Pages

செவ்வாய், 9 ஜனவரி, 2018

சந்தேகம் ஐயப்பாடு அயிர்த்தல் ஈரடி





இரண்டுக்கு  அல்லது அதற்கு மேற்பட்ட கருத்துநிலைகள் தோன்றி,  அவற்றுள் இது சரியோ அது சரியோ என்ற கேள்விகள்  உங்களுக்குள் எழுந்து எது சரி என்று துணிய இயலாதபோது,  அதை நாம் சந்தேகம் என்`கிறோம். தனித்தமிழில் இதை “ ஐயுறுதல் “  என்றும்  “அயிர்த்தல்”  என்றும் சொல்வர்.

ஐயுறுதல் என்பது இன்னும் நம்மிடையே வழக்கில் உள்ளது.  பேச்சில் இது வாராத சொல்லாயினும் எழுத்தில் அவ்வப்போது காணக்கிடைக்கும் சொல் இதுவாகும்.  ஐயப்பாடு என்றும் இன்னொரு வடிவம் கொள்ளும்.  இதில் ஐ என்பதே பகுதி அல்லது அடிச்சொல் ஆகும்.

ஐ என்பதொரு சுட்டடிச் சொல் ஆகும். இது அ, இ, உ என்ற முப்பெரும் சுட்டுக்களில்  அ என்ற சுட்டினின்று போதருவதாம். அ என்பது அங்கிருப்பது என்றும் பொருள்படும்.  இங்கிருந்தால்  அது “இ”.  இங்கிருப்பதில் ஐயப்பாடு இருக்காது.  அதுதான் இங்கிருக்கிறதே. மற்றும் நீங்கள்  நேரடியாக அதைக் காணமுடிகிறது. பெரும்பாலான சூழ்நிலைகளில் உங்களுக்கு இங்கு உங்களிடம் இருக்கும் பொருள் மேல் “சந்தேகம்” எழுவதில்லை.  ஆனால் அது அங்கிருக்கிறது.  ஆகவே, அது உண்மையில்  இருக்கிறதோ, இல்லையோ, சிறிதோ, பெரிதோ, உருண்டையோ, தட்டையோ, நீளமோ, குட்டையோ என்றிப்படிப் பலதரப்பட்ட ஐயப்பாடுகள் எழுதற்கு இடமுண்டு. இதனால்தான் அங்கிருத்தலிலிருந்து ஐ -  ஐயப்பாடு, ஐயுறுதல் முதலியவை சுட்டடியில் தோன்றின. இது அறிவுக்குப் பொருத்தமான் சொல்லும் பொருளும் ஆகும்,

அங்கிருக்கும் பொருளின்பால் பல ஐயப்பாடுகள் தோன்றக்கூடும் , அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளை உண்டாக்குதல் கூடும் என்பதால் தமிழில் இந்த மன்நிலைக்கு இன்னொரு சொல்லும் உண்டாயிற்று.  அதுதான் ஈரடி என்ற சொல்.  இது இரு + அடி என்ற இருசொற்களால் ஆன ஒரு கூட்டுச்சொல்.

இப்போது இதை ஒரு கவியில் சொல்வோம்:

சீரடித் தோற்றத் தையன்
தேவனோ  மாந்தன் தானோ,
ஈரடி பட்டென் உள்ளம்
இங்கல மருமே ஐயா.

( இது  ஓர் உதாரணத்துக்காகத் தரப்படும் கவி.  சாயிபாபாவின்பால்  ஐயப்பாட்டினை எழுப்புவதற்கு அன்று ).

ஈரடி என்ற பதத்தை உணர்ந்துகொள்ளப் பயன்படுத்துக.

இது ஐயப்பாடு அல்லது சந்தேகம் என்பது என்ன என்பதைத் தெளிவிக்க,  யான் உங்கட்குப் புனைந்து தரும் ஒரு சிறு கவியாம்.   அலமருதல் -  சுழலுதல். அங்குமிங்குமாய் அலைதல்.  ஐயப்படுதலுக்குப் பொருத்தமான சொல்.

ஈரடி என்பது ஐயப்பாட்டுக்குப் பொருத்தமான பொருளுடைய சொல் என்றாலும்,  பேச்சில் சிலவேளை தரை ஈரமாகக் கிடக்கிறது என்ற பொருளிலும் அது ஆளப்படலாம்.     மழையினால் எங்கும் ஈரடியாகக் கிடக்கிறது “  என்று சொல்வதைச் செவிமடுத்திருக்கலாம்.  இரு + அடி =  ஈரடி என்பது வேறு;  ஈரம் + அடி =  ஈரடி என்பது வேறு என்பதை நினைவில் இருத்திக்கொள்க.

ஈரடி ( ஐயப்பாடு) என்பதில் இரு என்பது ஈர் என்று நீண்டு புணர்ந்தது.  இதற்குக் காரணம் அடி என்பது அகரத்தில் ( உயிரில்) தொடங்கியதே ஆகும்.  மேலும் இங்கு “  அடி “ என்பது  அடுத்தடுத்து நிகழும் இருவேறு நிலைகளை உணர்த்துகிறது.  அடு > அடி. அடுத்தடுத்து வருதலாகும்.  இதுவோ, இல்லை; அடுத்து அதுவோ. இல்லை; துணிய இயலவில்லை என்பது.   

ஈரடி என்பது ஈரத் தரையைக் குறிக்குமானால்,  அடி என்பது தரையே ஆகும்.  கால் தரையை அடுத்து நில்லாவிடின் அதற்கு நிலையிடமில்லை, ஆகவே அடி என்பது தரையே ஆகும்.  சொல்லமைப்பில் இது பொருளாயினும் இலக்கணப்படி அடி என்பது காலடியாய் இருக்க, அது தரையைக் குறித்தபடியால் ஈண்டு இடவாகுபெயர் எனல் உண்மையாகும்.   சொல்லமைப்புக் காரணம் வேறு.  இலக்கணம் கூறும் காரணம் வேறாகலாம் என்பதுணர்க.

ஈரமாகவே இருந்துகொண்டு பயிர்செய்தல் முதலியவற்றுக்கு உதவாத நிலம்  ஈரணம்  (swampy land) எனப்படும்.  இது ஈரம் + அணம் எனப்புணர்ந்தது.    ஈரம் என்பதில் உள்ள அம் விகுதி கெட்டது. (விடப்பட்டது). பெண்கள் குளிக்கும்காலை நனைந்துவிட்ட துணியை “ஈரணி” என்பர். குளியலுக்கான துணியுமாம். இது ஈரம்+ அணி  ஆகும். இரண்டாகவோ அல்லது அதற்கும் மேலான துண்டுகளாகிவிட்ட துணி  ஈரி எனப்படும்.  இரு > ஈரி.  இச்சொல்லுக்கு வேறு பொருளும் உள.  ஈரித்தல் எனின் ஈரமாகுதல் என்பதாகும். ( ஈரப்பதம் என்பர். முழுமையாகக் காயவுமில்லை;  முழுதும் நீர் சொட்டும்படியாகவும் இல்லை. அத்தகு நிலை).

மழைக்காலத்தில் காற்றில் உள்ள ஈரநிலை குறிக்கும் சொல் ஈராடி என்பது.  இது இன்று பயன் படத் தக்க சொல்.  Humidity  என்பதற்குப் பயன்படுத்தலாம், வெளிக்காற்றில் ஈரம்  ஆடுதலே ஈராடி ஆகும். நல்ல தமிழ் விழையும் அன்பர்கள் பயன்படுத்துவீராக. கொஞ்சக் காலம் ஆங்கிலச் சொல்லைப்  பிறைக்கோடுகளுக்குள் இட்டுப்  புழக்கப் பழக்கம் ஏற்படுத்தவேண்டியிருக்கலாம்.

அறிந்து மகிழ்வீர்.



அடிக்குறிப்பு:

சந்தேகம்:   சம்+ தேகம்.  இங்கு  தேகமென்பது உடலைக் குறிப்பதாகச் சொல்வது தவறு. 
தேய்> தேய்+கு+அம் = தேய்கம்> தேகம்.   அதுவா இதுவா என்று இரண்டும் உறழ்ந்து தேய்ந்து நிற்பது.  துணிதல் அல்லது திடம் தேய்ந்துவிடுகிறது.  சம் என்பது சமை என்ற சொல்லில் கிட்டுவது.  சமைத்தலாவது பொருள்களைச் சேர்த்து அமைத்தல். சமை> சம்.( extracted root).  அமை> சமை. இருவேறு நிலையின ஒன்றாக இடப்பட்டுத் துணிபு தோன்றாமையின் ஏற்படும் மனத் தேய்வு விளைதல்.

தேய்கம்> தேகம். (  இடைக்குறை).
 ஒ.நோ:

வாய்த்தி > வாத்தி (வாத்தியார்).  வாய்ப்பாடம் சொல்பவன்,  (  இடைக்குறை).
 வாழ்த்தியம் > வாத்தியம்.  (  இடைக்குறை).
சேர் > சேர்மி > சேமி > சேமித்தல்  ( ர்:  இடைக்குறை).

Enjoy yourselves with words.



(தன் திருத்த மென்பொருள் தோற்றப்

பிழைகளும் அச்சுப் பிழைகளும் பின்

திருத்தம்பெறும்.)



   




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.