சங்கப்புலவராய்த் திகழ்ந்து, தமிழில் பாடல்கள் பல பாடித் தமிழிலக்கியத்துக்குத் தேன்சொரிந்து, பத்துப்பாடடு என்னும் தொகைநூலில் குறிஞ்சிப் பாட்டு என்பதையும் பாடி நமக்குத் தந்து, தமிழ்வளம் மிகுத்த தலைசிறந்த புலவராய் இருந்த கபிலரை நினைவுகூரு முகத்தான் இலக்கிய இன்பமும் இன்று மிகப்பெறுவோமாக. இவ்வாறு தொடருங்கால் அவர் என்ன நிறமுடையவராய் இருந்தார் என்பதையும் கவனித்துவிடுவோம்.
பெரும்பாலும் மாப்பிள்ளைமாரெல்லாம் மூன்று முடிச்சுப் போடப்போகும் போதுதான் பெண் சிவபாய் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவர். ஆஷா என்றெல்லாம் வழங்கும் திரிபுச் சொல் வடிவங்களால் கவரப்பட்டு, திட்டவட்டமாக எதையும் உரைக்க முடியாத அகரவரிசைகளால் துவரப்பட்டு, ஆசை என்பதுதான் மனத்தின் அசைவு என்பதையும் மறந்துவிட்டு, அசை என்பதுதான் முதனிலை நீண்டு ஆசை என்று நெடின்முதலாய் இலங்குவதென்பதையும் துறந்துவிட்டு, பொருண்மை யாதென்று தேடிக்கொண்டிருந்தால் அவர்கட்கு இது சற்று உதவுவதாய் இருக்குமென்பதே எமக்குத் துணிபு ஆகும்.
யாம் பலகாலும் சொல்வதுபோல், கட்பு என்ற சொல்லினின்றே இடைக்குறையாய் கபு என்ற சொல் தோன்றிய தென்பதையே ஈண்டும் கூற விழைவுற்றோம். பேசிக்கொண் டிருக்க வாய்ப்பு நுகர்ந்தாரையே பிணிக்கும் இத்தகு கருத்துகள். பெரும்பான்மை யினரைச் சென்று சேர்ந்திருத்தல் இயலாமையின், இதனை ஈண்டு தருதல் நன்மை பயக்கும் என்ற எதிர்பார்ப்பும் இவண் உளதே ஆகும்.
கள் என்பது கருநிறம் குறிக்கும் தமிழ்ச்சொல். குடிக்கும் கள் ஏன் கருநிறம் கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் ஆய்ந்து கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். கபிலரைப் பற்றி மட்டும் இங்கு ஆய்வு செய்வோம்.
கள் என்ற சொல்லுடன் பு என்ற விகுதியைச் சேர்த்தல் கள் + பு > கட்பு எனவாகும். பு என்னும் விகுதிக்கும் பொருள் உண்டு. அதன் பொருள் தோன்றுதல் என்பது, இது நெடிலாகப் பூ என்றிருந்து பின்னாளில் பு என்று குறிலாகிவிட்டது. இது ஏனென்றால் நெடில் நீளமுடையது; அதைப் பேச்சில் சுருக்குவது என்பது மக்கள் வழக்கம் ஆகும். தனிச்சொல்லாக வருகையில் நீண்டிருக்கும். விகுதி சொல்லிறுதியில் வருவதால் ஒன்றைச் சொன்ன பின் அதைப் பேசுவோர் ஒலியை இழுத்தடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இறுதியில் ஒலியைக் குறைத்துக்கொள்ளுதல் என்பது எல்லா மனிதர்களுக்கும் இயல்பு. இராணுவ அணிவகுப்பாய் இருந்தாலோ கூப்பிடுவதாய் இருந்தாலோ நீட்டி ஒலிப்பார்கள். ஒலியானது சென்றுசேர வேண்டுமென்பது நோக்கமாதலின். இவ்வாறில்லை எனில் ஒலியை நீட்டுவதற்கு மற்ற காரணங்கள் இருக்கவேண்டும். இது ஒரு முயற்சிச்சிக்கனம் என்று சொல்லலாகும். குறுக்கம் இவற்றால் ஏற்படும் எடுத்துக்காட்டு: ஒரு சீனப்பெண் தன் தம்பியை அழைக்கையில் சிங்க் ஆஆஅ என்று இழுப்பாள். தம்பியின் பெயர் சிங்க். ஒலி சென்று சேரவேண்டும் என்ற நோக்கம். ஆகையால். நாளடைவில் பூ விகுதி - என்பது பு என்றாகிவிடும், எல்லா மொழிகளும் ஒலிகளால் ஆனவை, ஆகவே குறுக்குதலும் நீட்டுதலும் இராகம் பாடுகையில் ஒலி இடம் கொள்ளுதலும் தெளிவு, இது மொழிகளின் பொதுத் தன்மை ஆகும்.
ஆகவே கபு என்பதனுடன் இல் என்பது சேர்ந்தால் இல்லை என்று பொருள். அதாவது கருப்பு இல்லை என்பது, அர் சேர்ந்து கபிலர் ( கபு இல் அர்) கருப்பாக இல்லை, வெளுத்த நிறம் உடையவர் என்று பொருள்படும் சொல் ஆகும். வெளுத்த என்றால் வெள்ளைக்காரன் போல் வெளுத்த நிறமாக இல்லாமல், சற்று மங்கலான நிறம். அதாவது கருஞ்சிவப்பு என்று கொள்ளவேண்டும். கபில நிறக் காளை என்று இத்தகைய நிறமுடைய காளையைத் தான் சொல்வர்.
வள்ளல் பாரி இறந்தபின், அவன் பெண்மக்களுக்கு இரங்கி, அவர்களுக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்விக்க முயன்றார் என்று அறிகின்றோம். இப் புலவர் பாட்டுகள் எழுதுவது, பாடுவது மட்டுமின்றி நல்வாழ்வு நோக்கும் உடையவர் என்று தெரிகிறது. இத்தகையோர் புகழ் என்றும் வாழ்க. இன்றும் இத்தகு நன்னோக்கு உடையவர்கள் மக்களில் உளர். யாமும் ஒரு சீன நங்கைக்கு ஒரு சீனரை அறிமுகம் செய்வித்து அவர்களும் மணம் செய்துகொண்டனர். நன்றியறிதலுடன் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். ஆகவே கபிலர் ஒரு நல்ல மன்பதை நண்பர்.
கபிலர் என்பது ஓர் இயற்பெயர் என்று நாம் நினைக்கவில்லை. ஆயினும் வெள்ளையன், கருப்பன், நீலன் என்றெல்லாம் இயற்பெயர்கள் உள்ளன. ஆதலின் கபிலன் என்பதும் இயற்பெயராய் இருத்தல் கூடும்.
கபிலர் பாடியனவாகக் காணப்படும் சங்கப்பாடல்கள் பலவாகும்.
கள்> கள்+பு > கட்பு + இல் + அர் > கட்பிலர் > கபிலர்; கறுப்பு+ இலர் > கறுப்பிலர்> கபிலர் எனினுமாகும். இச்சொல் இருபிறப்பி.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.