Pages

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

பாசாங்கு

[இங்கு நீர், உம் என்று வரும் சொற்கள் உம்மை [( வாசிப்பவரை) க்] குறிப்பவை அல்ல)]

பசுமையாக இருப்பவை எல்லாம்  இயற்கைப் பசுமையாய் இருத்தல் அருமையே. பசுமையான இலை, தழை, செடி, கொடி, மரக்கிளைகள், வேறு துண்டுப் பொருள்கள் எல்லாவற்றையும் மேலே போர்த்திக்கொண்டு, அப்போர்வையின் கீழ் உம் எதிரிப்படைஞர்கள் ஒளிந்திருக்கவும் கூடும். அற்றம் பார்த்து உள்ளே அமர்ந்திருப்பர். நீர் வருகிறீர் என்று கண்ட வுடன் அண்மை அறிந்து  மேற்போர்த்தியவற்றை விலக்கிவிட்டு உம்மைக் கொல்வதற்கு முந்துவர். நீர் ஏமாளித்தனத்துடன் நடமாடினீராயின் கொலைப்படவும் கூடும். திடீரென்று வெளிப்பட்டு அணுகுவோரிடம் தப்பிச் செல்வதும் உலகில் அரிதாகவே நடைபெறுவதாகும். 

இதற்கான சுற்றுச்சார்புகள் அமைந்த இடம் ஒரு காடுதான். வீதியில் கொள்ளை யடிப்பவனுக்குப் பசுமைப் போர்வைகள் தேவைப்படாது.  அதுவன்று நாம் இங்கே கருதுவது. பாசாங்கு என்ற சொல்லைத்தான் விளக்க வருகிறோம். வேண்டிய காட்சியமைப்புகளைக் கற்பனை செய்துகொள்ளும்.

பாசாங்கு  என்பதில் பசுமை +  அம் + கு என்ற மூன்று பகவுகள் உள்ளன. பசுமை என்பதை மேலே மீண்டும் படித்துத் தெளிந்துகொள்ளும்.  அம் என்பது அழகு, அமைப்பு என்றெல்லாம் பொருள்படும் அடிச்சொல்.  இங்கு  இடைநிலையாக வந்துள்ளது.  கு என்பது இங்கு விகுதியாக வந்துள்ளது. நாக்கு என்பதில் ஒரு விகுதி  " கு" என்று வந்துள்ளது போலுமே இது. விகுதி என்பது சொல்லை மிகுதிப்படுத்தி வேறு ஒரு புதுச்சொல்லை உண்டாக்கும் முற்றுநிலை.

பாசாங் என்று மலாய் மொழியிலும் ஒரு சொல் உள்ளது.  அது பொருத்துதல் என்ற பொருளுடையது, மலாய் மொழி இயல்பின்படி சொல்லிறுதியில் முழுக் குகரம் வருவதரிது.. பொருளில் சில ஒற்றுமைகள் இருத்தல் கூடும்.  இருப்பினும் ஒன்றிலிருந்து மற்றது வந்தது என்று சொல்வதற்கில்லை. ஆயினும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் தென் கிழக்காசிய நாடுகள் முழுமையும் வேற்று இனங்களுடன் பழகிக் கலந்துள்ளனர். எனவே சொற்கலப்புகள் இயல்பானவையே. குமரிக்கண்ட அழிவின்பின் அங்கிருந்து தப்பி ஓடியவர்கள் கிமர் என்ற அடையாளம் கொண்டவர்களாக இப்போது இருக்கின்றனர் என்று  சிலர் (ஆய்வாளர்கள் ) கூறுகின்றனர்.  பல்லவ எழுத்துக்களுடன் கம்போடியக் கிமர் எழுத்துக்கள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. சோழ இளவரசி ஒருத்தியை அனிருத்த என்ற கம்போடிய இளவரசன் மணந்துகொண்டான் என்பர். அங்கோர்வாட் ஆலயங்களும் கருதற்குரியவை. நீல உத்தமன் என்ற சோழத் தளபதி இந்தோனீசிய பாலிம்பாங்க் தீவிலிருந்து வந்து சிங்கபுரத்தில் (சிங்கப்பூரில்) சோழ ஆளுநனாக இருந்து ஒரு மலாய் இளவரசியையோ ( அழகியையோ ) மணந்தான்.  பின் இவன் மலாய்மகனாகவே மாறி  Sang Nila Utama என்ற பெயருடன் ஆண்டான் என்பர். ( மலாயா தேச சரித்திரக் காட்சிகள், ராமகிருஷ்ண மடம் வெளியீடு, ஆசிரியர்: பிரமாச்சாரி கைலாசம் ).  வேறு சீன எழுத்தாளர்கள் எதியவையும் உள்ளன, இந்தியத் தொடர்பு பற்றியவை இவை, இப்போது எம்மிடம் இல. ( கோவிட் காலத்தில் எம் வீடு கைவிடப்பட்டு அழிந்தன ). இவற்றைக் கொண்டு யாம் மேற்கொண்டு ஒன்றும் சொல் ஆய்வில் ஈடுபடவில்லை. (மலாய் மொழிச் சொற்களை ஏன் இங்குக் குறிப்பிட வேண்டும் என்பார்க்கு இது போதுமானது). 

 பசுமை என்பதில் மை விகுதி விலகிற்று.  பசு+ அம் என்பது பாசாம் என்று நீண்டது.  வேறு சொற்பகவுகள் வந்து சேர்கையில் இவ்வாறு சொற்கள் நீள்வது இயல்பு. (பசு + அம் + கு > பாசு+ ஆம் + கு ).வந்தான் என்ற வினைமுற்று வாங்க என்று மாறுகிறதன்றோ.  அது வங்க என்று தோன்றுவதில்லை. வினைமுற்று, வியங்கோள்வினை, பொருட்பெயர்ச் சொல்லாக்கம் என்று எல்லா நிலையிலும் சொற்களில் மாற்றங்கள் நிகழும். ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்தாலே ஒளிவுகளும்  நெளிவுகளும் சுழிவுகளும் புரியும்.

பசு( மை) > பசு> பாசி. ( பசு+ இ ).  பசு என்பது பாசு என்று மாறி இகரம் ஈற்றில் வந்து சொல்லாயிற்று.

இத்துடன் முடிப்போம்.

அறிக மகிழ்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.