Pages

வியாழன், 23 அக்டோபர், 2014

உழிஞைத் துறை: ஏணி நிலை.


உழிஞைத் திணையில் ஏணி நிலை என்பது ஒரு துறை. பகையரசன் மதிலை அணுகி, அதன் சுவர்மேல் ஏறும்பொருட்டு ஏணி சாத்த முயல்வதைப் பாடினால், அது ஏணி நிலைத்துறை எனப்படும்.

பகை அரசனின் படை வீரர்கள் பாதுகாப்பான துளைகளை உடைய ஏவறைகளுக்குள் இருந்துகொண்டு மதிலை உடைத்து உள்புக முனைவார்மேல்  அம்பு எய்வர்.

எயில் ‍  எய்+இல் > எயில்.  (இங்கு யகர ஒற்று இரட்டிக்காது) இது  சொல் அமைப்பு. எயில் =  மதில்

எய் ‍  (அம்பு) எய்தல்.  இல் = இடம், வீடு.

குறிப்பு: மெய்+இல் =  மெய்யில்.  இல் என்னும் வேற்றுமை உருபு வருமாயின்  இரட்டிக்கும்.  "உடம்பில்" என்பது.

ஏணி நிலைக்கு ஒரு பாடல்:

கற்பொறியும் பாம்பும் கனலும் கடிகுர‌ங்கும்
விற்பொறியும் வேலும் விலக்கவும் ‍‍‍=== பொற்புடைய‌
பாணி நடைப்புரவி  பல்களிற்றார் சாத்தினார்
ஏணி பலவும் எயில்.

---- (பு.வெ.மா. 110 உழிஞை: 18 பார்க்கவும்)

பொற்புடைய = அழகிய;

பாணி நடைப் புரவி = பண்ணுக்கு இயைய நடக்கும் குதிரைகளை(யும்); (நாட்டிய நடை நடக்கும் குதிரைகளை(யும்))

பல் களிற்றார்  =  பல யானைகளை(யும்) கொண்டுவந்து மதில் சூழ நிறுத்தியுள்ள, உழிஞை மேற்கொண்ட அரசர்;  (உழிஞை என்பது: முன் விளக்கப்பட்ட இடுகைகள் காண்க)

எயில் = மதில்  (மதிலின் சுவர்களின் மேல்;) 

ஏணி பலவும் = பல எண்ணிக்கையிலான ஏணிகளையும்;
"உம்" வந்திருப்பதால் உள் புகுதற்கு ஏனை வேலைகளையும் செய்தனர் 
என்பது.
சாத்தினார் = ஏறுவதற்கு எளிதாக சாய்வாக நிறுத்திவைத்தனர்;

இப்படி ஏறவருவோரைத் தடுப்பதற்காக அந்த மதிற்கண்  "கற்பொறியும் பாம்பும் கனலும் கடிகுர‌ங்கும் விற்பொறியும் வேலும்"  ஆகிய பொறிகள் நாட்டப்பட்டிருந்தன  என்று அறிக.

விலக்கவும்:
அவற்றை விலக்கவே ‍‍‍‍  ‍  அதாவது செயலிழக்கச் செய்யவே ஏணி வைத்து மதிலுட் புகுவர்.

சிலப்பதிகாரம் வரிகளையும்    (15: 207‍ 18  )   காணவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.