Pages

வெள்ளி, 11 அக்டோபர், 2024

துடியன் என்ற பழங்குடியோன் - சொல்.

 துடியன் என்ற பழங்குடியினனுக்கு இச்சொல் அமைந்தது எங்கனம் என்பதை ஆய்வு செய்வோம்.

அடித்து ஒலி எழுப்பும் தோற்கருவிகளி லொன்று  டுடும் டுடும் என்ற  ஆழ்ந்தெழும் ஒலியை ஏற்படுத்துகின்றது.  அவ்வொலியும் ஏதோ நெஞ்சில் எதிரெழுவதுபோல் கேட்பவன் உணர்கின்றான். ஒலி இவ்வாறு கேட்பினும் டுடும் என்பது துடும் என்று தான் மாற்றப்படுதல் வேண்டும்.  எனவே டுடும் என்பது தமிழில் துடும் என்றுதான் மாற்றப்பட்டு  துடுமெனல் ஒலி எனப்பெயர் பெறும்.

மதங் மதங், மதங் மதங்  என்று எழும் ஒலியைச் செய்யும் தோற்கருவி,  மதங்கம் என்று பெயர்பெற்றது போல்வதே இது. இவற்றை மொழிநூலார் ஒப்பொலிச் சொற்கள் என்பர். காகா என்று கத்துவதான பறவை, காக்கை என்று பெயர்பெற்றது ஒப்பொலிச் சொல்தான்.

கதம் என்ற சொல்,  கிருதம் என்று பூசைமொழியில் வந்தது போல,  மதமதங்கென்பது மிருதம் என்று வரும். அதுமட்டுமா?   அமிழ்தம் என்ற சொல்லும் அமிருதம் என்று மாறி ஒலிக்கும்.  அது ஏனென்றால் உங்களுக்கு அம் அம்  என்று கேட்கும் ஒலி,  பாடித் திரிந்து தாளமும் கொட்டிக்கொள்ளும் பாணனுக்கு  அம்ரு அம்ரு,  அம்ரு அம்ரு என்று கேட்டதனால் இடையில் ஒரு இர் இர் என்ற ஒலியைக் கொடுத்தால்,  அது உண்மையான ஒலியை இன்னும் நன்றாக ஒப்பித்தது போல இருந்தது என்பது காண்க. நாய் லொள் லொள் என்று குலைப்பது போல் உங்களுக்குக் கேட்டால் வெள்ளைக்காரனுக்கு பவ்வவ் பவ்வவ் என்று கேட்பதாகவே உணர்கிறான்.  சீனனுக்கு கவ்கவ்  கவ்கவ் என்று ஒலிப்பதாக உணர்கிறான். உலகில் பலநாடுகட்கும் சென்று மற்றமொழிக்காரன் எப்படிக் கேட்கும் ஒலிகளை ஒப்பொலிகளாக உணர்ந்து மீட்டொலி செய்கிறான் என்று தெரிந்துவாருங்கள். சில எடுத்துக்காட்டுகளில் ஒப்பொலிச் சொற்களில் ஒற்றுமையும் காணப்படும். காகம் காகா என்று கத்துகிறது என்று தமிழன் சொன்னாலும்  கரைகிறது என்ற சொல்லின்மூலம் "குரோ" என்ற காக்கைப் பெயர்  கரை என்பதனோடு ஓரளவு ஒத்துப்போகிறது என்பதும் அறிக.

மதங்கம் அல்லது மிருதங்கம்  மதங்க் மதங்க் என்று ஒலிசெய்வதாகச் சொன்னாலும் மலாய்க்காரன்  அது கடம்கடம்  அல்லது கடங்கடங்க் கடங்கடங்க் என்று ஒலிசெய்வதாகச் சொல்கிறான்.  மிருதங்கம் என்பது ஓர் ஒப்பொலிதான்.

துடும் துடும் என்ற சொல்லிலிருந்து துடு> துடி > துடியன் என்ற சொல் உண்டாயிற்று. துடி என்ற சொல்லே ஒலிக்குறிப்பில் ஏற்பட்ட சொல் தானோ? இதை இங்கு ஆய்வுசெய்யவில்லை.  இன்னொரு நாள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.