Pages

புதன், 6 ஜனவரி, 2016

அணிகுண்டும் தனித் திறனும்.

அணிகுண்டு  என்பதை நீங்கள் கேள்விப் பட்டிருக்கமாட்டீர்கள்.  குண்டு என்பது வெடிக்கும் ஆதலால்  அணிதற்கு உரித்தானதன்று .  ஆயினும்  தீவிர வாதிகள் எனப்படுவோர் அணிந்துகொண்டு  அடுத்த நாட்டிற்கோ அல்லது பிற இடத்துக்கோ சென்று குண்டை வெடிக்கச் செய்வதனால்  அதை  அணிகுண்டு என்று சொல்லலாம்.   அணுகுண்டு போடும் சண்டைக்குப் பதிலாக  அணிகுண்டு கொண்டு செல்லும் போர்த் தந்திரம் இக்காலத்தில் நடப்பில் அதிகரித்து வருகின்றது.   .அறிவுடையோர்  கவலைப்படுதற்குரியது   இதுவாகும் .   குண்டு புழங்குவோர் சிலர் இதுபோது  உலகப்புகழ்  எய்திவிட்டனர். நடிப்பினால் புகழ் பெற்றோரை விஞ்சி விட்டனர் வெடிப்பினால் புகழ் பெற்ற ஒசாமா போன்றவர்கள்.

உடம்பில் கட்டிக்கொள்ளும் குண்டுக்குத்   தமிழில் வேறு பெயர்களும் வைப்பதற்கு நல்ல வசதிகள் மொழியில் உள்ளன .  உடுகுண்டு; வேய்குண்டு ;
புனைகுண்டு ;  கட்டுக்குண்டு ;  செருகு குண்டு ;  இடுப்புக்குண்டு; இடுபடை  என்றெல்லாம் சிந்தித்து  இவற்றுள் பொருத்தமானது என்று  படும் சொல்லை  மேற்கொள்ளலாம். இவைகள் உங்கள் மேலான சிந்தனைக்கு ஆம் .
உடம்பில் இடைவாரில் குண்டு வைத்துக்கொண்டு வந்து இறந்துவிட்டவனை வெடிகுண்டு வல்லுநர்  ஆய்வு செய்து  அவனுடம்பிலிருந்து  அதையகற்றும் பணியில்  அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ,  அது  எதிர்பாராத விதமாக வெடித்து  அவர் மாண்ட செய்தி  அண்மையில்  நாமறிந்தது ஆகும்.   இது  இந்தியா -  பஞ்சாப்  பதங்கோடு  வானவூர்தித் தளத்தில் நடந்தது.   அவ்  வல்லு நரின் குடும்பத்துக்கு நம் இரங்கல். குண்டகற்றுக் கலையில்  தனித் திறனுடையவர்  எனினும் குண்டு அவரை ஏமாற்றிவிட்டது.

இதுபோன்ற வேளைகளில் குண்டை அகற்றிய பின்புதான்  உடலைக் கைப்பற்ற வேண்டுமென்பது  விதி போலும். இல்லையேல் அது பின்னர் வெடித்துப்  பலரைக் கொல்லக்கூடும்.  ஆனால்  இனி,  வெடிகுண்டு அணிந்த உடலைக்  குண்டுடன் சேர்த்து மணல்மூட்டைகளுக்குள் வெடிக்கச் செய்து பின்பு மாமிசத் துண்டுகளைக்  கைப்பற்றுவதே  வழி  என்பதில் ஐயமில்லை.
தீவிரவாதிக்கு அதிக மரியாதை கேட்கும் மனித உரிமைக் குழுக்கள் புதிய வழிகளைச் சொல்லட்டும் .
இப்போது ஒரு கதை.  ஒரு காவல் நிலையத்தில்   ஓர்  இருகோடர் (கார்ப்பொரல் )  கடமையில் இருந்தார்.  வெளியில் தனியாக நடைச் சுற்றுக்காவலுக்குச் சென்றிருந்த ஒரு  புதிய  காவலர்  ஒரு குண்டு ஒன்றைக் கண்டு  தம்  நடைபேசியின்   walkie-talkie  மூலம் என்ன செய்வது என்று (மலாய் மொழியில் ) கேட்க, இருகோடர் விளையாட்டாக "தைரிய மிருந்தால் தலையில் சுமந்து கொண்டுவா" kalau berani boleh angkat kepala  என்று கூறி விட்டார்.    அவரும் அதைக் கொணர்ந்து   நிலையக் குறுக்கு மேசையில் இட,  பார்த்த இருகோடர் நிலையத்தை விட்டு ஓடிவிட்டார்.   நீ ஏன்  இப்படிச் செய்தாய்   என்று கேட்ட கடமை அதிகாரியிடம் :  "அவர் சொன்னார் , நான் செய்தேன் " என்றார் காவலர்.

"மூளையைப் பயன்படுத்த வில்லையா?"  என்று................. அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது .

அப்புறம் வெடிகுண்டு வல்லுநர் வந்து அதனைத்  தக்க பாதுகாப்புடன் செயலிழக்கச் செய்யும்போது நிலையத்தின் மேசை நாற்காலிகள் சாளரக் கண்ணாடிகள் முதலிய  நொறுங்கின , பக்கத்துக் கட்டடங்களிலும் இவை போன்ற  சேதங்கள் . எல்லாம் பின் சரி செய்யப்பட்டன,

இரண்டாம் உலகப் போருக்குப் பின் தென் கிழக்காசியா முழுவதும் வெடிக்காத குண்டுகள் பல கிடந்தன . இவற்றிலெல்லாம் தப்பிப் பிழைத்தோர்  நம் தாய் தந்தையர் .  அவர்களுக்கு நம் வணக்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.