1
வெயில் துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனேபடியோர்த் தேய்த்து வடிமணி இரட்டும்
கடாஅ யானை கண நிரை அலற
வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்குபுகழ் நிறீஇ.... (யினான் )
வெ யில் துகள் அனைத்தும் ==
வெயிலும் காற்றில் அடிக்கும் தூசியும் கூட
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே ==
பகைவர் தேசத்தில் மாறி அமைந்து விட்டன.;
கண்ணின் உவந்து = கண்ணால் பார்த்து விரும்பி
நெஞ்சு அவிழ்பு அறியா = மனம் திறந்து இரங்குதல் தெரியாத ;
நண்ணார் தேஎத்தும் = ( அப் )பகைவர் நாட்டிலும்
பொய்ப்பு அறியலனே - ஏமாற்றுதல் அறிய மாட்டான் ;
(அங்கும் கொடை நிகழ்த்தினான் வேந்தன்.)
படியோர்த் தேய்த்து = அடங்காத பகைவரை அழித்து;
வடிமணி இரட்டும் - (யானை ) மணிகள் இருவிதமாய் ஒலிக்கும்;
கடா யானை = ஆண் யானைகள் ; கண நிரை அலற = படைத் தொகுதி அலறும்படியாக; வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து = மிக விரிந்த பெரிய நிலப் பரப்பினை வென்று ;
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ = புலவர் வாழ்த்தும்படியான மிகப் பெரும் புகழை நிலை நாட்டி;(னான் )
2 அட்டு மலர் மார்பன்;
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்;
மன்னுயிர் அழிய யாண்டுபல மாறி
தண்ணியல் எழிலி தலையாது ஆயினும்
வயிறு பசி கூர ஈயலன்;
வயிறு மாசு இலீ இயர் , அவனீன்ற தாயே.
அட்டு மலர் மார்பன்;==
மலர் சொரிந்த மார்பை உடையோன்;
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்==
நம்மவர்க்கும் அடுத்துள்ளோர்க்கும் மற்ற எவராயினும்
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்==
புலவர்போல பரிசில் வேண்டி வருவோர் எத்தகையோர் ஆயினும்
கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்;==
ஈவது கடமை என்ற உணர்வு குடிகொண்ட நேர்மையான நெஞ்சினன்
மன்னுயிர் அழிய யாண்டுபல மாறி==
உலகின் உயிர்கள் அழிவு எய்தி பல ஆண்டுகள் சென்றும்
தண்ணியல் எழிலி தலையாது ஆயினும்==
தண்மையான மேகங்கள் மழை பெய்யாது பொய்த்துவிடினும்
வயிறு பசி கூர ஈயலன்==;
வயிறு மீண்டும் பசிக்க ஈதல் செய்பவன் அல்லன்;( என்றுமே இனிப் பசி வராதபடி ஈபவன்; )
வயிறு மாசு இலீ இயர் , அவனீன்ற தாயே==.
காரணம், அவனை ஈன்ற தாய் வயிற்றில் மாசு இல்லாதவள்
பதிற்றுப் பத்து , இரண்டாம் பத்தின் இறுதிப் பாடற் பகுதி. வரிகள் 6 முதல் 14 வரை; வரி 20 முதல் 27 வரை. பாடிய புவலர் பெருமான் குமட்டூர் கண்ணனார். படப் பெற்ற மன்னன் இமய வரம்பன் நெடுஞ்ச்சேரலாதன். இவன் பெரும் போர் வீரன் என்பது, இவன் புகழப்பெற்ற சொற்களினால் அறியலாம்.
புறப்பொருளில் இஃது இயன்மொழி வாழ்த்து. ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமுமாக வந்துள்ளது. செந்தூக்கும் வஞ்சித் தூக்கும் ஆகும்.
புலவர் பெற்ற பரிசு: 500 ஊர்கள். 38 ஆண்டுகட்கு அரசின் தென்னாட்டு வரவில் பாதி.
இந்தப் பாடல் பாடிப் புலவர் ஒரு குறு நில மன்னராகவே ஆகிவிட்டார் எனில் மிகையாகாது.
இவ் வேந்தன் பெருங் கொடையாளி . ஒரு ஊழியே மாறி மழையே இல்லாமல் போனாலும் கொடையே அவன் நெஞ்சத்து முன் நிற்பது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.