Pages

சனி, 28 பிப்ரவரி, 2015

யுவானும் லின்னும் காதலர் (தொடர்ச்சி)

என்ன வேலையோ தெரியவில்லையே என்று மனம் குழம்பியவாரே லின்
தனது இருப்பிடம் சென்றாள். இரவு பதினொன்று வரை தொலைபேசியில் அழைத்துப் பார்த்தாள்  -  பதிலேதும் இல்லை .

அடுத்த நாள் , அதற்கடுத்த நாள் -  சந்திக்க முடியவில்லை. வேலை அதிகம் என்று தொலைபேசி அழைப்புகளை வைத்துவிட்டான்,  எதுவும் பேசாமல்.

இரண்டு வாரங்கள் சென்றன.  பல்கலையின்  நடைபாதையில் யுவான்  வந்துகொண்டிருந்தான்.  எதிரே சென்ற மாணவி மாலா அவனோடு பணிவன்பைப் பரிமாறிக்கொண்டாள்.  நான் தான்.

"லின் எங்கே ,  வரவில்லையா ?"  என்று நான்  கேட்க ,
" இல்லை, ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் " என்றான்.
"என்ன! ஐயோ பாவம் ! மனம் எப்படிக் கடினமான இடர்ப் பட்டிருக்கும் !
லின் நல்ல பெண் ஆயிற்றே.. என்ன நடந்தது என்று  நான் தெரிந்துகொள்வதில்  உனக்கு  மறுப்பு  எதுவும் இல்லையென்றால்,  சொல்லலாமே " என்றேன் .
" இன்று நாம்  சீனச் சைவ உணவகத்தில்  மாலை ஆறுக்குச் சந்திப்போம்.
நானும் உன் னுடன் உட்கார்ந்து சாப்பிட்டு  இரண்டு மூன்று மதங்கள் ஆகிவிட்டன.  தவறாமல் வா"  என்றான். விரைவாகப்  போகவேண்டிய வேலை ஏதோ  இருந்ததுபோலும்.
"சரி " என்று சொல்லிவிட்டு கையசைத்துவிட்டு நடந்துவிட்டேன்.

மாலை ஐந்து மணிக்கு  தொலைபேசி  மணி என்னை அழைத்தது. இன்னொரு மாணவி தனது வண்டியில் என்னை என் இருப்பிடத்திலிருந்து எடுத்துகொண்டு உணவகத்திற்குக் கொண்டு வருவாள் என்று யுவான் சொன்னான்.  ஏதோ பெரிய விடயம்போலும் என்று எண்ணிக்கொண்டு,  ஐந்து மணிக்கெல்லாம் புறப்பட்டு  அரை மணி நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தோம்.

சில நிமிடங்களில் யுவான் அங்கு வந்தான்.   சீனச் சைவ உணவு  உண்டோம்.
அவன் எதையும்  தொடங்காமல் இருக்கவே,  நான் லின்னையும் கொண்டு வந்திருக்கலாமே  என்றேன்.

"முற்றுப் புள்ளி என்று சொன்னேனே!  எப்போது வந்தாலும்  அங்கே சரியில்லை, இங்கே சரியில்லை,  அதில் அழுக்கு, இதில் அழுக்கு, இதைத் தேய்க்க வேண்டும், அதைக் கழுவ வேண்டும்  என்று  முணுமுணுத்துக் கொண்டே  இருப்பாள். அவற்றைக் கழுவிக்கொண்டும் தேய்த்துக்கொண்டு மிருப்பாள்.  கைகளைப் பல முறை கழுவுவாள். இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தால் இடர் ஒன்றுமில்லை. கூடுதலாக இருக்கிறது . இந்த வயதிலேயே இப்படி என்றால் கிழமாகிவிட்டால்,  எனக்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் தலைவலி  ஆகிவிடும். இதனால் சண்டை வம்புகள் வரக்கூடும்.  இது ஒரு விதமான மன நோயின் அறிகுறி. அதனால், என் அறைக்கு இனி வராதே என்று சொல்லிவிட்டேன் . சந்திப்புகளையும் வெட்டிவிட்டு  இப்போது கொஞ்சம் அமைதியாய் இருக்கிறேன்.  " என்றான்.

என்னோடு வந்த பெண்ணும் சீன நங்கைதான்.  இவன் சொன்னதெல்லாம் அவளுக்கு முன்கூட்டியே தெரியுமோ என்னவோ!  அவள் என்னைக் கவனித்தாள்.  ஒன்றும் பேசவில்லை .  எனக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.  அப்போது என் முன்னிருந்த சூப் என்னும் காய்கறிகள் வெந்த நீரை மெதுவாக உறிஞ்சிக்கொண்டே  யுவனை உற்று நோக்கினேன்.

(தொடரும் )    



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.