இது கீழ் வரும் இடுகைகளின் தொடர்ச்சி:
https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_6.html
https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_11.html
https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_46.html
பாடிய புலவர், இந்தக் குறுந்தொகை அகப்பொருட் பாட்டில் என்ன சொல்கின்றார் எனில், தெளிவாக ஒரே ஒரு கேள்வியை மட்டுமே தோழி வாயிலாக விடுக்கின்றார். அந்தக் கேள்வி நாடன் நம்மை விட்டு அமையுமோ என்பதுதான். அதாவது தலைவன் நம்மை விட்டு நீங்கிவிடுவானோ என்பதுதான். நீங்கான் என்பது எப்படிச் சொல்வது ?
பாட்டில் உள்ள மற்ற யாவும் விலங்குகள் பற்றிய செய்தியும் முகில் பற்றியதும் ஆகும். இயற்கையை மட்டும் அழகு வரணனை செய்த பாட்டுகள் சங்க இலக்கியத்தில் இல்லை. இயற்கை எப்போதும் அகம் புறம் என்று வகைப்படும் செய்திகளில் பின்புலமாகவே நிற்கும்.
ஒரு கேள்வியே பாட்டில் உள்ள படியால் வேறெதுவும் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. கேள்வியும் பதிலை உள்ளடக்கியதாகத் தெரியவில்லை/ .
பாட்டின் கேள்வி எப்போது நிகழ்கிறதென்றால், வடக்கு தந்த வாடையும் முகிலும் தெற்கு நோக்கி வந்து தண்மை செய்யும் பனி தொடங்கிவிட்ட காலத்திலேதான்.
வடக்கு வாடை வந்து சேர்ந்துவிட்டது, பிரிந்து அயற் புலம்
சென்றுவிட்ட தலைவன். திரும்பிவிடுவானென்பதை நன்கு குறிப்பால் உணர்த்துகின்றது. திரும்பாமல் அங்கேயே இருந்துவிடுதல் கூடுமா என்ன:? பனியோ வந்து படர்ந்துவிட்டது, முகில் வந்து மேலூர்கிறது. அவன் வந்துவிடாமல் அமைதல் இயலுமோ:?
பெண்மரையை நீங்கிப் போய் நெல்லிக்கனியை மேய்ந்து பசியாறிய காட்சி போன இடத்தில் சம்பாதிக்க வேண்டியதைச் சம்பாதித்து விட்டனன், மீண்டு வருவன் என்பதைத் தோற்றுவிக்கிறது. குடல் நிறைவும் மன நிறைவும் அடைந்த நிலையில் மரை ஏறு பெண்ணிடத்துத் திரும்பிவிடும். மீண்டும் இரு மரைகளும் ஒன்று சேரும்/ அதுவே இன்ப நாளாகும். உள்ளம் இன்னிசையில் மயக்குறும் என்பது குறிப்பால் உணர்த்தப் படுகின்றது.
ஓங்குமலை ஊற்று ஓடையில் நீர் அருந்தி விடாய் தீர்ந்த நாடன் அல்லனோ அவன். அந்த ஊற்றின் தண்மையையும் பசுமையையும் அது அவனுடலுக்குத் தரும் தெம்பையும் அவன் மறந்துபோதல் எங்ஙனம்? மீண்டு வந்து அஃது அவனருந்துவன் என்கிறது பாட்டு - குறிப்பினால்.
சொல்லாமலே எல்லாம் சொல்லிவிட்ட நல்லிசைப் புலவனின் பாட்டு இது.
இயற்கையையே சித்திரமாக்கி, எழுப்பிய கேள்விக்குப் பதிலையும் அதனுள் வைத்துத்] தந்த இன்னிசையாளன் அவன்.
தலைவிக்குத் தோழி கூறுவதாய் அமைந்த இந்தப் பாடலைப் பல முறை படிக்கவேண்டும். அதனழகும் பொருளும் அப்போதுதான் தெளிவாகும்..
பயில் தொறும் நூல் நயம் போலும் ........என்றான் வள்ளுவன்.
குறுந் : கேள்விக்கென்ன பதில்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.