Pages

வெள்ளி, 1 மார்ச், 2024

பண்பும் பண்ணையாரும்

 பண் என்னும் சொல், தமிழில் கேட்டின்புறுதற்குரிய இனிமையான சொல்.  இச்சொல்லிலிருந்துதான்,  பண்பு என்ற அழகிய  குணம் குறிக்கும் சொல் உண்டாயிற்று.  குணம் என்ற சொல்லும்  ஈராயிரம்  ஆண்டுகட்கு மேலும் பழமையான சொல்.  திருக்குறளிலும் பயன்பட்டு,  "  எண் குணத்தான்",   "குணமென்னும் குன்றேறி  நின்றார்"  என்றெல்லாம் வருகிறது.  குணித்தல் என்பதும் கணித்தல் என்பதும் வினைச்சொற்கள்.  எந்த மொழியில் வினையாக வருகிறதோ,  அந்த மொழிக்கு அஃது உரியது என்பதுதான் சரி என்று மேல்நாட்டு மொழிநூலார் முடிவு செய்துள்ளனர்.  எம்  கருத்துக்கு இது மிக்கப் பொருந்துவது என்று அறிக.

குணி + அம் . இவற்றைப்  புணர்த்தினால், முதலில் குணி என்பதிலுள்ள இகரம் கெடும்,------என்றால் விலக்குறும்.  குண் என்பதே அடிச்சொல்.   இதனோடு அம் ( அமைப்பு) என்பதன் அடியான விகுதியை இணைக்க,  குணம் என்று வந்துவிடும்.  குணியம் என்ற சொல்லைப் பண்டைத் தமிழர் அமைக்கவில்லை என்று தெரிகிறது,   இதன் காரணம் இது எந்த நூலிலும் யாமும் கண்டறிய இயலவில்லை.  சிந்தித்துக் கண்டறியும் ஏதேனும் பொருளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டவேண்டின்  அதற்குக் குணியம் என்று  பெயரிடலாம்.  ஆனால் குண்ணியம் என்று ணகர இரட்டிப்புச் சொல்,  பெருக்கப்படும் எண்ணைக் குறிக்கப் பயன்படுகிறது.  (  multiplicand ).

பண்டைக் காலத்தில் பாணர்களே வீடுவீடாகப் போய்ப் பரிசில் வாங்கிச் சென்றனர்.  பரிசில் கிட்டினால் கூடவருபவனுடன் பகிர்ந்து கொள்வதால்,  பயன் சிறிதாகிவிடும். இதைச் சரிக்கட்ட, போகும் வீடுகளை மிகுத்துக்கொள்ளுதல் வேண்டும். வீட்டுக்கு வருகிறவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது வீட்டிலுள்ளோர் கருதுவதற் குரியதாகிவிடுகிறது.  பரிசில் கொடாத மன்னன்பால் பாவலன் சீற்றம் கொள்கிறபோது,  அவன் தன் பண்புநலனைக் காட்டுகிறான். இதைப் பிறர் அறியின், அச்செயலைக் குணிக்கின்றனர். பாவலன் பண்பு யாது?  வீட்டுக்காரனின் பண்பு யாது?  என்பதெல்லாம் அறிதரு பொருளாகிவிடுகிறது.  பண்பு என்ற சொல்லே இவ்வாறு தோன்றியதுதான்.  

இவ்வாறு, பாடியவர்களுக்குப்  பெருஞ்செல்வம் கிடைத்ததும் உண்டு. நிலம் வழங்கிய வள்ளல்களும் இருந்தனர்.  நன்கு பெருஞ்செல்வம் பெற்றவன், நாளடைவில் பண்ணை அமைத்துக்கொண்டு, நிலையான வாழ்வினனாகியதால்,  அவன் இடம் "பண்ணை"யாயிற்று.   பண்ணன் என்றோ பாணன் என்றோ அறியப்பட்டவன்,  பண்ணையார் என்று பின்னர் அறியப்பட்டான்.  பாணர்கள் அரசர்களாகவும் ஆகினார். பிற்காலத்து, பாணர்களும் போர்களில் ஈடுபட்டு,  தோற்றுவிட்டகாலைத்  தம் அரசை இழந்தனர். பாடிப் பிழைத்தவர்கள் செல்வம் வந்துவிட்டபின் பாடுதலொழித்து அமைதியாக வாழ்ந்த காலத்து வந்த சொல்லே பண்ணை என்பதாகும்.  பண்ணையின் கட்டிய வீடு  பண்ணைவீடு  ஆயிற்று.  பண்ணை ஐய( ர் ) வீடு  என்றும் இது  குறிக்கப்பட்டது.  ரகர ஒற்று வீழ்ந்த கூட்டுச்சொல்,  இது பண்ணைய வீடு ஆனது.(பண்ணை ஐயா வீடு என்று இதை உணர்ந்து கொள்ளலாம்).

பாடுவோர் இருந்த, --------  பாடி  வெளியில் வந்து கேட்போர் அவர்களின் இல்லமாய்க் கருதிய இடமே பண்ணை.  அந்தப்  பொருண்மை கால ஓட்டத்தில் ஒழிந்தது.  பாணர் விளைச்சல் வேலைகளில் ஈடுபட்டதால்,  பொருள்  மாறிற்று.

பாண்பெண்,  சிறந்த குணத்தினள் ஆகி.  பாண்+ சால்+ இ > பாண்சாலி> பாஞ்சாலி  ஆயினாள். தெய்வமாயினாள்.   சாலுதல் நிறைவு.  சால்பு என்ற சொல்லும் அறிக.  தண்+ செய் >  தண்செய்,  தஞ்சை  ஆனதுபோல்.

இன்னும் சொற்களைப் பின் அறிவோம். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சில திருத்தங்கள்: 03032024 0328

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.