத்துவம் என்பது மருந்து கொடுத்து நலம் காண உதவுதல்
(ஆகிய தொழில் ).

ஆனால் இன்று வைத்தியம், மருத்துவம் என்பவை பொருளில்
ஒன்றாகவே கொள்ளப்படுகின்றன. வைத்தியம்  
(ஓரிடத்தில் தன்வயம் வைத்து நோயாளியைக் 
கவனித்துக்கொள்வது)  தோற்றம் உணரப்
படாமையின்  அயலென்றும் கருதப்படுகிறது.  மேலும்
இச்சொல் வேறுமொழிகளிலும் பரவியுள்ளது. 

ஆயுளைப் பற்றிய வேதம் ஆயுர்வேதம் என்று
மாறிவிட்டு அயலானது போலவே ஆகும். 
தமிழ் ள் பிற பக்கத்து மொழிகளில் ர் என்று
மாறிவிடும். (  இதனை ஆய்வு செய்க    அதாவது இங்கனம்
திரிந்த பிற சொற்களைத் தேடிப் பிடிக்க ).  ஆ+ உள்: ஆயுள்.
ஆ= ஆதல்.  உள்: உள்ளதாகிய நிலை அல்லது விகுதி, ஆக
ஆயுள்.  உயிருடன் இவ்வுலகில் ஆகும் நிலை ஆயுள்.


பிற்குறிப்பு:
என்க  என்பது எங்க என்று தானே மாறிக்கொள்வது
செயலியின் சொந்தத் திருத்தம், அஃது ஒரு பிழை
ஆகிறது.  இது மறுபார்வையில் திருத்தப்பட்டுள்ளது.
வேறு எழுத்துப்பிழைகளும் திருத்தப்பட்டுள்ளன.
மீள்பார்வை செய்யப்படும். 
இப்போது: 4 மணி காலை
 15.2.2018.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.