Pages

திங்கள், 15 ஜூலை, 2024

அங்குலம்




அங்குலம் என்ற சொல்லைத் தமிழி லிருந்து எவ்வாறு பொருள்சொல்லுவது என்று பார்ப்போம். இதற்கு "விரற்கடை " அல்லது "விரற்கடை அளவு" என்று அகரவரிசைகள் பொருள்கூறும். இதுவும் சரியான பொருள்தான்.

இச்சொல்லை அண்கு + உல் + அம் என்று பிரிப்போம்.

அண்கு என்பதில் அண் என்பதற்கு அடுத்திருத்தல் என்று பொருள். அண்ணிய எனில் பக்கத்திலுள்ள. அண்ணுதல் வினைச்சொல்லுமாகும். உல் என்பது பல்பொருள் ஒரு சொல் லாவதுடன் ஓர் அடிச்சொல்லுமாகும். ஓரிடத்திலிருந்து இன்னோரிடம் செல்லுதலும் குறிக்கும். உல்: வளைவும் குறிக்கும். உலவுதல் என்றால் சுற்றிவருதலுமாகும்.

ஓரிடத்திலிருந்து அடுத்துச் சென்று அங்கு நின்றுவிட்டால் அது இடைத்தொலைவைக் குறிக்கும். இந்த இடைத்தொலைவுதான் விரற்கடைத் தொலைவு அல்லது அங்குலம் எனப்படுகிறது. நகரும் பொருள் எங்காவது சென்று நிற்கலாமென்றாலும் இங்கு கணக்குக்கு ஒரு விரற்கடை யளவில் நின்றுவிடுகிறது என்பதை அறியவும். அண்கு உல் என்பவற்றில் உல் என்பது முன்செலவைக் குறிக்கிறது பின்னர் அண்கு , அதாவது அண்மிய மாத்திரத்தில் சேர்ந்துவிடுகிறது அல்லது நின்றுவிடுகிறது. ஒருவிரற் கடைச் செலவாதலின், அது அங்குலம் ஆகிறது.

அண்கு - அண்மிச் சேர்கிறது : இங்குச் செலவு முடிகிறது.

உல் ( உலவியது ) - ஒரு விரலளவு. இங்கு உல் நேர்முற்செலவு குறிப்பது. உல் என்னும் மூலம் பல்பொருளது. அவற்றுள் ஒரு பொருளில் இங்கு வருகிறது.


இது பேச்சு வாக்கியமாய் இருந்தால், உல் அண் கு என்ற நிரலில் "சென்று சேர்ந்தது" என்ற பொருளில் வந்திருக்க வேண்டும். சொல்லாக்க மானதினால் முறைமாற்றாக வருகிறது. இதை ஏன் "உலண்கு" என்று நிரல்படுத்தவில்லை என்றால், முற்றிய சொல்லாக்கம் இங்கு தமிழ் மரபுக்குரிய ஒலியில் வரவில்லை. திருப்பிப்போட்டு அம் விகுதி ஏற்றினால் தமிழ்ச்சொல்லின் இசைவை ஒத்து வருதல் காண்க.

இதன் மூலம் அண்கு உல் அம் என்பதே சொற்பாகங்கள் என்பது தெளிவாகிறது.

இனி, சொற்கள் பாகப்பட்டு நிற்காமல் ஒழுகிசைவோடு முடிக்க, அண்கு என்பது அங்கு ஆகிறது. உல அம் என்பது உலம் ஆகிறது. அங்கு + உலம் > அங்குலம் ஆயிற்று என்று அறிக.

மெய் எழுத்து  ண்> ங் என்று மாறுவது பேச்சிலும் எழுத்திலும் காணலாம். கண்காணி > கங்காணி. ( கருப்பையா கங்காணி, செல்லப்பா கங்காணி என்பன போலும் பெயர்கள் தொழிலாளிகளின் மேற்பார்வையாளர்களுக்கு இயல்பாக வழங்கும்). இன்னும் வேறு சொற்களிலும் இப்படி மாறும். னகரமும் ஙகரமாய் ஒற்றுக்கள் வரும்போது மாறும், பழைய இடுகைகளில் கண்டு உணர்க. மற்ற உயிர்மெய்கள் வருமாயின் ஏற்ப மாறுதலடையும். எடுத்துக்காட்டு: பாண் சாலி > பாஞ்சாலி என்று வந்து பாணர் கொடிவழியைக் காட்டும். து என்பதும் சு என்று மாறும் : ஐந்து > அஞ்சு.  மந்தி என்பது  மன்+ தி என்று மாறிச் சொல்லானது. மனிதன் போன்றது என்பது சொல்லமைப்புப் பொருள்.

அங்குலம்  :  மிக்கத் திறனுடன் அமைக்கப்பட்ட சொல்.

உலகு என்பதிலும் உல் - உருண்டையாக, அ - அங்கு, கு - சேர்ந்தது என்று வருவது போலுமே இச்சொல்லும். முறைமாறி உல் என்பது முன் நின்றது.

கு - சேர்ந்து, வல் - வலிமையுடன், அ - ஆங்கு , அம் - அமைந்தது, குவலயம், இந்த உலகம் என்ற பொருளில் இச்சொல்லையும் காண்க. இங்கு கு முதலில் வந்துள்ளது. இது இருபிறப்பி. கு+ வலை + அ + அம் : சேர்ந்து சுற்றாக அமைந்தது உலகம் என்பதும் பொருள். வலை > வளை. வலிப்பு என்ற இழுப்பில் கோணல் அல்லது வளைவு இருக்கிறது என்றாலும், ளி என்று இடாமல் லி என்பதையே கொண்டமைத்தனர். சொல்லமைப்பின் ஆக்கத்தின் பின் வரும் ஆட்சியே சொல்லின் திறத்தை உறுதியாக்கும்.

சொற்களின் திறம் கண்டு அமைத்தோரைப் பாராட்டுங்கள். இது ஒரு காரண இடுகுறிப்பெயர். இங்கு செலவு அல்லது நகர்வு விரலின் ஒரு பகுதி அல்லது பக்கத்திலிருந்து இன்னொரு பகுதி அல்லது  பக்கத்துக்கு என்பதை வருவித்துப் பொருள்கொள்ள வேண்டியிருப்பதால், இது காரண இடுகுறிப் பெயர் ஆகிறது.  நாற்காலியைப் போலவே இதுவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.