அரசன் ஒரு தனியன். ஆட்சிக்கு வந்தபின் அவனுக்கும் மக்களில் சிறந்து நிற்பவர்களின் துணை தேவைப்படும். தனியனாய் இருந்து ஆளுதல் இயலாத காரியம். ஒத்துழைப்போரின் உதவிக்கைகள் அவனை வலிமை பெறச்செய்பவை.
தனக்கு உதவுவோருக்கு அவன் நிலம் வழங்கலாம். வழங்கிய நிலம்
கொடையாகவோ மானியமாகவோ வழங்கப்படலாம். மா என்பது அளவு என்று பொருள்படும். நியம் என்பது: நில் > நி என்பது கடைக்குறை.
அம் என்பது விகுதி. மா+ நி + அம் = மானியம். அளவாகத் தரப்படுவது.
இப்படித் தந்த நிலம் பெற்றுக்கொண்டவருக்கும் அவர்தம் பின்னோருக்கும்
என்றும் முழு உரிமையாக வழங்கப்படுவதுண்டு.
அவன் தந்த நிலங்கள் பெரும்பாலும் என்றென்றும் உரிமைப்பொருள் ஆதல்
போலவே அவன் பட்டம் பதவிகளும் வழங்கினான். எல்லோருக்கும் நிலம்
வழங்குவது இயலாமையால், வேறு வழிகளைக் கையாள நேர்வது இயற்கை. இப்படி அவன் வழங்கிய பட்டம் பதவிகளும் பெற்றுக்கொண்டவனின் பின்னோருக்கும் நிலத்தைப்போலவே உரிமையாகும்படி வழங்கினான். அப்போதுதான் அவை நிலக்கொடைக்கு ஈடாக நிற்கமுடியும். ஆகவே பெறுகிறவனுக்கு "மன் துணை" என்ற பட்டம் தரப்பட்டால், அவனின் பின்னோரும் அதே பட்டத்தை அணிந்துகொள்ள
இயலுமாறு வழிவகைகள் செய்யப்பட்டன.
இப்போது மன்னர் ஆட்சி போய்விட்டது.இப்போதைய அரசுகள் இங்ஙனம் பரம்பரையாகப் பட்டங்களையும் பதவிகளையும் வழங்குவதில்லை. இவை மக்களாட்சி முறைக்கு ஒத்து வராதவை. ஒவ்வொரு மனிதனும் தன் அப்பன் பெற்றதையே வைத்து அழகு பார்த்துக்கொண்டிராமல் தானே முயன்று தனக்குரிய நிலையை அடையவேண்டும் என்று மக்களாட்சி முறை விரும்புகிறது. எனினும் மக்களாட்சி முறைக்கு எதிரான நிலையில், இன்று புண்ணியமில்லாத பட்டம் பதவிகளின் பெயர்கள் மட்டும் அலங்காரப் பொருள்கள்போல் பலராலும் பல நாடுகளிலும் அணியப்பெற்று நிற்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் சில நாடுகளில் மிகக் குறைந்துவிடினும், வேறு சில நாடுகளில்
இன்னும் முன்னணியில் உள்ளன.
அரபு வணிகர்களிடம் எழுத்தர்களாகவும் மேல்பார்வையாளர்களாகவும்
வேலைபார்த்தவர் மேனோன் அல்லது மேனன் எனப்பட்டார். இது
மேலோன் என்பதன் திரிபு. அரபு வணிகர்களும் இந்த வேலைகளைச்
சேவைக் குடும்பங்களுக்கே வழங்கிவந்தனர். இக்குடும்பங்கள் சிறிது கலப்பும் அடைந்து அகமண முறைகளை மேற்கொண்டு, ஒரு சாதியாயினர். இப்போது இது ஒரு சாதிப்பட்டம். அரபு வணிகர்களிடம்
ஊழியம் பார்த்த முன் வரலாறு மறக்கப்பட்டுவிட்ட நிலையில், அதைப்
போட்டுக்கொள்வது ஒரு மேன்மை எண்ணத்தைத் தருவதாக இருக்கிறது.
மற்ற நாடுகளில் சாதிகள் இல்லையாகையால், இது போன்ற பெயர்கள்
குடும்பப் பெயர்களாகப் பயன்படுகின்றன. சாதிப்பெயராக உள்ளதைக் குடும்பப் பெயராகப் பயன்படுத்தக்கூடாது என்ற மறுப்பும் உள்ளது.
இன்று படைத்தலைவராக உள்ளவரின் மகன் அப்பன் பதவிப் பெயரைத் தான் அணிந்துகொள்வதைப் பிறர் ஏற்பதில்லை.
to edit.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.