தமிழில் பெருவாரியான சொற்கட்கு மூலம் கண்ட பெருமை, தேவநேயப் பாவாணர்க்கு உரியது என்பதே உண்மை. இவர்தம் பெருமையை பிற பல அறிஞர்கள் கண்டு வியந்துள்ளனர். ஆமைக்கு அந்தப் பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்று ஆய்வு செய்கையில், அஃது ஏமம் என்ற தமிழ்ச்சொல்லினின்று வந்தது என்று தேவநேயர் கூறினார். இது எனக்குச் சரியாகவே தோன்றுகிறது. அறிஞர் அப்பாத்துரை அவர்களும் இவரை புகழ்ந்துள்ளார். தேவநேயனாரால், தமிழ்ச் சொல்லாய்வு மிக்க வளர்ச்சி பெற்றது.
ஏம் என்றால் பாதுகாப்பு. அமணர் என்பது சமணர் என்று திரிந்ததுபோலவே, ஏமம் என்பதும் சேமம் என்று திரிந்தது. ஆடி என்ற ஏனப்பெயர், சாடி என்று திரிந்தபின், ஜாடி என்றும் திரிந்தது. ஆடியில் இருக்கும் நீர் சற்று ஆடினால், சாடியிலும் ஆடுமாதலின், அதற்கு இதன் மூலம் பெயர் வந்தது பொருத்தமே ஆகும். சாடுதல் என்பது அடித்தலையும் குறிப்பதுதான். சாடியைத் தட்டினால் உள்ளே நீரும் ஆடுவதால் அந்தப் பெயர் வந்தது என்று கூறினும் அதனால் இப்பொருள் தொய்வுறாது என்னலாம்.
எம் பொருளை யாம் எப்போதும் காத்துக்கொள்வோம். ஆகையினால் எம்- ஏம் என்பதிலிருந்து பாதுகாவல் என்ற பொருள் வந்தது பொருந்துவது. அவர் பிறன் பொருளையும் அவ்வாறே காப்பதற்கு ஏதேனும் கூடுதல் காரணமிருக்க வேண்டும். இச்சூழ்நிலையில் பாதுகாவலைச் சிந்தனை செய்யுங்கால் இதனை மேற்கொண்டு ஆராயலாம். இப்போது ஏமம் சேமம் எல்லாம் தமிழில் ஆழ்ந்த கற்காலத்துக்கும் முன்பு உண்டான பொருள் உடையன என்பதை மட்டும் கவனித்துக்கொள்வோம்.
ஆகையினால் ஆமைக்கு இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் சொற்களை ஆய்வு செய்கையில், ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் பெயர்கள் ஏற்படக்கூடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. சிலேடை முதலிய மேற்பட்ட அலங்காரங்கள் தவழணி செய்யும் தமிழ்மொழியில், ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இயல்பானவை ஆகும். ஒன்றுக்கு ஒரே பொருள் என்பது தமிழறியாதவனுக்கு ஏற்புடையதாய் இருக்கலாம். ஒரு பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் அணிசெய்வது, மிக்க இயல்பானது ஆகும். வேறுமொழிகளிலும் உள. ஆனால் குறைவு ஆகும்.
இனி ஆமை. ஆமை என்பது ஓர் ஓட்டினகத்துத் தன் மெய்யை ( உடலை) ஒளித்து வைத்துக்கொண்டு வாழும் ஓர் உயிரி ஆகும். ஆகையினால், அகத்து மெய் > அகமெய் > ஆமெய்> ஆமை என்றும் பெயர் விளைந்திருத்தல் கூடும். சங்கு என்ற உயிரியும் இவ்வாறு வாழ்வது ஆயினும், இது இடுகுறியாக வந்து சங்கு முதலியவற்றைக் குறியாது என்று வரையறுத்துக்கொள்ளலாகும்.
சங்கு ஓட்டை அண்மி வாழ்வது. அண்> சண்> சம்+கு> சங்கு ஆகும். சம் என்பது தமிழிலும் சமஸ்கிருதத்திலும் சேர்ந்திருத்தலைக் குறிக்கும். தமிழில் இணைமொழி யாகித் தமிழரால் வளர்க்கப்பட்டது சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதம். பாணனாகிய பாணினியாலே இலக்கணமும் கூறப்பட்டது.. இந்திய மொழி.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.