Pages

வியாழன், 23 ஜூலை, 2015

பிரிவுஇன்று ஆயின் நன்மை

அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவுஇன்று  ஆயின் நன்மைமன்  தில்ல
குறும்பொறை தடை இய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக்
கல்பொருது இரங்கும் கதழ்வீழ் அருவி
நிலங்கொள் பாம்பின் இழிதரும்
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே!

இந்தக் குறுந்தொகை பாடலை(134)ப் பாடிய சிறந்த புலவர் சங்கத்துச் சான்றோராகிய    கோவேங்கைப் பெருங்கதவனார். ஆவார்.    இவர்பாடல் குறுந்தொகையில் ஒன்றே உள்ளது. பாடல் இனிமையாக உள்ளது.   இவர் பெயர் இயற்பெயராய்த் தெரியவில்லை.   பாடலில் வேங்கை என்ற சொல்லும் கத  என்ற ஈரெழுத்துக்களும்  வருகின்றன.

இங்கு வந்துள்ள "அம்ம"  என்பது விளித்தல் அல்லது  கவனத்தை ஈர்க்க அழைத்தற்  பொருட்டு.  தலைவி பேசுவது தோழியிடமாயினும் உரிய பணிவுடனேதான் அவள் பேசத்தொடங்குகிறாள்.   பேசத் தொடங்குமுன்  வாழ்த்தித் தொடங்குவது நம்மனோர் பண்டை வழக்கம் , "வாழி " என்கிறாள்.  தோழி  மூத்தவள் என்பது தெரிகிறது.  நம்மோடு என்ற சொல், தோழியையும் ஒருவகையில் உட்படுத்திச் சொல்வதுபோல் உள்ளது.    தலைவியின்  நலனில் தோழியும் அக்கறை யுடையாள் என்பது புலனாகிறது,

பிரிவு இன்று ஆயின் நன்றுமன்!:---   தலைவன் பிரிந்து போகாதவனாய் இருந்திருப்பானாகில் அது நன்றே அல்லது வேறில்லை.  தில்ல என்பது பாட்டில் இசை  நிறைவுக்காக வரும் அசை.   இது விருப்பம் குறிப்பது  என்றும் கூறுவதுண்டு.  அப்பொருள் கொள்ளின் ,  "விரும்பத் தக்கதுமாகும் " என்று  சேர்த்துக்கொள்ளலாம். தில்லை -  சிவனாருடைய விருப்பமான இருப்பிடம் என்பது காண்க. தில் > தில்ல ;  தில் > தில்லை .

குறும்பொறை -  சிறிய கற்கள்.  தடைஇய  -  தடித்த அல்லது பருத்த.  வேங்கை மரம்  நெடிய தாளினை உடையது  என்பதை, "நெடுந்தாள் வேங்கை"  என்றார்.
பூவுடை -  பூக்களையுடைய.   அலங்கு -   அசைகின்ற.   சினை -  இங்கு கொம்பு
என்று பொருள்.   புலம்பத் தாக்கி -   பூக்கள் உதிர்ந்துபோம்படியாக  அருவி நீர்
அசைத்துத் தாக்குகிறது . தலைவியின் நிலையும் இதுதானே.  அவள் மனத்துப் பூத்திருந்த இன்பப் பூக்களெல்லாம் உதிர்ந்து  விட்டனவே.

புலம்பு  -  தனிமை . (தொல் ).  புலம்புதல் :   தனிமையிற் பிதற்றுதல்.

அருவி கற்களுடன் பொருதி   (மோதி)  கீழே வேகமாய்ப் பாய்கிறது.  பேரொலி எழுப்பிக்கொண்டு!
எங்கிருந்தோ ஓடிவந்த நீர்,  அருவியாய், அந்த வேங்கைக் கொம்பைத் தாக்கிவிட்டுப் புலம்ப வைத்துவிட்டு, பாம்பு போல நெடிதாய்ச் சென்று வீழ்ந்து விட்டதே!   வலிமைசேர் வேங்கை மரம்  போல அவள்  குடும்பம் ,  அதிலொரு கொம்புதான்  அவள்.  பூத்திருந்த கொம்பு.   இனி அருவி மேலேறி வருதலில்லை. இனியும் நீர் வரத்து இருந்தாலும் கொம்புக்கு  அதிலொன்றும் இல்லை நாட்டம். பிரிவால் துன்பமாகி விட்டபின் எல்லாம் முடிந்துவிட்டது.

நிலை நில்லாத காதலனை சென்றுவீழ்  அருவிக்கே ஒப்பு வைக்கவேண்டும்.

பிரிவு இன்று :   இங்கு இன்று என்பது இல்லை  என்னும் பொருளில் வந்தது.

இல் +  து:   இன்று.   இன்றை மொழியில் ,  இன்று என்பது இல்லாதது  என்று நீட்டிச் சொல்லப்படும்.  பிற்காலத் தமிழில் இப்படிச் சொற்கள் பல நீண்டன.  இல் + து  ->  இற்று>  இன்று  என்பதில்    வல்லினம் மெல்லினம் ஆயிற்று. (மெலித்தல் விகாரம் ,)

இன் + து = இன்று  என்றும் வரும்.  இது  today என்று பொருள்தரும்.

அடிச்சொற்கள் வெவ்வேறாம்.

பாடலை நன்கு சுவைக்கவேண்டும்.

wanted to write more..  Will edit later. Enjoy this for the moment.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.