Pages

திங்கள், 11 செப்டம்பர், 2017

ஒடு ஓடு ஒட்டு ஒட்டுதல் : சொற்பொருள்.



Oo

இப்போது  ஒடு  என்ற சொல்லைப் பற்றி நமது சிந்தனையைச் செலுத்துவோம்..  ஒடு என்றால் உடன்செல்லுதலைக் குறிக்கிறது.  இது தனிச் சொல்லாக வாக்கியத்தில் பயன்படுவதில்லை. ஓடு என்று நீண்டும் ஒலிக்கும் இச்சொல்,  “காற்றொடு மழைத்துளி “  என்பதுபோலும் தொடரில் பிற சொற்களுடன் இணைந்து நின்று பொருள்தருகிறது. இத்தகைய சொற்களை “உருபுகள்”  எங்கிறார்கள், பொருளை வேறுபடுத்திக் காட்டுவதால், ( அதாவது அர்த்தத்தை வேறாக்கிக் காட்டுவதால் ) வேற்றுமை உருபு என்பர் இலக்கணத்தில்.

காற்றொடு என்று  ஒடு என்ற உருவிலும்  காற்றோடு என்று ஓடு என்ற நீள் உருவிலும் இது வரும். இங்கனம் ஒடு- ஓடு உருபுகளாக மட்டும் நிகழ,  அது வினையாக வேண்டுமானால் ஒட்டு (ஓட்டுதல்) என்று வரவேண்டும்.  ஒட்டுதல் என்பதன் பொருள் நீங்கள் அறிந்ததே.  ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்துப் பசை கொண்டோ அஃது இல்லாமலோ வைத்தல்.  கடிதத்தைக் கூட்டில் வைத்து ஒட்டித் தபாலில் போடு என்பதுபோலும் வாக்கியங்களைக் கேட்டிருக்கலாம்.

ஒட்டு என்பது “எல்லாம்” என்றும் பொருள்தரும்.  இது மலையாளத்தில் இன்னும் வழக்கில் உள்ளது.  “கேரளம் ஒட்டுக்கும் கிட்டுஇல்லா”  என்ற மலையாளவாக்கியத்தில் கேரளம் எல்லா இடங்களிலும் என்று பொருள்தரும்.

துணி எங்காவது கொஞ்சம் கிழிந்துவிட்டால் எறிந்துவிடாமல் ஒட்டுப்போடும் பழக்கம் ஒருகாலத்தில் இருந்தது.  தையல் எந்திரத்தால் திறமையாக ஒட்டுப்போடுகிறவர்கள் இருந்தனர். இரண்டு மலேசிய வெள்ளிக்கு  ஓர் அழகான ஒட்டுப்போடும் ஒரு சீனரை மலேசியாவின் சிலிம்ரிவர் பட்டணத்தில் சந்திக்க நேர்ந்தது.  அவருடைய பிள்ளைகள் எல்லாம் படித்துப் பெரிய பதவிகளில் அமர்ந்தபின், இந்தவேலையை விட்டுவிடும்படி வற்புறுத்தியதாகவும், தாம் இறந்தபின் யார் இவ்வேலையைத் தொடரப்போகிறார்கள் என்றும் என்னிடம் சொல்லிக் கவலைபட்டார். இது தொண்ணூறுகளில் நடந்த நிகழ்ச்சியாதலின், அப்போதே எழுபதுக்கு மேலாகிய அவர் இப்போது போயிருப்பார்.  சில ஆண்டுகளின்முன் அங்கு சென்றகாலை அவர் கடை அங்கு காணப்படவில்லை. ஓட்டுப்போடும் கலை ஒழிந்துவிட்ட்து.

ஒட்டுக்கடைகளும் இப்போது குறைந்துவருகின்றன. அவற்றுக்குப் பதிலாக ஒட்டாக இல்லாமல் தனிக்கூரைகளுடன் கூடிய நிலைக்கடைகள் பல இடங்களில் இயங்குகின்றன. சிறுதொழில் செய்து பிழைப்போருக்கு ஒரு வழி வேண்டுமே!

உடலும் தோலும் ஒட்டிக்காணப்படும் விலங்கு ஒட்டகம் எனப்படுகிறது.  ஒட்டு என்ற சொல்லுக்கு இதுவும் வலிமைசேர்க்கும் அமைப்பே ஆகும். குதித்துக் குதித்தோடுவது குதிரை ஆனதுபோல உடல் ஒட்டிய விலங்கு ஒட்டகம்,  இது தமிழன்றிப் பிறிதில்லை என்பதறிக.  “கேமல்” என்பது அதற்கான ஆங்கிலம் ஆகும்.

(எழுத்துப் பிழை திருத்தம் - கவனிக்கப்படும்).


 குறிப்பு:


தபால் -   தன்பால் கொணரப்படுவதால் த-பால் ஆனது. காரண இடுகுறியாதலால் பிறர்பால் செல்வதும் அதுவே. பிறனும் ஒரு “தான்- தன் “  என்பதில் அடக்கம்.  செய்தியைத் தந்திடுவது தந்தி.   இது தந்து என்ற எச்ச வினையினின்று புனைவுற்ற சொல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.