தலித்துகளைப் பற்றி ஒரு சிறிய சிந்தனையில் ஆழ்வோம்.
தலித்து என்ற சொல் எங்கிருந்து எப்படி உண்டாயிற்று என்பதுபற்றி
அறிஞர் பல வரைந்துள்ளனர். அவர்களின் கருத்துகள்
பட்டொளிருமாறு கலைக்களஞ்சியங்களும் அகராதிகளும் தம்முள் சிற்றுரைகளையும் கட்டுரைகளையும்
உட்பொதிந்து இலங்கிக்கொண்டுள்ளன. அவைகள் கூறியதுகூறலாக இல்லாமல் அவை தாண்டிய ஒரு சிந்தனைச்
சிற்றுரையை வரைதலே எம் நோக்கமாகும். அந்நோக்கம் இனிது ஈண்டு வெளிப்படுமாக.
தலித்து என்பது தாழ்த்தப்பட்டோர் எனபதாகப் பழைய சமஸ்கிருத அகராதிகளிற் காணக் கிட்டிற்றிலது.
ஆயினும் சமஸ்கிருத மொழியிலிருந்து பெறப்பட்ட தென்பதாக அறிஞர் சிலர் கருதுகின்றனர். நேர்முகமாக
இல்லாமல் ஒடுக்கப்படுதல் பொருளாய்க் கொண்ட ஒரு சங்கதச் சொல்லினின்று திரிந்தமைந்ததாகக்
கொள்கின்ற நிலை உண்மையுடன் ஒட்டி நிற்பதாகக் கொள்ளல் ஏற்புடைத்தென்று தெரிகின்றது.
இது இங்கனமாயின் ஆங்குப் புகுந்து திரும்புவோம்.
தமிழில் தளி என்றால் எண்ணெய் விளக்கு என்றும் தளிச்சேரி என்பது
ஆடற்பெண்டுகள் வதியும் தெருவென்றும் சொல்லப்படுகிறது. அப்பெண்கள் தளிச்சேரிப்பெண்டுகள் எனப்படுகிறார்கள்.
எனவே தளித்து என்றால் எண்ணெய் விளக்குப் பிடித்தவர்கள் அல்லது உடையவர்கள் என்று பொருள்கொள்ள
இடமுண்டு. -து என்ற விகுதி உடையது, உடையோர் என்றும் பொருள்விரிக்க இடனுண்டு.
விளக்கு அல்லது தீப்பந்தம் பிடிக்க ஆளில்லாமல் இரவில் நடனம் முதலியன
நடைபெறுதலை இயலாது என்றே கூறவேண்டும். நடனக்காரிகளுக்குப் பறையடித்தல் முதலியன இருக்க
வாய்ப்பு இல்லை. அதற்குப் பதிலாக விளக்குப் பிடித்திருக்கலாம்.
தள் என்பது வெளியில் நீட்டிக்கொண்டிருப்பது என்று பொருள்படவேண்டும். தள் > தள்ளு. தள் > தளி.
எனவே வெளி நீட்டிக்கொண்டுள்ள திரி, தளியாகிறது. இது விளக்கைக்குறித்தது ஆகுபெயர். நாளடைவில்
திரிக்கு ஏற்பட்ட சொல் விளக்கைக் குறித்தது.
தளி என்பதற்குக் கோவிலென்றும் அறை என்றும் பொருளிருக்கின்றன. கோவிலும்
இவர்கள் வாழ்ந்த அறைகளும் இருந்த சேரி தளிச்சேரி என்றும் வழங்கியிருக்கலாம்.
இங்ஙனமிருப்பினும் தளித்து என்ற வழக்கு அண்மைக்காலம் வரை தமிழ்
நாட்டிலில்லை என்பதே சிந்தனை. தமிழ் நாட்டில் வழக்கிறந்துவிட்ட இது, வட இந்தியாவில்
வெற்றி நடை போட்டுவிட்டதோ?
சமஸ்கிருதத்தில் தலித்தா என்றால் அடிமட்டத்தில் வைக்கப்பட்டது, இடத்தில் பொருத்தப்பட்டது என்று பொருள்தருகிறது. என்றாலும் இது சாதி குறிக்காத பொதுச்சொல்.
எனவே தலித்து என்பது இதிலிருந்து பெறப்பட்டுப் பட்டியல் சாதியினரைக்
குறிக்க வழங்கப்பட்டது என்று கொள்வதில் தவறில்லை.
காரணம் தலித்து என்பது தமிழ் நாட்டில் வழக்கிலில்லை. இவர்கள் தமிழரிடை ஆதித்திராவிடரென்றும்
தாழ்த்தப்பட்டோர் என்றும் வழங்கப்பட்டோராவர்.
என்றாலும் தலித்தா என்பது தாழ்த்த(ப்பட்டோர்) என்பதில் உள்ள பதத்தின் முற்பகுதியாகும்.
பட்டோர் என்பது ஒழிய, தாழ்த்த என்பது மட்டும்
வடக்கேறிò தலித்த என்று அரைச்சொல்லாகக் குறுகி வாழ்ந்துகொண்டிருக்கிறது
என்பது அறிந்துகொள்ள ஒன்றும் கடினமில்லாதது ஆகும்.
தமிழே உருவாக நிற்க, சங்கதம் அது காட்டும் கண்ணாடியாய் இலங்குவதில் வியப்பு ஒன்றுமில்லை.
தாழ்த்த (ப்பட்டோர்) > தாழ்த்த > தால்த்த > தலித்த > தலித்து1
(மறுபார்வை செய்யப்படும்.)
---------------------------------
1 A this stage you may refer to a similar development in English, where the Latin omnibus ( = for all ) shortened to -bus and now refers to a large vehicle carrying passengers. -bus is actually a
Latin suffix. In fact it is in a worse position than the word தாழ்த்த,
carrying some meaning, whereas -bus has no appreciable meaning having no connection whatsoever to a vehicle or the passengers travelling in it. What an anomaly! Enjoy the word history.
1 A this stage you may refer to a similar development in English, where the Latin omnibus ( = for all ) shortened to -bus and now refers to a large vehicle carrying passengers. -bus is actually a
Latin suffix. In fact it is in a worse position than the word தாழ்த்த,
carrying some meaning, whereas -bus has no appreciable meaning having no connection whatsoever to a vehicle or the passengers travelling in it. What an anomaly! Enjoy the word history.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.