Pages

சனி, 1 ஜூன், 2024

மண்திறம் உரைக்கும் மந்திரி.

இவ்வினிய வேளையில் மந்திரி  என்ற சொல்லின் திறமறிதல் இனிதாகும். இச்சொல் தமிழில் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. இது தமிழில் தோன்றிப் பிற உடன்பிறப்பு மொழிகளில் விரவிய சொல்லாகவும் இருக்கலாம்; அல்லது அங்கொரு மொழியிற் கிளைத்தெழுந்து தமிழிலும் திறம்பெற்ற சொல்லாகவும் இருக்கலாம். நாம் ஆராயப் புகுமுன் எதுவாக இஃது  இருக்குமோவென்பதே சரியான கேள்வி ஆகும்.  ஆராய்ந்தபின் ஆய்வுக்கு ஏற்ற வாறு  நம் முடிவு இருக்கவேண்டும். ஆய்வு செய்யுமுன் ஒன்றை முடிபுகொள்ளல் வழுவாகும். தமிழருக்கும் ஏனை இந்தியருக்கும் மலாய்மொழியினருக்கும் உள்ள நீண்டகால உறவின் விளைவாக அம்மொழியிலும் இச்சொல் வழங்கிவருகிறது.,  Menteri Kewangan என்றால் நிதியமைச்சர். இங்கு Menteri என்ற சொல் அவ்வாறே ஆளப்பெறுகிறது. நிதியைக் குறிக்கும் wang என்ற சொல் சீனமொழிச் சொல். மலாய் கலவையாய் எழுந்த மொழியாதலின் பல சொற்களும் அங்கு வழங்குதல் காணலாம். பல மக்களுடனும் கலந்துறவாடியதன் விளைவாக அவர்கள் போலினீசியச் சொற்களைப் பயன்படுத்தவில்லை அல்லது மறந்துவிட்டனர் எனலாம்.

நாம் இங்கு மந்திரி என்ற சொல்லை ஆய்கிறோம். குறளில்

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்  639

எனக் காண்க. 

மந்திரி என்ற சொல் இங்கு வெகு பொருத்தமானது.  அமைச்சர் என்ற சொல் அரசு என்னும் அமைப்பில் உள்ளடங்கி அரசற்குச் சூழுரை நல்கி வேலை பார்ப்பவர் என்ற பொருளைத் தருகிறது.  ஆனால் மந்திரி என்ற சொல் திறமான முறையில் அரசு செழிக்க மற்றும் நாடு செழிக்க நல்லுரைகளை வழங்கி முன்னேற்றம் அடையப் பாடுபடவேண்டியவர் என்ற அழுத்தத்தைத் தருகிறது. இப்பொருள் மந்திரி என்ற சொல்லிலே அமைந்திருக்கிறது. ஆகவே இந்த முரண்பட்ட நிலையை நன்கெடுத்துக் காட்டும் சொல்லாகும்.

மாதம்தோறும் மும்முறை மழைபொழிகிறதா என்பதை மந்திரி அரசற்குச் சொல்வார் என்று ஒரு பழைய கதை சொல்கிறது.மழை பொழிந்தாலே மண் திறம் பெறும். விளைச்சல் பெருகும்,  இவ்வாறு மழைப்பொழிவு உதவவில்லை என்றால் மந்திரி பாசனத்தின் மேம்பாட்டுக்குரிய வேலைகளை மேற்கொள்ளவேண்டும், அதுவே அவரின் முதலாய பணியாகும். இப்பொருள் மந்திரி என்ற சொல்லில் அமைந்து கிடக்கிறது.

[ அரசன், மந்திரி இருவரும் ஓர் இடத்திலே இருந்தாலும், மழைப்பொழிவு உதவாத நிலையில், மாற்று வழிகட்கு ஏற்பாடு செய்தல் மந்திரியின் கடன். (Duty Scheme, Discharge of Responsibilities). King had other responsibilities.  ]

மண் திறம் என்றால் நாட்டு விளைநிலங்களின் நிலை மற்றும் செழிப்பு, இதை மேம்படுத்தவே மண்திறம் காக்கும் மந்திரிகள் முற்காலத்தில் அமர்த்தப்பட்டனர். மந்திரி என்ற சொல்லும் இவர்களின் இந்த ஆதிகாலக் கடமையிலிருந்தே வந்தது ஆகும். Indian people were basically of agricultural societies. Taxes were paid by them to the ruling classes.

மண் திறம் > மண்+ திற+ இ >  மண்திறி >  மண்திரி >  மந்திரி  என அமைந்தது இச்சொல்.

றகரம் ரகரமாகுதல்,  ஒலியியல் மாற்றம்.

இங்குத் திற இ என்பது திரி ஆனது. இதுபோல் அமைந்த சொற்கள்:

திரிபுகளை மனத்துள் கொள்க:- [இவை சொல்லாக்கப் புணர்ச்சி முறை. உரை மற்றும் செய்யுளுக்கு உரிய புணரியல் சார்ந்தவை அல்ல]

மன்னும் திறம் >  மன் திறம் > மந்திரம்.

மன்னுதல் - நிலைபெறுதல். ஒருவன் தின்றவுடன் வாந்தி எடுக்கவேண்டும் என்று "மந்திரம்" செய்கிறான் இன்னொருவன்.  இது குறிப்பிட்ட காலத்துக்குத்  தொடரும்படி செய்யப்படும்.  இதுதான் இங்கு "  மன்னுதல்" ( நிற்றல் அல்லது நிலைபெறுதல்) எனப்படுகிறது. 

தன் திறம் >  தந்திரம்.

தண் + செய் >  தஞ்செய்.  > தஞ்சை.  ஊர்ப்பெயர்.

தண்செலும் >  தண்செல்ம்> தஞ்சம்.  ( கடுவெயிலில் நிழலை நாடுதல்போல் ஒரு துன்பத்தில் அல்லது கெடுதலினின்று காப்பான இடம் புகுதல்) . செல்ம் என்று குறுக்கும்வழி குறுக்குதல்.

திறம் என்ற இறுதி வரும் சொற்களில் முன் வேறுபதத்துடன் கூடிய பின், திறம் என்பது திரம் என்று ஆகும். மண்திறம்> மண்திரி > மந்திரி. வல்லின றகரம் சொல்லிற் புணரும் காலை தன் வன்மை குன்றிவிடும்.  இது பல சொற்களில் காணப்பெறும் திரிபு ஆகும்.  மண்ணின் அல்லது விளைநிலங்களின் மாற்றங்களை ஆய்ந்து ஆலோசனை வழங்குவோனே இவன். மண் திரி > மந்திரி எனினும் ஒப்பதே ஆகும்.

உணவு உண்டாக்குதல் ஒரு முதன்மையான கவனத்துக்குரிய வேலையாதலின் இதற்காகவே அமைந்த பதவி மந்திரி வேலை. மண்ணின் திறம் அல்லது மண்ணின் திரிபுகள் முதன்மையான கவனத்துக்குரியதாகும்.

திறம்> திறை.  வரியைக் குறிக்கும்.  திறை விதிப்பவர் என்று பொருள் கொண்டாலும், மண்திறை> மண்திரை> மண்+திர்+ இ > மண்திரி> மந்திரி என்றே வரும். திறை+காசு என்ற கூட்டுச்சொல்லில், திறை என்பது திரை என்றே மாறும். இது இவ்விளக்கத்தை மாற்றிவிடாது.  திரைக்காசு ( ரை) என்றே, வல்லினம் இடையினமாகும். மறவாதீர். இது ஒலியியல் சார்ந்த திரிபு ஆகும். இந்த ஒலிமாற்ற நுட்பத்தை அறிந்துகொள்க. ஒருசொன்னீர்மையில் ஒலி மாறும்.  அறிக. ஒருசொன்னீர்மை - formation into a single word. This pertains to contrastive relationships in speech sounds.

கரிகால் சோழன் முதலியோர் காவிரி ஆறு வெட்டி வளம் சேர்த்தது காண்க. அதனால் சோழநாடு சோறுடைத்து என்ற வரணனை எழுந்தது. பிற்காலத்தில் மந்திரிகள் பலவற்றிலும் ஆலோசனை கூறுவாராயினர். இது வேலைவிரிவு ஆகும். இது இயல்பான வளர்ச்சியே ஆகும். பிற்காலத்தில் துறைக்கொரு மந்திரி அமைந்தனர்.

மண்திறம்> மண்திரம்> மந்திரி என்பது உணர்க.

மண்டு(தல்) என்பது " மந்து " என்று மாறுதல்

மாடுகள் ஆடுகள் மண்டிய நிலையே மந்தை.  மண்டுதல் வினைச்சொல்.

மண்டு> மண்து> மந் து ஐ >  மந்தை. (கால்நடைகள் மண்டி யிருக்குமிடம்).  சொல்லை இவ்வாறு திரித்து அமைப்பதே அறிவுடைமை, மண்டு+ ஐ > மண்டை என்று அமைப்பது தலையைக் குறிக்கும் சொல்லுடன் மயங்குதலை உண்டாக்கும், அதை எப்படித் தவிர்ப்பது? ஆகவே மண்டு என்ற சொல்லில் வரும் டு என்பது உண்மையில் து என்பதே,  யாது வழிஎனின்,  சொல்லின் தாத்தாவைக் கண்டுபிடித்து, மண் து ஐ >  மந்தை என்று சொல்லமைத்தனர். சொற்களை முட்டாள்தனமாக அமைக்காமல் பிற்காலத்தவருக்குப் பொருள்மாறாட்டம் ஏற்பாடாமல் அமைத்தனர். அவர்களை வணங்குவோம். பொருள் சொல்கையில் ஆடுமாடுகள் "மண்டிடம்" என்க.

மண் - சொல்லின் விரிபொருள்

மண் என்பது நாளடைவில் நாட்டையே குறித்தது இயல்பு. மண்ணுலகு என்பது விண்ணுலகை வேறுபடுத்தி அறிய ஒர் நல்ல சொற்றொடர்.

வேறு திரிபுகள்:  மண் சிலை > மஞ்சிலை.   இங்கு ஞ் என்னும் மெய் வந்தது காண்க. மட்சிலை என்று அமைப்பது புணரியலை ஒட்டிய முறை. சொல் அவ்வாறு அமையவில்லை.  மொழிக்கு அதிகச் சொற்கள் அமையவேண்டும். அதுவே தேவை என் க.   

மண் என்பதன் வேறு பொருண்மைகள்:  1 . உயர்வு, மாட்சிமை  2 ஒப்பனை3 உலகம்.  மண்திரி> மந்திரி என்ற திரிபு, தொடக்கத்தில் வேளாண்மை மேற்பார்வை என்று பொருள்பட்டாலும் நாளடைவில் மாட்சிமைப் பொருளை எட்டிற்று.

வரி கட்டுகிறவர்கள் விளைச்சல் செய்வோரே. இதனாலும்  மண்திரி> மந்திரி என்பது பொருத்தம் ஆகிறது.  மண்+திரை+இ > மண்+திர்+ இ > மந்திரி என்றுமாகும். நிலவரி, விளைச்சல் வரி முதலியன விதிப்பவர். எவ்வாறாயினும் தமிழ்ச்சொல்லே இதுவாகும். திர் என்பதே மூலச்சொல்.  இது மூலச்சொல். திரும்பு என்ற சொல்லுக்கும் இதுவே மூலம்.

அரசனின் வேலை என்ன? மக்களைக் காப்பது.  எல்லோருக்கும் போதுமான சோறு கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது. மண்ணிலிருந்து விளைவனவுக்குத் திறையும் வாங்கவேண்டும். திரை என்று எடுத்துக்கொண்டாலும், மண்+திர்+இ என்று வந்து மந்திரி என்று திரிபு அடைகிறது, இது சொல்லைப்பார்த்தவுடன் தெரிந்துவிடுமா? தெரிந்துவிடுமானால் ஏன் மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்று தொல்காப்பியமுனிவர் சூத்திரம் செய்யவேண்டும்? இதை புரிந்து கொள்ளவேண்டும். ( சூழ்ந்து - ஆலோசித்து, திரு - உயர்வான முறையில், அம் - அமைபெறுவது:  சூத்திரம் ). "நூற்பா".

சூழ்+ திரு+ அம் > சூத்திரம்,  ஒ.நோ: வாழ்த்து+ இயம்> வாத்தியம்.

பூசை மொழி (சமஸ்கிருதம்)  இந்தோ ஐரோப்பியம் என்பது ஐரோப்பியர் கொள்கை. அதிலிருந்து பெருவாரியான சொற்களை அவர்கள் உரோமப் பேரரசு காலத்தில் எடுத்துக்கொண்டு தங்கள் மொழி/மொழிகளைச் செழுமைப் படுத்தினர். இது (வட அல்லது மரத்தடி மொழி) நம் உள்நாட்டு மொழி.  ஐரோப்பியரிடமிருந்து நாம் பெற்றதன்று. இதைப் பிற அறிஞர்களும் கூறியுள்ளனர். இதை இப்போது தேடி எடுக்க நேரமில்லை. முன் ஓர் இடுகையில் குறிப்பிட்ட நினைவு உள்ளது, இங்குள்ள இடுகைகளில் தேடிப் பிடிக்கவும்,


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.