Pages

புதன், 2 ஆகஸ்ட், 2017

"இலேசு"

"இலேசு"

இன்று "இலேசு" என்ற சொல்லைச் சிந்திப்போம்.

இது பெரும்பாலும் "லேசு" என்றே வழங்கிவருகிறது. இது "லேஸ்" என்ற ஆங்கிலச் சொல்லுடன் ஒலியொருமை உடையதாயினும்  இரண்டிற்கும் பொருள் வேறுபாடு உள்ளது.

பெரும்பாலோர் இச்சொல்லின் முன்னிற்கும் இகரம், லகர வருக்கத்தில்  சொல் தொடங்கலாகாது என்ற இலக்கணவிதி காரணமாகவே  இகரம் எழுதப்படுகிறது
என்று எண்ணுவர்.

இதனை இல்+ஏ + சு என்று பிரிக்கவேண்டும்.  இல் = இல்லை என்பது.
ஏ = ஏற்றம், உயர்ச்சி என்று பொருள்படுவது.  சு என்பது ஓர் விகுதி.  மனசு, புதுசு, காசு, ஆசு  என்பனபோலும் பலசொற்களில் இது வரும்.  கா > காசு
என்பதில் காத்தலுக்குரியது என்னும் பொருளில் சொல் அமைகிறது.  ஆதல் என்பதினின்று வருவது ஆசு (பற்றுக்கோடு ). மனசு, புதுசு என்பவற்றில்
சு விகுதியாகவோ அல்லது து என்பதன் திரிபாகவோ கருதப்படலாம்.
எனவே, இலேசு என்பதில் சு என்பது விகுதியாகும்.

கனம் என்பது பளு என்ற பொருளிலும், மதிப்பு என்ற பொருளிலும் வருவதுபோலவே, ஏ = உயர்ச்சி என்பது மதிப்பு என்றும் பளு என்றும்
பொருள்தரும்.  அதிக மண் உள்ள மேடுகள்  ஏ = ஏற்றம், ஏற்றமான இடங்கள்
என்று அறியப்படும். ஏற்றம் தரும்பொருள் உள்ளீடு , பளுவுடையது என்பது
உணரப்படும். மே (மேல்) என்னும் இடப்பெயரும் மேடு என்று ஏற்றமான இடத்தைக் குறிக்கச் சொல்லாய் அமைதல் அறிக. கனப்பொருள் அடைவு
இன்றி ஏற்றம், மேடு என்பன இரா.

எனவே, இல்+ஏ+சு என்பது, கனம் இல்லாதது, ஏற்றம் இல்லாதது என்று
பொருள்படுகிறது. அவரை இலேசாக நினைக்கக்கூடாது எனும்போது, கனம் அல்லது மதிப்பு என்பது சுட்டப்பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.