Pages

சனி, 19 ஜூலை, 2014

அச்சாரம்

அச்சாரம்  என்ற பேச்சு வழக்குச் சொல்லை இப்போது காண்போம்.

இதன் முந்து வடிவம் அச்சகாரம் என்பது ;  ஆகையால் அதனை முதலில் ஆய்தல் தக்கது.

ஒரு மாட்டை விலை பேசுகிறவன், பேசிய விலையில் இணக்கம் உண்டானபின்  நாளை காசோடு வருவேன் என்பான். அவன் நாளை வருவானோ மாட்டானோ? அ வன் கொஞ்சம் கூடுதலாகத் தருகிறேன் என்று சொன்னதை நம்பி, வாங்குவோம் என்று தெரிவித்த வேறு  ந(ண்)பர்களிடம் மாட்டுக்காரன் ஏதும் வாக்குக் கொடுக்காத நிலையில் அவன் வரவில்லை என்றால் என்னாவது?  அ வன் அப்பால் நகர்ந்த பின் இன்னொருவன் வந்து சற்று கூடின விலைக்குக் கேட்டால்,  முதல் வந்து பேசியவன் நிலை என்னவாகும்?  வணிகத்தில் இத்தகைய குழப்பங்க்கள் ஏற்படாமல் மாட்டுக்காரனும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்; பேசியவனும் மாடு எனது என்ற நம்பிக்கையுடன் உறங்கவேண்டும். சண்டை ஏற்படாமலும் புரிந்துணர்வோடும் வணிகம் ஒப்புடன் நடைபெறுதல் இன்றியமையாதது.

இதில் உள்ள ஒருவித அச்சத்தின் காரணமாக, அச்சகாரம் கொடுத்தலும் பெறுதலும் ஏற்படலாயிற்று.   இதையே முன் நிற்கும் "அச்ச(ம்)" என்ற சொல் காட்டுகிறது.

காரம் என்பது பொற்காசுகளுக்கு அல்லது பொன்னுக்கு உள்ள பெயர்களில் ஒன்று. இந்த அச்சம் தவிர்த்தல் பொருட்டு, வாங்குபவன் விற்பவனிடம்  நிறுநயம்  செய்த தொகையில் ஒரு பகுதி  பொற்காசுகளைக் கொடுத்தான்.

இது அச்சகாரம் எனப்பட்டது. பின்  அச்சாரம் ஆயிற்று. (மரூஉ ).

பொன்னுக்குக்  "காரம் " எனும் பெயர் ஏற்பட்டது,  அணிவது தவிர  பொன் சேமிப்புகளை எங்காவது வீட்டுக்குள் புதைத்தோ வேறு முறைகளில் மறைத்தோ வைத்ததனால்தான்.  கரத்தல் - மறைத்துவைத்தல். கர+ அம் =  காரம்;  முதனிலை  திரிந்த தொழிற்பெயர்.  க > கா  என்று   நீண்டது. ரகரத்தில் உள்ள அகரம்  கெட்டது,  அம்  விகுதி  பெற்றது,    புதைத்து வைத்ததனால் "புதையல்"  என்ற சொல் வந்தது போன்றே, மறைத்து வைத்தது "காரம்"  ஆனது.

2 கருத்துகள்:

  1. மிகத்தெளிவாக விளக்கினீர்கள். ஒரு முன்தொகை கொடுத்து ஒரு வியாபாரத்தை தொடங்குவது. இதுபோல பெண்ணை ஆணுக்கு மணம்முடிக்க பேச்சுவார்த்தை முடித்து திருமணத்தேதி குறித்துவிட்டாலே அச்சாரம் போட்டாச்சு என்பது ஊர்ப்புற வழக்காகும்.

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுக்கும் அன்புக்கும் நீங்கள் தந்த பொருளுரைக்கும் நன்றிகள் பல.

    சிவமாலா

    பதிலளிநீக்கு

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.