ரேகை என்ற சொல் தமிழென்பதை வெளியிட்டோம். இந்த வலைப்பூவைத் தொடங்குமுன்பிருந்தே இது எம்மால் சொல்லப்பட்டதுதான்.
இச்சொல்லின் இரு, ஏகு ஐ என்ற மூன்று பகவுகள் உள்ளன. ஒரு ரேகை என்பது ஓரிடத்திலிருந்து இன்னும் ஓர் இடத்திற்குச் செல்லும் கோடுதான். வேறு எதுவும் இந்தச் சொல்லில் மந்திர தந்திரங்கள் இல்லை.
ஏகுதல் என்பது எப்போதாவது நாம் நூலில் காணும் சொல்தான். இதைப் பிரித்தாலே இதன் பொருள் தெளிவாகிவிடும். ஏ - எங்காவது, கு - சென்று அவ்விடத்தை அடைவது : என்பதே பொருள். எளியதான ஓரெழுத்து மொழியில் தொடங்கிப் பின்னர் பல எழுத்துக்களும் அசைகளும் உள்ள சொற்களைத் தானே உருவாக்கிக்கொண்டு அமைவுற்ற மொழியே தமிழ். சீனம்போன்ற உலகின் மொழிகள் இன்னும் ஓரசை மொழிகளாகவே ( monosyllabic ) உள்ளன. கா என்பது சீன மொழியில் ஓர் ஓரசைச் சொல். இன்னும் நேரசைச் சொல்லாகவே உள்ளது. இதன்பொருள் "கடி(த்தல்)" என்பது. ஆனால் தமிழில் கடி என்ற சொல் உண்டாகி, நிரையசைச் சொல்லாக வழங்கிவருகிறது. தொடக்க காலத்தில் தமிழிலும் கா என்றே இருந்திருக்கும். ஆனால் இது தமிழில் கடி என்ற ஈரெழுத்துச் சொல்லாகிவிட்டது. இது மொழி அடைந்த முன்னேற்றமாகும். ஏகுதல் என்றால் செல்லுதல் என்று பொருள் என்பதைச் சுவையுடன் உணர்ந்திருப்பீர்கள். இது மொழிநூல் சார் கருத்து ஆதலின், இதை விரிக்காமல் விடுப்போம்.
எழுதுகோலை வைத்த இடத்திலே இருந்து மேலும் இழுக்காவிட்டால், கோடு என்பது உண்டாக மாட்டாது. அப்போது வெறும் ஒற்றைப் புள்ளியையே வைத்துள்ளோம். இழுத்தாலே அது கோடு ஆகிறது. இழுப்பது கோடு. இழு - இலு > இல். இல் என்பதும் கோடு அல்லது பலபுள்ளிகளின் இணைப்பு ஆகும், அப்போது அது எல்லை குறிப்பதாக ஆகிவிடவும் கூடும். மிக்கச் சரியான முறையில் இல் என்பது இடம், வீடு, ஓர் உருபு என்று பல பொருள் உணர்த்தும். ஆகவே இழு என்பதும் இல் என்பதும் தொடர்புடைய சொற்கள் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். எது முதல் என்பதைக் கருதினால், இது இல்> இலு> இழு என்றாகும்,
கோடிழுக்கும் போது, எழுதுகோலின் முள்முனையும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தில் போய் முடிவதால், ஏ- கு என்பது சரியாக அமைந்த தமிழ்ச்சொல் ஆகும். தொடக்கம், கோடிழுப்புச் செல்லுகை, முடிவு என்பவையே இரேகை என்பதன் உள்ளடக்கம் ஆகும்.
இரேகை என்று அமைந்தபின் இச்சொல் தன் இகரத்தை இழந்து, ரேகை என்று தலைவெட்டுண்ட சொல்லாகி வழங்கி வருவதலால், இதனைப் பலரால் தமிழ்ச்சொல் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இங்கு கூறினவை மூலமாக இதை உணர்ந்து போதிப்பீராக.
இச்சொல் வேறு மொழிகளுக்கும் சென்று வழங்குகிறது. ரேகா என்ற பெண்ணின் பெயரும் இதிலிருந்து பிறந்த சொல்தான். இந்தியாவிலும் பிறவிடங்களிலும் இச்சொல் பரவிச் சேவை செய்துவருகிறது. அடிப்படைப் பொருள் கோடுதான்.
தமிழில் இருந்தால் தமிழன் தொழுகையில் வழங்கிய பூசுர மொழியிலும் அது இருக்கவே செய்யும். தமிழனின் அரசுகள் இமயம் வரை விரிந்து ஆசியாவில் பல நாடுகட்கும் பரவியதால் இது போலும் சொற்கள் எங்கும் காணப்படாமல் இருக்கவியலாது.
சொற்கள் ஆகார விகுதி பெற்று முடிவதும் தமிழ் மரபுதான். நிலா, பலா (பல சுளைகள் உள்ளது), உலா, சுறா எனப்பல சொற்கள் உண்டு. கூசா என்பது தமிழ், கூம்பிய வாய்ப்பகுதி உடையது என்று பொருள், ஆனால் பின்னர் சா என்பது ஜா ஆகிக் கூஜா ஆனது. வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் என்று தொல்காப்பியம் கூறும்.
எவனொருவன் சாவு தொடர்பான தொழிலை மேற்கொள்ளுகிறானோ அவனுக்கே யாக்கை நிலையாமை, இறைவன் செயல் பற்றிய எண்ணங்கள் உருவாகி, தெய்வநெறிகள் பற்றிய கருத்துருவாக்கம் ஏற்படும். அவ்வாய்ப்பு அவனுக்கே அதிகம். பிறருக்கு ஒரோவழி ஏற்படலாம் இக்கருத்துகளின் கோவையே சா+ திறம்> சாத்திரம்> சாஸ்திரம் ஆயிற்று. சா= சாவு பற்றியது. திறம் = திறத்தை விளக்குவது. சாத்திரம் என்பது தொடக்கத்தில் சாவு அல்லது இறைவன் பற்றி விளக்கி, பின்னர் பிற பொருளும் கூறித் தெளிவாக்கிய நூல் அல்லது அறிவுநூல்.
சமஸ்கிருதம் என்ற சொல் சமம், கதம் என்ற இருசொற்களின் கோவையே. இதைப் பல்வேறு வகைகளில் அறிஞர்கள் ஆய்வு செய்து, வேறுபட்ட பொருண்மைகளைத் தெரிவித்துள்ளனர். சமம் என்றால் ஒப்புமை. கதம் என்றால் ஒலி. கத்து> கது > கதம். கத்து கதறு என்று கத் என்ற அடியில் வந்த சொற்கள் பலவும் தமிழிலுள்ளவை. சமமான் ஒலிகளால் - அதாவது தமிழுக்குச் சமதையான ஒலிகளால் ஆனதே சமஸ்கிருதம் ஆகும். கதம் என்பது கிருதம் என்று திரியும். சம கதம் > சமக் கிருதம் > சமஸ்கிருதம், மற்றும் சங்கதம் என்றும் இந்தத் தொழுகை மொழி குறிப்புறும். ரேகை என்ற தலைக்குறைச் சொல் சமஸ்கிருதம் என்ற தொழுகை மொழியிலும் உள்ளது கண்டுகொள்க.
சமஸ்கிருதம் என்பதற்கு வேறு பொருள் கூறினோரும் பலர்.
கமில் சுவலெபெல் ஒப்புக்கொண்டதுபோல் தமிழ் என்பது தம் இல் மொழி> தமிழ் மொழி என்பது சரியானால், அதற்குச் சமமான ஒலிகளைக் கொண்டு இயங்குவது சம கதம்> சமஸ்கிருதம் என்றாகும். சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள் இங்கு சிறந்து ஏற்புடையதாகிறது. ஒலித் திருத்தத்தின் மூலமே தமிழ் வேறுபடுகிறது. தொல்காப்பியர் ஏற்காத ஒலிகள் வடவெழுத்தொலிகள். வடம் என்றால்: பலகை என்று பொருள். வீடுகளுக்கு வெளியே மரப்பலகையில் அமர்ந்துகொண்டு ஓதினமையால் அது வடமொழி என்று பெயர்பெற்றது என்றும் சொல்லலாம். சொற்கள் கயிறுபோல் நீண்டுசென்றதால் அது பெயராயிற்று என்றும் சொல்லலாம். வட என்றால் வடக்குத் திசை என்பது மட்டும் பொருளன்று. இம்மொழி தென்னாட்டில் உருவாக்கப் பட்டு வடதிசையில் தமிழர்களால் பரப்பப்பட்டதென்றும் கூறுவதுண்டு. பழங்காலப் பூசாரிமார் தொழுகை மொழியாகப் பயன்படுத்தினர் இதனை.
வீட்டுக்கு வெளியில் மரப்பலகைகளில் இருந்தபடி பாடியவர்கள் பாணர்களே. அவர்களும் இம்மொழியில் அறிஞர்கள். அவர்களின் ஒருவரான பாணினியே இம்மொழிக்கு இலக்கணம் வகுத்தான். பாண் என்ற அடிச்சொல்லைக் காண்க. இம்மொழியில் முதற்கவியாகிய வால்மிகி இத்தகைமையரே.
இதை இந்தோ ஐரோப்பியம் என்று கூறியதானது, பாணர், வேடர் முதலானவர்களுக்குச் சேரவேண்டிய பெருமையை மறுத்துரைத்த களவு ஆகும்.
இது சந்தாசா என்றும் பெயர் பெற்றது. சந்த அசைகள் உள்ள மொழி என்பது பொருள். பாட்டுக்கு உரிய மொழி. பாட்டுப் பாடியவர்கள் பெரும்பாலும் பாணர். பிறரும் இருந்தனர். இவை முன்னர் யாம் விளக்கியதுதான். தம் தம்> சந்தம், தகர சகரப் போலி. பூசையில் பாடும் மொழி.
எழுத்து ஒவ்வொன்றுக்கும் பொருள் சொல்லக்கூடிய திறன் தமிழுக்கு உள்ளது. பிறமொழிகட்கு இல்லை என்பதன்று வாதம், உணர்க. அவ்வம்மொழியையும் ஆராய்ந்து சொல்லவேண்டும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.