Pages

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

அத்தான் வருவாக ! என்ற தோழி

காதலர் வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள்  (நிமித்தங்கள்)  சில அவளுக்குத் தோன்றுகின்றன. இவற்றைக் கண்டு அவள் ஆற்றாதவள் ஆகின்றாள். இவற்றின் பொருள்  அவள்  அறியவில்லையோ ?:

என்ன இந்த நிமித்தங்கள்?  குருகுகள் உயரப் பறக்கின்ற‌ன.  மலர்களில் வண்டுகள் ஊதி இசை பரப்புகின்றன.  அவள் தோள்களோ சற்றுத் தடித்துவிடுகின்றன. இவற்றைக் கண்டு  இவற்றின் பொருளையும்  கண்டுகொண்ட  தோழி, கவல்கின்ற தலைமகளுக்குத்  தேறுதல் கூறுகின்றாள்.

இவை கூறும் கல்லாடனாரின் குறுந்தொகைப் பாடலை (260(  பாடி
மகிழ்வோமா?

குருகும் இருவிசும்பு இவரும் புதலும்
வரிவண்டு ஊத  வாய் நெகிழ்ந்தனவே!
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் !  வாழி தோழி பொருவார்
மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண்தேர்த் தொண்டையர்  வழையம லடுக்கத்து
கன்றில் ஓர் ஆ விலங்கிய
புன்றாள் ஓமைய சுரனிறந்  தோரே.


குருகும் இருவிசும்பு இவரும் --  நாரைகளும் அகன்ற வானில் உயரப் பறக்கின்றன.

புதலும் வரிவண்டு ஊத  வாய் நெகிழ்ந்தனவே!  ‍   அரும்புகளும் வரிகளையுடைய வண்டுகள் வந்து இசைக்க,
அவிழ்ந்து மலராயின;

சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும் :   (உன்)  சங்கு வளையல்களால் அழகு பெற்ற கைகளை யுடைய தோள்களும்
பூரித்துவிட்டன;

பொருவார் மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை :  தோற்ற பகைவர்
நிலங்களின் விளைச்சலை எடுத்து உணவு கொள்ளும் உயர்ந்த‌
யானையும்;

வண்தேர்த் தொண்டையர்  :  வண்மை பொருந்திய தேரும் உடைய‌
தொண்டைமான்களின்;

வழையம லடுக்கத்து : சுரபுன்னைகள் மிகுந்த மலைத்தொடரில்;

கன்றில் ஓர் ஆ விலங்கிய :  ஒரு "மலட்டு" ( அதாவது இன்னும்கன்று ஈனாத ) ஆனை  அங்குத்  தங்கிவிடச் செய்த  ;

புன் தாள் ஓமைய சுரன் இறந் தோரே.  ‍ புன்மையான அடிகளை உடைய ஓமை மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் உள்ள  பாலையைக் கடந்து சென்ற உன் தலைவர் ( காதலர் ).

வருவர்கொல் ‍  :  அவர் வந்துவிடுவார்! நீ வருந்தாதே!

என்று தேற்றிய தோழியைத்  தலைமகள் வாழ்த்துகிறாள் :  வாழி தோழி ! 

இதனைக் கொஞ்சம் விரிவாக அடுத்துக் காண்போம் .http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_9.html

தொடர்ச்சி :

நிமித்தங்கள்

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_9.html

கல்லாடனார் குறிக்கும் மரங்கள்

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_81.html

தொண்டைமான்களின் அரசின் சிறப்பு.

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_91.html


http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_13.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.