Pages

செவ்வாய், 5 ஜூலை, 2016

காங்கேயன்

 இப்போதெல்லாம் சிங்கப்பூர் மலேசியா வெங்கும் ஒரே காங்கையாக இருக்கிறது.  அதைத் தணித்துக் கொள்வதற்கு  என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.  குளிர்ந்த நீரை அருந்துவது ஒன்றே நான் அறிந்தவழியாகும். நிலக்கோள் வெப்பமடைந்துவிட்டது என்று அறிவியலார் சொல்வர்.

நாம் வழிபடும் தெய்வங்களிற் சில, நீருடன் இயைந்தவை.  எடுத்துக்காட்டாக விஷ்ணு,  கடல், காயம் ( ஆகாயம் )  ஆகியவை
இயைபாகக் கூறப்படும். " இங்கு வாராயோ என் கண்ணனே, மேக நீல\வண்ணனே, ஒய் ரம்பனே"   என்ற பாடல் இனிமையானதுதான். வேறு சில தெய்வங்கள் வெப்பம், எரிதல், தீ, காங்கை என்பவற்றுடன் இயைந்தவாகக் கூறப்படும். கண்ணன் அல்லது விஷ்ணு நீரின் அமைப்பு அல்லது அம்சம்  ஆனதுபோல இவை எரியின்   அம்சம் அல்லது அமைப்பு.

விஷ்ணு என்பது விண்ணு என்பதன் திரிபு. இதைப் பழைய இடுகைகளிற் காணலாம்.  அழிக்கப்பட்டனவா என்பது தெரியவில்லை.

முருகன் அல்லது அழகு எப்போதும் தீயினுடன் தொடர்புறுத்தப்படுவது.  தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுவது.ஒளவை இத்தெய்வத்தை " எரிதவழ் வேலோய்" என்று விளித்துப் பாடுவதிலிருந்து இதை அறிந்துகொள்ளுதல் எளிதே ஆகும்.

இவற்குக்  காங்கேயன் என்பதும் பெயராகும்.  காங்கை என்பது எரித் தொடர்பினது. காங்கை ஏயவன் காங்கேயன். இனிய தமிழ்ப் பெயர். ஏய்தல் என்பது இயைதல். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விப்பவள்  என் அம்மை. ஆய என்பதற்கு ஏய என்பது எதுகை ஆதலால்  அது அழியாமல் தப்பித்த சொல். ஏய என்பதை உங்கள் எழுத்துக்களில் பயன்படுத்துங்கள். அப்போதுதான் தமிழ்ச் சொற்கள் மறையாமல் நம்மிடை இருக்கும். இன்னொரு தமிழச்சியிடம்  ரொம்ப பனாஸாக இருக்கிறது என்னாமல், காங்கையாக இருக்கிறது என்க. மலாய்க்காரப் பெண்ணிடம் பேசுங்கால்  மலாய் பயன்படுத்தவும்.பனாஸ் = சூடு, காங்கை.

வேய்ந்தன் என்பது வேந்தன் என்று திரிந்ததுபோல்,  அதாவது ஒரு யகர ஒற்று மறைபட்டது போல,  காய்ங்கை என்பது காங்கை ஆயிற்று. சில மாற்றங்கள் நிகழ்ந்ததனால் சிறுவன் பெரியவனாதல் போல, சில எழுத்துத் திரிபுகள் வேண்டும்.  அவற்றைப் போற்றுவோம். சொற்கள் தனித்தன்மை பெற, புதிய சொன்னீர்மை பெற இத்தகைய திரிபுகள் இன்றியமையாதவை என்றுகூடச்  சொல்லலாம். திரிபுகள் கருத்தில் வளரும் மனத்தடைகளை விலக்குபவை.  ஆனால் அதற்காக எல்லாவற்றையும் திரித்துச் சொல்லவேண்டும் என்பது பொருளன்று. பாய்ம்பு என்பது பாம்பு என்று மாறாவிட்டால், பாய், பாய்தல், பாய்‍‍ தலையணை எல்லாம் நினைவுக்கு வந்து கருத்துக்கு ஒரு மனத்தடையை உண்டாக்கும். தொடர்பற்றவைகளும் தோன்றி வருத்தும். நகைச்சுவை முகிழ்க்கலாம். ஆகவே திரிபுகள் வரவேற்கத்தக்கவை. மோர்மிளகாய் போல. வேண்டிய வேண்டியாங்கு ஏற்பது அறிஞர் கடன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.