Pages

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கடவுள் - மூவாசை - மறுபிறவி - பிறப்பறுத்தல்



கடவுள் மனிதனை ஏன் படைத்தார் ?

ஒவ்வொரு மனிதனுக்கும் இதைப்  பற்றிய சிந்தனை எழுவதுண்டு. முன்னரே சமய அறிஞர் எவரும் சொல்லியிருந்த காரணங்களை அறிந்து அவற்றைப் பின்பற்றி நில்லாதவருக்கு, கேள்விக்கான பதில் எளிதாய் இருப்பதில்லை.  இச்சிந்தனையும் நின்றுவிடுவதில்லை.   சமயப் பின்பற்றாளர்கள் தாம் கேட்டறிந்தவற்றையே ஒப்புவித்துவிடுவர். அது எளிதுதான்.

இந்து சமயத்தில் நிலவும் கருத்துப்படி தொடக்கத்தில் கடவுள் மட்டுமே இலங்கினார்.  அவர் ஓர்  அரு:   அரு என்பது எந்த உருவிலும் இல்லாத தன்மை.  உரு என்பதன் எதிர்ச்சொல் அரு.  அவர் ஆணுமில்லை.  பெண்ணுமில்லை. (அவர், அவன், அவள் என்று சுட்டுவது,  நாம் வேறுவழி அறியாமையால்தான்,) (படைத்தவனையே சுட்டுதல் இயலாத ஒன்றாம்)
 பான்மை இல்லாத அரு அவர்.   அவரைப் பெற்றவரும் இல்லை.  வளர்த்தவரும் இல்லை. அப்போது  அவருக்கு நாமறிந்திராத ஒரு காரணத்தினால்,  தம்மிலிருந்து (தன்னிலிருந்து)  பல ஆன்மாக்கள் பிரிந்திடல்  நிகழ்ந்தது. இவை அந்தப் பேரான்மாவுடன் சென்று ஒன்றுபட இயலவில்லை.  அவற்றுக்கு ஒவ்வொன்றுக்கும் ஓர் உடலைத் தந்து  அதன்மூலமாக மேன்மை பெற்றுத் தம்மை வந்து இறுதியில்  அடையும் ஒரு வழியை அவர் உருவாக்கினார். இதன் காரணமாகவே நாமும் இவ்வுலகில் பிறந்து  பிறப்பின் பயனை அடைந்து உடலினின்றும் விடுபட்டு இறுதியில் அவருடன் சென்று இணைகிறோம். அல்லது இணைய முயல்கிறோம்.
பிறந்து உடலை எடுத்த ஒவ்வோர் ஆன்மாவும் அவரை மறந்து உலக நிலைகளில் மூழ்கி வேறுபட்டு நிற்பதால் அவரை நெருங்கிச் செல்ல இயலாமல்  இங்கு யாவரும் உழன்றுகொண்டிருக்கிறோம். இவ்வுலகையும் அதன்கண் உள்ள கவர்ச்சிகளையும்  ஒதுக்கிவிட்டு கடவுள் ஒன்றையே நினைத்து நிற்கவேண்டும். இப்படிச் செய்தால் அவரினின்று பிரிந்திருப்பதற்கான காரணங்கள் அனைத்தும் விலகிவிடும்.

அவரை மட்டுமே நினைத்திருப்பதற்கு மண்ணாசை. பாலியல் ஆசை, பொருளாசை அனைத்தையும் துறக்கவேண்டும். இம் மூவாசைகளின் தலையீட்டினால் நாம் அவரையே நினைத்திருக்க முடிவதில்லை.  பேரான்மாவுக்கும் நமக்குமுள்ள பிரிவு தொடர்ந்து வந்துகொண்டுள்ளது.  ஓர் உயிர்வாழ்க்கையின் முடிவில் வெற்றியின்மையால் மீண்டும் பிறக்கின்றோம். மறுபிறவியானது கடவுளை அடைய அவருடன் ஒன்றுபட இயலாமற் போனதையே எடுத்துக்காட்டுகின்றது. தோல்வி! என்றாலும் ---

முயற்சி திருவினை ஆக்கும்; அஃதின்றேல் மெய்வருத்தக்கூலியாவது தந்திடுமே!

திருட்டு கொள்ளை ஏமாற்று முதலிய வினைகள் அவரை நாம் எண்ணிநிற்கத் தவறியமையையே காட்டுகின்றது.  இவற்றால் மீண்டும் பிறக்க நேர்கின்றது.  எல்லா அழகும் தன்னில் உள்ள கடவுளை மறந்து ஒரு பாலியல் உணர்வில் தோய்ந்திருந்துவிட்டால் அவரை மறந்துவிட்டதனால் மறுபிறவி வந்துவிடுகின்றது. இப்பிறப்பையும் இனிவரும் பிறப்பையும் அறுக்கவேண்டும். ஆசைகளை ஒழிக்கவேண்டும் ன்கிறது இந்து சமயம்.
பேரான்மாவும் ஆன்மாவே.  சிற்றான்மாவும் ஆன்மாவே. இவ்விரண்டுக்கும் வேறுபாடு யாதெனின் பேரான்மா தன்னையும் தான் கடந்துவந்த பல்வேறு நிலைகளையும் உணர்ந்து இலங்குகின்றது.  சிற்றான்மாவோ அவற்றிலெதையும் உணராமல் மூவாசை வாய்ப்பட்டுத் தவிக்கிறது.

எல்லா அழகும் தன்னில் உடையவர் கடவுள். ஆகையால் அவர் முருகன் எனப்படுகிறார்.  செம்மைநிலை மாறாதவர் அவர்.  ஆதலின் சிவம் எனப்படுகிறார். மிகவிரிந்த நிலையினர் அவர்: ஆதாலின் விண்ணு> விஷ்ணு எனப்படுகிறார், அம்மையும் அப்பனும் அவரே. ஆதலின் அம்மையப்பர் எனப்படுகிறார். இவையனைத்தும் ஒரே கடவுளின் பல்வேறு நிலைகளையும் தன்மைகளையும் குறிக்கின்றன.

இவற்றைப் பின்னர் தொடர்வோம். யாமெழுதிய சிவஞான போத உரையையும் படித்து மகிழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.