தருணம் என்பதையும் அத்துடன் தறுவாய் என்பதையும் அறிந்துகொள்வோம்.
தறுவாய் என்பது தருவாய் என்று எழுத்துக்கூட்டப் பட்டாலும் அதே பொருள்தான் என்பதால், இச்சொல் இருவழிகளிலும் எழுதப்படும் சொல் என்பது தெளிவாகிறது. இது தருணம் என்ற பொருளிலும் ஆளப்படுதல் கூடும். றுகர ருகர வேறுபாடின்றி வழங்கும் சொல் இது. இவை எழுத்து வேறுபாடின்றி வழங்கும் சொற்களில் அடங்குமென்பது தேவநேயப் பாவாணரும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இங்குத் தருதல் என்பது ஏற்படுதல் என்ற பொருளில் இச்சொல்லில் (தருவாய், தறுவாய்) வருகிறது. நேர அமைப்பினால் மனிதற்குத் தரப்படுவது. இதில் வாய் என்பது, வாய்க்கப்படுதலைக் குறிக்கும். வாய் என்ற முதனிலைத் தொழிற்பெயர் சொல்லின் முதற்பகவாய் நிற்கின்றது.
தருணம் என்பதைத் தரு+ உண்+ அம் > தருணம் என்று பிரிக்கவேண்டும்.. உண் என்பது ஒரு துணைவினைபோல் வருகின்றது என்றாலும், சொல்லின் இரண்டாம் பகவாய்ச் சிறக்கின்றது. தருதலடியாகப் பிறந்த இச்சொல்லைத் தமிழ்ச்சொல் அன்று என்று பிறழ உணர்ந்தோரும் உளர். உட்பகவுகளைப் பகுத்துணராதவர்கள் செய்த ஆய்வுகள் தள்ளத்தக்கனவாகும்.
வாய்மொழியில் பலர் எது எந்தமொழிச் சொல் என்று வேறுபாடு கண்டு பேசுவதில்லை. அவ்வாறு செய்வதும் தேவையுமில்லை. தாம் கருதிய பொருளை புலப்படுத்துவதற்கு எந்தச் சொல் பொருத்தமோ அதைப் பயன்படுத்துவர். அது எந்த மொழிச் சொல்லாகவும் இருக்கலாம். இவர்களைக் கண்டிக்க எந்தச் சட்டமும் இல்லை.
தறுவாய், தருணம் இரண்டும் நல்ல தமிழ்ப்பதங்கள் ஆவனவாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.