Pages

சனி, 23 டிசம்பர், 2017

வருவது: வருடம்; ஆள்வது ஆண்டு. தவறாத காலம்.



பழங்காலத்தில் மனிதர்கள் மழையை நம்பித்தான் பூமியின் பல இடங்களில் வாழ்ந்தனர். இது உண்மையென்பதைத் திருக்குறளின் வான்சிறப்பு என்னும் அதிகாரம் நமக்கு நன்றாகவே உணர்த்துகிறது.  இவ்வரிய நூல்தவிர இன்னும் பன்மொழியிலுள்ள நூல்களும் இதனை நமக்குணர்த்தும். இப்போது புதிய பல தொழில் நுட்பங்களும் தோன்றிக் கடல் நீரைக் குடிநீராக்குதல், அழுக்கு நீரைத் தூய நீராக்குதல் போன்ற புதுமைகளும் மனிதர்தம் வயப்பட்டுள்ளன.

வருடம் என்ற சொல் மழையின் காரணமாக ஏற்பட்ட சொல் என்று முன்னாளில் ஆய்வாளர்கள் சிலர் கருத்துக் கொண்டிருந்தனர். ஆகவே தமிழில் வழங்கும் வருடம் என்ற சொல் மழையின் காரணமாய் அமைந்தது என்றனர். இதற்குக் காரணம் வர்ஷ என்ற மழையென்று பொருள்படும் சங்கதச் சொல் வருடம் என்ற தமிழில் வழங்கும் சொல்லுடன் ஒலியொற்றுமை உடையதாய் இருப்பதுதான்.

அடிச்சொல் வருதல்:

வர்ஷ என்பதும் வருடம் என்பதும் வருதல் என்னும் தமிழ்ச்சொல்லின் அடியாய்ப் பிறந்தவையே ஆகும்.  மழையென்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் வந்து பொழிகிறது. சிலவேளைகளில்  தவறி ஏரி குளங்கள் முதலியவை வற்றிவிட்டாலும், பெரும்பாலும் தவறாமல் வருகிறது. ஆகவே பெரும்பான்மை கருதி , வருதல் என்ற சொல்லினின்று வர்ஷ என்பதை அமைத்துக்கொண்டனர். மனிதனால் இயற்கையைத் தடுக்கமுடியாது. வரு > வர் > வர்ஷ.

வருடமாகிய ஆண்டும் பூமியின் சுழற்சியால் வருகின்றது. அதுவும்  ஓர் இயற்கையை முன்னிட்ட காலக்கணக்கு ஆகையால் தவறுவதில்லை. வந்தே ஆகிறது. ஆண்டு அல்லது வருடமானது ஐம்புலன்`கட்கு அப்பால்பட்ட காலம் ஆனால் ஒரு பொருளைபோலவே  வருடம் போனது, வருடம் வந்தது, வருடம் பிறந்தது, சென்ற வருடம் என்றெல்லாம் நாம் பேசுகிறோம். ஒரு மனிதனைக் குறிப்பதுபோல் அல்லவோ குறிப்பிடுகிறோம்.  மொழிகளின் வழக்கு அப்படி!  எனவே வரு + உடம்  என்ற இரு சொற்களையும் இணைத்து இச்சொல் புனையப்பட்டுள்ளது.  உடம் என்பது உடன் என்பதன் இன்னொரு வடிவம். உடம்படுதல், உடம்படு மெய் என்பன கண்டுணர்க. திறம் -  திறன் என்பதுபோல உடம் - உடன் என்ற திரிபுகளுமாம். உடன்வருவது காலம்தான்! அது முடிவதில்லை. நாம் முடிந்துவிடுகிறோம். வருகின்ற காலத்தை நாம் உடன் கொண்டுள்ளோம்.  அதுவே நம்மை உடுத்துக்கொண்டுள்ளது. உடு > உடல்; உடு > உடம்> உடம்பு.
நம்மை உடுத்து உடன்வருவது வரு+ உடம் என்று அமைந்தது மிக்கப் பொருத்தமுடைத்தே ஆகும்.

வரு + உடம் என்பதில் உள்ள இரு உகரங்களில் ஒன்று கெட்டு வரு+ டம் என்று அமைந்தது. இரு உகரங்களில் முன்னது கெட்டதா பின்னது கெட்டதா என்பது வீண்வழக்கு. பேச்சில் வரு என்பது வர் என்று திரியும்:  வருகிறாயா > வர்றியா என்பது காண்க.  வரு > வர். (வர்ஷ)(வருட)

வாரம் என்பதும் வார் என்ற சொல்லால் அமைந்தது.  வந்தே ஆகும் காலக்கணக்கு. வரு > வார் என்று திரியும். வா> வாராய். வார் > வாரான்.  வாருமே.

குறித்த காலத்தில் ஆற்று நீர் வருகிறது. ஆகவே அதுவும் மழைபோல வாரி என்பட்டது. (வரு>வர்>வார்)  பின் இது கடலுக்கும் பயன்படுத்தப்பட்டது. (வரு>வார்>வாரி: ஆறு , கடல்). வாரி என்பது மாரி என்றும் திரிந்தது.  வ- ம திரிபு.

இந்தச் சொல்லமைப்புகளிலெல்லாம் வருவது என்றால் தவறாமல் வருவது   என்பதே அடிப்படைப் பொருள் ஆகும்.  கிழமை என்பது உரிமை என்ற பொருளதாகும்.  நாம் காலத்தால் ஆளப்படுகிறோம். ஆதலின்  ஆள் > ஆள்+து > ஆண்டு.  ஆள் = ஆளுதல்; து-  உரியது.  காலமே மனிதனை ஆள்கிறது.

year < jear:   proto-Germanic: jeram.  Perhaps also from a word meaning something fixed.

மேற்கண்டவை இங்கும் விளக்கம் பெற்றுள்ளது காண்க.

https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_27.html 

அறிந்து மகிழ்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.