Pages

சனி, 30 செப்டம்பர், 2017

ஒன்று ஒண்ணு ஒருத்தன் ஒருத்தி - ஆய்வு செய்க



ஒன்றும் ஒண்ணும்.

தலைப்பிலுள்ள இரண்டு சொற்களையும் எண்ணுப் பெயர்கள் என்பர். ஒரே எண்ணின் இரண்டு வடிவங்கள். ஒன்று என்பது எழுத்துமொழியினுடைய வடிவம்; ஒண்ணு என்பது பேச்சு மொழியில் மட்டும் இயல்வது, இரண்டிலும் ஒன்று என்பதே உயர்வான வடிவம் என்பர். அது கற்றோனின் வடிவம்,
ஒலியில் உயர்வான ஒலி, தாழ்வான ஒலி என்பது எதுவுமில்லை. எல்லாமும் மனிதனின் நாவொலிகள் தாம். இவைமட்டுமல்ல, மனிதனால் பலுக்கப்படும் எல்லா ஒலிகளிலும் உயர்வு தாழ்வு என்பதொன்றுமில்லை. உயர்வு தாழ்வு எல்லாம் மனிதனின் காரணமற்ற சிந்தனைகள்>
பேச்சு மொழியே உயிர்மொழியாகும். என்னைப்பொறுத்தமட்டில் நான் எழுத்துமொழியை அறிந்துகொண்டதற்குப் பேச்சுமொழியே காரணமானது. 

இன்று தமிழ் உயிர்மொழியாய் இருப்பதற்கும் அதைப் பலர் பேசுவதே காரணம்.
பாஷை என்பதும் பேசு என்ற சொல்லினின்று வந்ததே. பேசு >  பேசை > பாசை > பாஷை. என வந்ததைத் தமிழறிஞர்  கசுட்டியுள்ளனர். எனவே பேச்சே அடிப்படை அல்லது மூலாதாரம் ஆகும்.
என்றாலும் எழுத்துமொழி வடிவங்களும் போற்றற்குரியனவே ஆகும். நம் முன்னோர்தம் கருத்துக்கள் அனைத்தும் எழுத்துமொழியிலே உள்ளன. இன்றும் நாம் அவற்றை அறிந்து இன்புறுகின்றோம்.
இப்போது விடயத்திற்கு வருவோம். விடுக்க வந்த செய்தியே விடயம்:  விடு > விடை > விடையம் > விடயம். விடுத்தலாவது வெளியிடுதல்.
ஒன்று என்பதில் ஒன்+ து என்னும் இரண்டு துண்டுகள் உள்ளன. ஒன் என்பதே சொல். து என்பது ஒரு விகுதி அல்லது சேர்க்கைச்சொல். விகுதி யாதெனின் மிகுதி.  அறிந்து போற்றுதற்குரிய பொருண்மை எதுவும் அதிலில்லை. எழுத்துவடிவமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல், து ஒட்டிய ஒன் என்பது. நம் முன்னோர் ஏற்றுக்கொண்ட வடிவம். அவ்வளவுதான்;  அதை மதிக்கிறோம்,
து என்பது அஃறிணைப்பொருள் உணர்த்தும் ஒட்டுச்சொல்லாக வருகிறது. ஒன் என்ற அடிச்சொல் உயர்திணைப் பொருள் ஏற்பதில்லை, அதாவது ஒன்+ அன் = ஒன்னன் என்று வரவில்லை. மொழியில் அந்த வடிவமில்லை. ஒன் என்பது ஒர் என்று மாறிப் பின் ஒரு என்ற உகரச் சாரியை பெற்று அதன்பின் வகர உடம்படு மெய் பெற்று அப்புறம்தானே அன் என்ற ஆண்பால் வடிவ விகுதியை அடைகிறது? ஆகவே ஒன் என்பதில் து இல்லாமல் போய்விட்டாலும் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது. து என்பது இல்லாவிட்டாலும் பொருளால் அஃறிணைதானே!   உயர்திணை ஆகிவிடக்கூடிய அபாயம் எதுவும் அதிலில்லை.
எனவே பேச்சு மொழியில் ஒன் என்ற அடிச்சொல் உகரச் சாரியை மட்டும் பெற்று ஒன்னு அல்லது ஒண்ணு என்று வருகிறது.  இது ஒற்றாக –னகரம் வரினும்  -ணகரம் வரினும் ஒன்றுதான். பேச்சில் இந்த வேறுபாடும் ஒன்றும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

ஒருத்தன்,  ஒருத்தி
ஒருத்தன் என்ற சொல்லில் அஃறிணை விகுதியாகிய து வருகிறது.  இப்படிக் கூறினால் திணை மயங்கிய குற்றம் ஏற்படுமாதலால் வேறுவிதமாக து என்ற இடைநிலை வந்துள்ளது என்னலாம். ஒருத்தன் என்ற சொல்லில் த் என்ற ஒற்று மட்டுமே இருக்கிறது. உகரம் தொலைந்தது. த்+ உ என்பதன்றோ து. ஆகவே இடைநிலையாவது து அன்று, த் என்ற ஒற்றுதான் என்னலாம். இலக்கணப்புலவர்களே, மொழியைக் குற்றப்படுத்தாமல் உள்ள எந்த விளக்கமானாலும் ஏற்புடையதுதான். ஒருத்தன் என்பதில் து என்ற அஃறிணை உள்ளது என்று சொன்னால் அப்புறம் இலக்கணம் கொச்சையாகிவிடும். ஒருத்தி என்ற வடிவமும் அத்தகையதே.

இடக்கரான இடங்களை அடக்கிவிடவேண்டியது நம் கடமை.
ஒருத்தன் ஒருத்தி என்பவை ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவங்களாதலாலும் அவை உயர்திணை ஆதலாலும் அஃறிணை நுழைந்துவிட்டதாக இலக்கணம் சொல்லாமல் இயையுமாறு உரைப்பது கடமையாகும்.

ஒன்று என்பதில் று வருவது புணர்ச்சியினால்; அது வேகா நிலையில் ஒன்-து, வெந்த நிலையில் ஒன்று. அவ்வளவே.

இதுகாறும் கூறியவாற்றால் ஒன்னு என்பதற்கும் ஒன்று என்பதற்கும் உயர்வுமில்லை தாழ்வுமில்லை என்பது முடிவு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.