இதுகாறும் சொற்கள் பலவற்றை நாம் விளையாட்டைப்
போலவே ஆய்வு செய்து சில உண்மைகளையாவது அறிந்துள்ளோம். பலவற்றையும் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்துவிட்டு
இறுதியில் யாதும் தெரியவில்லை எனின் அதற்கு வெறுமனே உறங்கி எழுதல் மேலும் பலனளிக்குமன்றோ’?
இப்போது மதிக்குகந்த ஓர் இலக்கணக் கொள்கையை அல்லது ஒரு சொல்லியற் கொள்கையை அறிந்து இன்புறுவோம்.
ஒரு பகுதி என்று நாம் குறிப்பிடுவது
ஓர் ஏவல் வினை. இது வரு என்பதுபோலும் ஒரு சொல். ஆனாலும் வரு என்பது ஓர் ஏவல் வினையாக வழங்கவில்லை. தேடு என்பது ஏவல் வினை. ஒருவனிடம்
எலியைக் தேடு என்றால் அவனிடம் ஓர் வேலையை ஏவுவதாக இருப்பதால், அது ஏவல் வினை என்`கிறோம். A verb denoting a command. வருகிறான், வருகிறாள் என்பனவற்றில் வரு என்பதே
பகுதியானாலும், அது ஏவலாக இல்லாமல் இருப்பதற்குக்
காரணம், வரு என்பது வார் என்று திரிந்து, அதுவும் ஏவலாக
இல்லாமல் பின்னும் வா என்று திரிந்து
இவ்விறுதி வடிவே ஏவலாக மொழியில் நின்று நிலவுகிறது. வினைப்பகுதிதான் ஏவல் வினை என்னும் சொலவின் உண்மையை
வரு என்பதன் நிலைமை பொய்த்துவிடச் செய்கிறது.
ஒரு காலத்தில் தமிழில் வரு என்பது ஏவலாக
இருந்தது. 1 அந்தக் காலம் மலையேறிவிட்டது. இப்போது நாம் திரிபை வைத்துக்கொண்டு திண்டாடிக்
கொண்டிருக்கிறோம். சொல்லறிவுடையோன் வரு-தான்
வா என்பதை அடையாளம் கண்டுகொள்வான். மொழியானது எப்போதும் திரிபு கொண்டிருக்கும் ஒரு
கருவி என்பது அவனுக்குத் தெரியும். சில நூற்றாண்டுகளிலேயே மொழி திரிந்து உருத்தெரியாமல்
போய் அதை அறிய முயல்வாருக்கு உரை தேவைப்படும் நிலையை அடைந்துவிடுகிறது. இதை அறிந்த
இலக்கண ஆசிரியர் பவணந்தி முனிவர், பல நூற்றாண்டுகட்கு முன் “பழையன கழிதலும் புதியன
புகுதலும் வழுவல கால வகையினானே” என்றார்.
அவர்காலத்தில் வகையினானே என்று கேட்போர் அறிந்த
தமிழ், பிற்காலத்தில் வகையினாலே என்று மாறிவிட்டது. 2 அதனால் நாம்
0னே > லே திரிபு என்றும் 0ன > ல திரிபு என்றும் சொல்கிறோம். அதனால் நாம் திராவிட மொழிகள் தமிழினின்றும் திரிந்தன
என்`கிறோம்.. மனோன்மணியம் சுந்தரனாரின் சொற்களால்
இதைத் தெரிவித்தல் சாலுமேல், “ஓன்று பலவாயின” என்`கிறோம்.
இப்படிக் கூறுவது சரியாயினும், ஒவ்வொரு சொல்லுக்கும் சரியாகிவிடாது. பல வேளைகளில்
தெலுங்கிலும் மலையாளத்திலும் துளுவிலும் உள்ள சொற்கள் முந்து வடிவங்களாக உள்ளன; தமிழ்
திரிபைக் காட்டுகிறது என்பதையும் நாம் உணர்தல்
வேண்டும். மொழிப்பற்றினால் தமிழிலுள்ள
ஒவ்வொரு சொல்லும் முந்துவடிவம் எனின் அது பிழையாகும். ஒவ்வொன்றயும் ஆய்ந்தே முடிவு மேற்கொள்ளுதல் வேண்டும். தமிழின் சொற்களில் பல முந்துவடிவம். எல்லாம் அன்று.
ஒரு பகுதியில் ஒரு விகுதி சேர்ந்தால்
அது பயனுடையதாய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் எதற்கு அந்த விகுதியைச் சேர்க்கவேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. கு என்பது ஒரு வினையாக்க விகுதி. மூழ் என்ற அடியுடன் கு சேர்கையில் “மூழ்கு” என்றாகி
அது ஒரு புதிய பொருள் நிலையைக் காட்டுகிறது.
வரு என்பது வருதலைக் குறிக்கிறது. வருகிறான்
என்பது வினைமுற்றாகிறது. பின் வரு என்பதில்
ஏன் வருகு என்றும் செய் என்பதில் செய்கு என்றும் ஒரு வீண்விகுதி சேர்க்கவேண்டும்?
ஆகவே வருகுதல் என்பதை வருதல் என்பதனோடு ஒப்பக் கொள்ளுதல்
கூடாது, என்பதோர் கொள்கையாகும். மி என்பது
மேல் என்று பொருள்படும். கு விகுதி சேர்ந்து
மிகு என்பது அமைகிறது. இன்னொரு சொல் அமைய அது (கு) உதவியது. அப்படி உதவாவிடின்
விகுதியை இணைத்தல் உதவாக்கரை வேலையன்றோ?
இதுபற்றி இரு புலவர்களுக்கிடையில் ஒரு
சர்ச்சை எழுந்தது.
அதை இன்னொருகால் அறிந்து இன்புறுவோமே!
அடிக்குறிப்பு:
1. இன்னொரு சொல்வடிவம்: தருதல் > தரு(கு)தல் > தருகுதல். இதனை வருகுதல் என்பதனோடு ஒப்பிட்டு உணர்க.
2 அறிஞ்ர் சிலரின் கருத்துப்படி லகரம் மொழிவரலாற்றில் 0னகரத்தின் முந்தியது என அறிக; இதனை சங்கச் செய்யுள்களின் மூலம் அறியலாம். அண்ணன் என்பதினும் முந்தியது அண்ணல் என்ற வடிவம். இளையன் அல்லது இளையவன் என்பதினும் முன்னது இளவல். வினைமுற்றுக்களிலும் "செய்வல் யானே" எனின் செய்வேன் நானே" என்பது ஆகும். லகரம் னகரமாக மாறிவிட்ட பின் சில சொற்களில் னகரம் எழுதுவோரால் விரும்பப்படுவதாயிற்று என்று அறியப்படுகிறது. பேச்சின் வேறுபட்டதாய் எழுதுமொழி இருத்தல் வேண்டி இது மேற்கொள்ளப்படுவதாயிற்று எனலாம்.
எழுத்துப்பிழைகள் தோன்றின் பின்னர் இடுகையைச்
1. இன்னொரு சொல்வடிவம்: தருதல் > தரு(கு)தல் > தருகுதல். இதனை வருகுதல் என்பதனோடு ஒப்பிட்டு உணர்க.
2 அறிஞ்ர் சிலரின் கருத்துப்படி லகரம் மொழிவரலாற்றில் 0னகரத்தின் முந்தியது என அறிக; இதனை சங்கச் செய்யுள்களின் மூலம் அறியலாம். அண்ணன் என்பதினும் முந்தியது அண்ணல் என்ற வடிவம். இளையன் அல்லது இளையவன் என்பதினும் முன்னது இளவல். வினைமுற்றுக்களிலும் "செய்வல் யானே" எனின் செய்வேன் நானே" என்பது ஆகும். லகரம் னகரமாக மாறிவிட்ட பின் சில சொற்களில் னகரம் எழுதுவோரால் விரும்பப்படுவதாயிற்று என்று அறியப்படுகிறது. பேச்சின் வேறுபட்டதாய் எழுதுமொழி இருத்தல் வேண்டி இது மேற்கொள்ளப்படுவதாயிற்று எனலாம்.
எழுத்துப்பிழைகள் தோன்றின் பின்னர் இடுகையைச்
செப்பனிடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.