Pages

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

பீலிவளை என்ற நாகா இளவரசியின் பெயர்ப் பொருள் மற்றும்........

 பீலிவளை என்பது தலைப்பில்  குறித்ததுபோல்,  நாகமக்கள் இளவரசியின் பெயர்.  இவள் மஞ்சள் நிறத் தோல் உள்ள நாக அழகி என்று நாம் கருதலாம்.  மஞ்சள் நிற மனிதத் தோல் என்பது இன்றைய புலப்பாட்டில்,  வெள்ளை இனம் என்று சொல்லக்கூடியதுதான்.  மஞ்சள் நிறமுடைய யப்பானியரும் சீனரும் பிறரும் வெள்ளையராக ஏற்கத் தக்கவர்கள் என்பதே இன்றை நிலை ஆகும்.  சோழ இளவரசன் வெல்வேள் கிள்ளி இவள் அழகில் மயங்கி இரண்டாம் மனைவியாகக் கட்டிக்கொண்டான் என்று நாம் நினைப்பதில் உண்மையுண்டு. முதலாமவள் பாண அரசன் ஒருவனின் மகள்.  நாகர்கள் தலை சற்றுப் பெரிதாக உடையவர்கள். தொடை பெரிதான  உடலர்.  மூக்கு வெளித்தள்ளாமல் உள்ளடங்கி இருக்கும். உதடுகள் நடுத்தரத் தடிப்பு உள்ளவைதாம்.

தமிழரிடை ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை நோக்கினால்,  ஒன்று கருப்பாகவும் இன்னொன்று கருவல்நிறம் குறைந்தும் அல்லது சிவப்பாகவும் இருத்தலைக் காண்கிறோம்.  இத்தகைய பிறப்புவகைகள் தமிழர் இற்றை நிலையில் கலப்பு இனத்தவர் என்பதை அறிவியற்படி அறிவிப்பதாகும்.  தொழிலடிப்படையாய் உருவான சாதிகளுக்குள்,  பலதரப்பட்ட மனிதர்களும் ஒரு தொழில் மேற்கொண்டு சம்பாதித்து உணவு கொண்டநிலையில்,  அவை பிரிக்கப்பட்டன.  ஓரினமல்லாத கலப்பு மக்களைப்  பிரித்து அமைத்தால், இவ்வாறுதான் நிறத்தில் வேறுபாடுகள் காணக்கிடைக்கும்.  ஒருமொழியையே பேசினாலும்,  அதிலும் வட்டார வழக்குகள் வேறுபட நிற்பனவாம்.  ஆகவே தமிழரிடைச் சாதிகள் என்பன, ஒவ்வொரு சாதியும் ஒரு பற்றுதலை உருவாக்கினாலும்,  தொல்காப்பியர் மொழியில் சொல்லவேண்டுமானால்,  "கலந்த மயக்கம் பயந்தது  ஆதலின்"  என்றுதான் பாடவேண்டும்!!

தமிழ் என்ற சொல்தான்  திரிந்து திராவிடம் ஆனது என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார். இதைச்சொல்லுமுன்,  தம் இல் மொழி என்பதுதான் திரிந்து தமில்>  தமிழ் என்று மாற்றிற்று என்றும் கூறினார். பின்னது செக் நாட்டுப் புலவர் கமில் சுவெலபெல்லும் கூறினார்.   இல் மொழி ( இல்லத்தின் மொழி) என்பது ஒன்றிருந்தால்,  வெளியில் பேசிய மொழி வேறொன்று என்பது பெறப்படவேண்டுமே.  அது பூசுர  (பூசை+ உரு+அ) மொழியாய் இருக்கவேண்டும். அல்லது இரண்டும் கலந்த மொழியாய் இருக்கவேண்டும். உண்மை என்னவென்றால்,  இராமன் கதை பாடிய வால்மீகியார் சமஸ்கிருதத்தைப்on பாடிய முதற் பெரும்பாவலாகிறார்.  வால்மிகி என்று ஒரு சாதியும் உள்ளது.  சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் செய்தவர்,  பாணராக இருக்கிறார்.  அவர் இயற்றிய இலக்கணம் பாணினீயம் ஆயிற்று.  பெயரிலே பாண் இருக்கிறது.  சாலச்சிறந்த பாஞ்சாலியும் பாண்சாலிதான்.  பாஞ்சு என்பது ஐந்தைக் குறிக்கவில்லை. பாண் சால் என்பதுதான்.  ஒருவருக்கே மனைவி.  மற்ற நால்வருக்கும்  மனவி என்பது ஐயத்தில் எழுந்ததாக இருக்கலாம்.  புராணங்களை இயற்றியவர்களும் பிராமணர் அல்லாத நிலையிலே சாதிகளைப் புகுத்தியவர்கள் பிராமணர் என்பதற்கு ஆதாரம் இல்லை.  அதிகாரம் உடையவன் அரசனே ஆதாலால்,  அவன் தான் ஓட்டுநன் நிலையில் உள்ளவன்.  கோவிலில் மணியடித்து வாழ்பவனுக்கும் சாதிக்கும் அதிகார முறையில் தொடர்பில்லை.  வெள்ளைக்காரன் வந்தபின்னும் பட்டியலை இயற்றியவன் அரசாண்ட வெள்ளைக்காரன் தான்.  பிராமணன் அல்லன்.  பிழைப்புக்காக ஒத்து ஊதியிருக்கலாம் பிராமணன்.  ஆனால் எல்லாச் சாதிக்காரனும் அதற்கு ஒத்துப்போனவன் தான்.  தாழ்த்தப்பட்டவன் என்பவனும் அன்று தன்னை வியந்து உயர்த்திக்கொள்ளலை விடுத்து,  தாழ்ந்து பணிந்து ஒத்துக்கொண்டு அதனால் பெருமிதம் வரும் என்று நினைத்த ஏமாளி.  பின்வந்த காலங்களில் அவனது தாழ்மைக்கு வியப்பார் இலராயினர்.

தமிழ்ப்புலவர்களை அழைத்து தமிழ்ச்சொற்களை இலத்தீனில் கடன் பெற்றுக்கொண்டவர்கள் உரோமப் பேரரசின் ஆட்சியாளர்கள்.  இதை மயிலை சீனி வேங்கடசா,மி தம் நூலில் கூறியுள்ளார்.  ஒரு சரித்திரப் பேராசிரியரை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.  சமஸ்கிருதச் சொற்கள் இலத்தீனில் இருப்பதை வைத்து,  ஆரியப் படையெடுப்பு என்னும் தெரிவியல் ( theory)  வரைந்தது முட்டாள்தனமாகும்.  மேலும் இதைச் சீன ஆய்வாளர்களும் மறுத்துள்ளனர்.    மேலும் இந்தத் தெரிவியல் இப்போது கைவிடப் பட்டுள்ளது.  ஆரியன் என்பது ஓர் இனப்பெயரன்று. ஆர் விகுதிப் பெருமை படைத்த நம் சங்கப் புலவர்களே அறிவாளிகள்,  ஆர் இய அர் >  ஆரியர்.  ஆர், அறி என்பன தமிழ்ச்சொற்கள்.

இந்தியத் தீபகற்பத்தில்  (ஒருபுறமண்தொடர்)  திரைகடல் முப்புறமும் உள்ளது. அதனால்  திரை+ இடம் >  திரையிடம்>திரவிடம் என்றிச்சொல் ஏற்படும் நிகழ்வும் தள்ளிவிடமுடியாது.  அதனால் திரவிடம் என்பது கடல்புறம்  என்று பொருள்படும் இடப்பெயர்.  யகரம் வகரமாகுவதை பேச்சுமொழியிலே அறிந்துகொள்ளலாம். ஓடியா என்பது  ஓடிவா என்பதுதான். இந்த மாதிரியில் பல சொற்களை அறியலாம். குறிப்பு வைத்துக்கொள்ளுங்கள்.

பீலிவளை என்பது இவளின் இயற்பெயரன்று. பீலி என்பது  மயிற்பீலி.   வளை என்பது  வளையல்.  மயிலிறகில் வளையல் செய்து அணிந்துகொண்டிருந்தவள் பீலிவளை. மயில்பால் மயங்கிய பெண்மயில். இன்றேல்   அவள் மொழியின் மொழிபெயர்புப் பெயராகவும் இருக்கலாம். அவள் அதுபோது ஒரு சைனோ திபெத்தன் மொழியினளாய் இருந்து, தமிழும் அறிந்திருந்திருக்கலாம். 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

கொண்டாடும் நம் சீன நண்பர்களுக்குச் சீனப் பெருநாள் வாழ்த்துக்கள். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.