புள் என்றால் நல்ல தமிழில் பறவை என்று
பொருள். இந்தச் சொல்லைப் பழந்தமிழ் நூல்களில் எதிர்கொள்ளலாம். புள்ளினம் என்றால் பறவை
இனம். நீங்கள் எழுதும்போது பறவையைப் புள் என்று குறிக்கத் தயங்காதீர்கள். உங்கள் வாசகர்களுக்குப்
புரியாமற் போமென்று ஈரடியாய் இருப்பின், இச்சொல்லுக்கான
விளக்கத்தைப் பிறைக்கோடுகளுக்குள் இடலாம்.
உகரத் தொடக்கத்துச் சொற்கள் அகரத் தொடக்கமாய்த்
திரியக்கூடும். எடுத்துக்காட்டுகள் எம் பழைய இடுகைகளில் உள. உமா என்னும் சொல் உம்மா என்பதன் இடைக்குறை. உம்மா
என்பதோ அம்மா என்பதின் வேறன்று. உமா என்பது தாய் என்றும் பார்வதி என்றும் பொருள்படும். உண்ணாக்கு - அண்ணாக்கு என்பதைத் தமிழாசிரியர்கள்
எடுத்துக்காட்டுவதுண்டு.
இப்படியே புள் என்பது பள் என்று திரிந்தது.
பின்னர் சி என்னும் விகுதிபெற்று பட்சி என்று மாறிற்று. பட்சி என்பது பக்கி என்றும் வரும். இப்படித் திரிந்தபின்
ஒரு விகுதி பெறுவது தேவையானதே. இதற்குக் காரணம், பள் என்பது மற்ற அர்த்தங்களையும் உடையதாய் உள்ளது. பள்> பள்ளி; பள்> பள்ளம்; பள்> பள்ளன்;
பள் > பள்ளு. இப்படிப் பலவாம்.
பட்சி என்றமைந்தபின் பிறமொழிகளிலும்
ஏற்கப்பட்ட படியால், தமிழுக்கு அயல் என்று (பிழைபடக் ) கருதப்பட்டதில் வியப்பொன்றுமில்லை.
பள் என்பது பற என்றும் திரியும் தகையது.
குள் என்பது குறு என்றும் திரிதல் காண்க. குள்ளம், குறுமை என்பவற்றில் பொருளணிமை உளதாதல்
காண்க. கள் என்பது கருப்பு என்றும் பொருள்படும். கள் என்ற சொல்லிலிருந்து கள்ளர் என்ற சொல் அமைந்து
கருப்பர் (கறுப்பர்) என்று பொருள்படுவதாய்க் கூறப்படுதல் காண்க. கள்> காள்> காளி: கருப்பம்மை.
பள்> பற > பறவை.
பள்> பள்+சி > பட்சி.
இச்சொற்களின் தொடர்பு கண்டுகொள்வதுடன்
மேற்குறித்த திரிபுகளையும்
ஆய்வு செய்தல் நலமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.