Pages

சனி, 2 செப்டம்பர், 2017

சாமானியம் என்னும் சொல்



சாமானியம்,  சாமானியர்.

மானுதல் என்பதன் பொருள்  ஒத்தல், மானல் (மான் + அல்) ஆகியவை.
ஒத்தல் என்பது ஒரு பொருளாதலின்,  இச்சொல் (எச்ச நிலையில்) ஓர் உவம உருபாக பண்டை இலக்கணங்களில் சொல்லப்பட்டுள்ளது.   இங்ஙனம்  வருங்கால்  இதற்குப் “போல”  என்பது பொருளாம்.
சாமானியம் என்ற சொல்லை ஆய்கையில், இப்பொருளே உதவுவதால் மானுதல் என்பதன் மற்ற பரிமாணங்களை இங்கு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியதில்லை.
பண்டைக் காலத்தில் மனிதன் அவனுடைய செல்வச் செழிப்பையும் தொழிலையும் பொருத்தியே மதிக்கப்பட்டன். அவன் பயன்படுத்திய நெல், ஏனை உணவுப்பொருள்கள்(தானியங்கள்), மாடு கன்று என்பன அவற்றுட் சில.  அப்போதெல்லாம் செல்வம் உடையவன்   அஃது இல்லாரை மதிக்கவில்லை. ( இப்போதும் இல்லை, கவலை வேண்டாம்).  இதை மாற்ற அக்காலத்து அறிஞர்  பிறருக்குத் தருதல் (தருமம்)  உயர்ந்ததென்றும் வானவர் உலகு வழிதிறந்திடும் என்றும் போதித்துப் பார்த்தனர். ஆனால் அவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை அக்கால முழுவதும் அடைந்தார்களில்லை.  சில வேளைகளில் அவர்கள் கூறியது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ஏனைக் காலங்களில் மக்கள் அப் போதனை  போற்றவில்லை.  குமுகப் படிநிலைகள் (social stratification)  இவ் வுயரிய கருத்துக்களைக் கடைப்பிடியாமையினால் உருவாகின .
ஆகவே நன்மையும் தீமையும் ஒருங்கு தொடர்ந்தன.
பணமில்லாதவன் பிணம் என்ற பழமொழி  எழுந்தது.
ஒரு பாடல் இப்படி வருகிறது:
உள்ளபடி செல்வம் இல்லாதவரே
உலகினிலே இருப்பதும் தவறே;
கல்லார் எனினும் காசுள்ளவரைக்
காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?

ஒரு பழமொழி:

பணம் பந்தியிலே, குலம் குப்பையிலே.
 
உயிர்வாழ்க்கைக்கு ஆதாரம்   செல்வம். ஏழ்மை நடைப்பிணம் ஆக்கிவிடும்.
சாமானியர் என்றால் செத்தவரை ஒத்தவர் என்பது பொருள்.   மானியர் = ஒத்தவர்.  சா = சாவு, ஆகுபெயர் போல செத்தவனைக் குறிக்கிறது.
செல்வம் இல்லாதவன், செத்தவனை ஒத்தவன்.  சாமானியன்.   சாவை மானுகின்றவன்.  செத்தானை ஒத்து வீழ்ந்தவன்.  ஓர் கொடிய நிலையைக் காட்டும் இச்சொல்லைத் தமிழ்ச்சங்கம் போன்ற பண்டை அமைப்புகள் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டா.  எனினும் வறுமையின் கொடுமையைக் காட்டும் பல பாடல்கள் தமிழிலக்கியத்தில் உண்டு.   வறியோர்க்கு உணவளிக்க மணிமேகலை அட்சய பாத்திரம் ஏந்தினாள்.  கோவலன் கொலையுண்டதற்கும்  அவன் செல்வமிழந்தமையே காரணம்.  பொதுவுடைமைக் கருத்துகள் மார்க்சிடம் ( Karl Marx) எழுந்தமைக்கும் வறுமையே காரணம்.  இந்தச் சாமானியச் சொல் புனையப்பட்டதற்கும் வறுமையே காரணம்.  வறியோரைச் செத்தாரை ஒத்தார் என்*கிறது சொல்.  இதற்கு வேறு பொருள் கூறினால்  அது ஓர் இடக்கர் அடக்கல் இரகமே ஆகும்.

 Note (official use).

To edit.  Beware of auto-correct generated errors and redundant dots. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.