பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைத்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞல,
வாடை வந்ததன் தலையும் நோய் பொரக்
கணடிசின் வாழி தோழி தொண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.
கொல்லன் அழிசியார், குறுந்தொகை 240.
இவ்வழகிய பாடலின் பொருளை இனி நோக்குவோம்.
அருஞ்சொற்பொருள்
புதல் - புதர். பனிப்புதல்: பனிப்பொழிவின் காரணமாக மிகக் குளிர்ந்துவிட்ட புதர் இவர்ந்த = பற்றி ஏறிய. பைங்கொடி அவரை = பசுமையான அவரைக் கொடி. கிளிவாய் ஒப்பின் = கிளியின் அலகினை ஒத்த.
ஒளிவிடு பன்மலர் = ஒளிவிடுகின்ற பல மலர்கள்.
வெருக்குப்பல் = காட்டுப் பூனையின் பல். உருவின் = உருவத்தை ஒத்த. முல்லை - முல்லைமலர். கஞல = செறிய. வாடை = வடக்குத் திசையினின்றும் வீசும் குளிர்காற்று. பொர = வருத்த. *தெண்டிரை = தெண் - திரை, தெளிந்த அலைகள்,
கடல் ஆழ் - கடலில் மூழ்கும். கண்டிசின் = காண்பாயாக .
இவர்தல்- (கொடியைக் குறித்து இச்சொல் பயன்படும்போது, மிக அடர்த்தியாகவும் உயரமாகவும் அக்கொடி மேலேறுதலை உணர்த்தவல்லது. கண்டிசின் - காண்பாயாக என்பதாம். இசின் என்ற இடைச்சொல் இப்போது வழக்கில் இல்லை. சில ஆய்வாளர்கள் இதை கங்கையாற்றுப் பகுதிகளில் வழங்கும் எழுத்துமுறையற்ற ஒரு திராவிட மொழியில் வழங்குவதாகக் கூறி யிருந்தனர். இக்குறிப்பு தற்போது என்னிடமில்லை.
கண்டு+ ஈகு + இன் = கண்டீகின் > கண்டீசின் கண்டிசின் எனத் திரிந்திருக்கலாம் என்பர். ஈதல் = ஈகுதல், தருதல் பொருள். காண்க, காண்தருக என்பன ஒத்த பொருள் உடையன எனலாம்., .
*
தெள் - தெளி - தெளிவு.
தெள் - தெள்ளு, தெள்ளுதமிழ்.
தெள் - தெள்ளத் தெளிந்த (மரபுத் தொடர்.)
தெள்+மை = தெண்மை.= தெளிவு.
தெண்மை+ திரை= தெண் திரை = தெண்டிரை.
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே என்பது.
தலைவியின் வீட்டிலிருந்து பார்த்தால் காதலர் வதியும் நெடுங்குன்றம் மாலையில் செஞ்சுடரோனின் ஒளிவெள்ளத்தில் அழகு மிளிரநிற்கின்றது. மணி - அழகு, ஒளி என்பது பொருள். அவர் மணி நெடுங் குன்றம் : காதலர் வாழும் அழகொளி வீசும் நெடிய சிறு மலை. அவர் அருகில் இல்லாவிடினும், அவ்வழகிய நெடுங்குன்றையாவது நோக்கிய வண்ணம் தலைவி தன் மனத்தை ஆற்றிக்கொண்டிருந்திருப்பாள் . .மாலை போகப்போக, இரவின் இருள் கவியக்கவிய, மலை மறைந்துவிடுமே! அவரும் இங்கில்லை. கண்டு மனங்களிக்க அவரது மலையும் மறைந்துவிட்டால், இத்துன்பத்தை எங்ஙனம் தாங்கிக்கொள்வது. இப்போது இரவு வருவதுதான் பெருந்துன்பமாகிவிட்டது. மாலை மாலையாகவேயாவது இருந்துவிடக்கூடாதா?
மாலை என்பது ஒளி யும் இருளும் கலக்கும் நேரம் ஆகும் . இங்கு மாலை என்றது இந்த நேரத்தின் விளிம்பைக் குறிக்கிறது , மால் > மாலை.
தோழியிடம், "அதோபார், அந்த மலை மாலையில் மறைந்துவிடுமே....!. ""ஒளி குன்றக் குன்ற மலையும் கொஞ்சம் கொஞ்சமாக மறையுமே" என்கிறாள்
மாலையில் அவன் வாழும் மலைகூடக் கண்ணுக்கு மறையக்கூடாதா? அத்துணைக் காதலா? புலவர் அழிசியாரின் பாடல் வெகு"ஜோர்" என்றுதான் சொல்லவேண்டும். என்னே நம் சங்க இலக்கியங்களில் வரும் காதற் சித்திரங்கள்.....
இனிப் பாடலின் முழுப்பொருளையும் காண்போம்.
குளிர்ந்த புதரில் பற்றி ஏறியுயர்ந்த அவரைப் பசுங்கொடி கிளியலகினை ஒத்த ஒளிவீசுகின்ற பல மலர்களைத் தாங்கி நிற்கிறது. வடக்கிலிருந்து வாடைக் காற்று (குளிர்காற்று) வீச, காட்டுப் பூனையின் பல்போன்ற முல்லை மலர்கள் அவரைப் பூக்களுடன் சென்று செறிகின்றன. இயற்கையில் இவை இங்ஙனம் ட்கலந்துறவாடவே, எதிர் தோன்றும் மலையில் வாழும் காதலன் அருகில் இல்லாமையால், தலைவியைப் பிரிவுத்துயர் வருத்துகிறது. போகட்டும், அவருடைய அழகிய ஒளிசெய்யும் சிறு மலையையாவது பார்த்துக்கொண்டே துயரை ஆற்றிக்கொண்டு இருந்துவிடலாம் என்றால் மாலை வந்துவிட்டது. கடலில் கலம் மூழ்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடி ஆடி உள்ளிறங்கி மூழ்குதல் போல, மலையும் இருள் கூடக்கூட மறைந்துவிடும். தோழி, அவர் வாழ்க,நீயும் யாவரும் வாழ்க! இனி நான் எதைப் பார்த்து ஆற்றுவேன்? காதலெனும் நோயுடன் அன்றோ நான் போராடிக்கொண்டிருக்கிறேன்....."
{நோய் பொர என்பது புலவரின் தொடர் .}
என்பது தலைவி கூற்று.
நோய் எனை வந்து வருத்துகிறதே .....என்பது பொருள் பொருதல் = சண்டை இடுதல் என்றும் பொருள்படும் சொல், காம நோய் அவளுடன் போராடுகிறது என்பது பொருத்தமான உரை. வாட்டுகிறது என்றும் கூறலாம் .. காம நோய்க்கு அவள் ஒன்றும் பலியாகிவிடவில்லை என்பது நன்கு தெரியும்படி """'பொ ர " என்றார் புலவர்.
அந்த மலை மறைவதுபோல, அந்தக் கலம் மூழ்குவதுபோல தலைவியும் துயரில் மூழ்கி வாடை தரும் குளிரில் வாடுவதுபோல் வாடி,
துன்பமே உருவாகிவிடுவாள்..... பாவம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.