Pages

புதன், 24 ஆகஸ்ட், 2016

துங்கமும் குலோத்துங்கனும்.

தமிழ் மொழியில் மிகப் பழங்காலத்திலேயே சொற்களைச் சுருக்கிபும் விரித்தும் பயன்படுத்தும் முறைகளைக் கையாண்டுள்ளனர். இல்லாத என்பதை இலாத என்று சுருக்குவதைக் காணலாம். இல்லான் அடி சேர்ந்தார்க்கு என்பதை இலான் அடி சேர்ந்தார்க்கு என்று குறள் கையாளுதல் நீங்கள் அறிந்ததாகும். ஆனால் பொருள் கெட்டுவிடாதபடி சுருக்கவேண்டும். வெற்றி என்பதை வெறி என்று சுருக்கினால் பொருள் கெடுதலால் அங்ஙனம் செய்யார் புலவர். நீட்டம் தேவைப்படும்போது சொற்கள் கூட்டி எழுதப்பட்டன. தழுவிய என்பதைத் தழீஇய என்று நீட்டி இதை அளபெடை என்பர். தொழார் என்பதைத் தொழாஅர் என்பர். செய்யுட்களைப் படிக்கையில் இவற்றை நீங்கள் கவனித்துக்கொள்ளலாம்.

ஆனால் இத்தகு தந்திரங்களைச் செய்யுட்கு மட்டுமின்றிச் சொல்லாக்கத்துக்கும் பயன்படுத்தித் தமிழ்ச் சொற்களை வேறுமொழிகட்குப் பயன்ப‌டுத்திய சிறந்த நல்லறிவும் சில அறிஞர்கட்கு இருந்தது. அப்படிப் பயன்பாடு கண்டவற்றுள் துங்கம் என்ற சொல் குறிப்பிடத்தககது ஆகும்.



துலங்குதல் என்பது இன்றும் வழக்கிலுள்ள சொல் ஆகும். இதன் அடிப்படைக் கருத்து ஒளிவீசுதல் என்பது. இதல் மூலம் துல் என்பதாகும்.

துலங்கு என்பதைப் பெயர்ச்சொல் ஆக்க ஓர் அம் விகுதி சேர்க்கவேண்டும்.
துலக்கம் என்று வரும். அப்படி வல்லோசை தழுவாமல், துலங்கம் என்றே வைத்துக்கொண்டு, இடையில் வரும் லகரத்தை விலக்கிவிட வேண்டும்.
அம் என்ற இறுதியையும் குறுக்கவேண்டும். இதைச் செய்தால், துங்க‌
என்பது கிடைக்கிறது. துலங்கம் > துங்க. அல்லது துலங்க என்ற எச்சத்திலிருந்து ஒரு லகரம் நீக்கித் துங்க என்பதை வந்தடையலாம். பிற மொழிகளில் எச்ச வினைகளிலிருந்தும் சொல் உருவாகும். பாலி மொழியிலும் இங்ஙனம் செய்தல் உண்டு.


துங்க என்ற சொல் மேன்மை குறிப்பது. குலோத்துங்க சோழன் பெயரில்
துங்க(ம்) வருகிறது. சிங்கள மொழியிலும் இது பயின்று வழங்குவது
ஆகும்.

துங்க பத்திரை நதியின் தீரத்தில் நீங்கள் உலவிக்கொண்டிருக்கும் போதும் துங்கத்தை நீங்கள் சிந்திக்கலாமே!

குலோத்துங்கன் என்றால் குலத்தில் துலங்குபவன் என்பது பொருள். அதாவது குலத்துலங்கன். லகரம் நீக்க, குலத்துங்கன்; வடமொழிச் சந்தியைப் பற்றினால் குலோத்துங்கன்.


துலங்கு (தன்வினை) > துலக்கு (பிறவினை).
துலக்கு + அம் = துலக்கம்.
துலங்க > துங்க > துங்கம்

துங்கமும் குலோத்துங்கனும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.