Pages

திங்கள், 16 அக்டோபர், 2023

பாஞ்சாலி

 இன்று சாலி  என்று முடியும் ஒரு சொல்  காண்போம்

முதலில் பாஞ்சாலி  என்ற பெயரின் பொருளாய்  அறியப்பட்டவை:  அரசி,  அழகுள்ளவள் என்பவை. பொம்மை போலும் அழகியவள் என்றும் பொருளென்பர்.  இன்னும் வேறுபட்ட பொருட்களையும் கூறுவர். இது பழைய நூல்களில் வரும் பெயர் ஆதலினால்,  அவ்வந் நூல்களில் பொருள் விரிக்கப்படாதவிடத்து,  ஆய்வின் மூலமாகவே இதைக் கூறுவர். இயல்வது அதுவே.

பழம்பெயர்களில்  சிலவற்றை நாம்  ஆய்ந்து பிறர்பால் அறியாத பொருட்களை நாமே கூறியுள்ளோம்.  இவற்றைப் பழைய இடுகைகளில் கண்டுகொள்க.

திரௌபதி என்பதைத்   திற+ அவ+ பதி+ ஐ   என்று பிரித்தால்,  மிகவும் திறமுடையவர்களால், அவம் ( அவி+ அம் >  அவம்,  அவிபடுதல் )  செய்யப்பட்டு, பதி+ஐ  -  பதை,  பதி என்பதன் பெண்பால்,  பெண்தெய்வம்  ஆனவள் என்று பொருள்படுகிறது.   இது உண்மையில் இவள் ஏன் கருநிறம் அடைந்தாள் என்பதற்கு ஒரு விளக்கமாகிய பெயரே ஆகும்.  இப்பெண்ணின் இயற்பெயர் இது என்று எண்ண இடமில்லை.  இன்னொரு வழியிலும் பார்க்கலாம்.   திரு+ அவ+பதை  என்று பிரிக்க,  உயர்ந்த  அவிபட்டு எரிந்துவிட்ட + பெண்தெய்வம் என்று பொருள்படும்.  இரண்டிலும் தமிழில் பொருள் அறிய இடனிருப்பதால், நம் நேயர்கள் எதையும் ஏற்கலாம்.   இஃது  ஒரு பல்பிறப்பிச் சொல் என்னலாம். இப்பெருங்காவியம் பாடியவர்களின் நோக்கம் இதில் வரும் பாத்திரங்களின் உயர்வினையும் பிற கணிப்புகளையும் மக்களுக்கு உணர்த்துதலே ஆதலின், பெயர்கள் பெரும்பான்மை புனைவுகளே  ஆகும். இப்பாத்திரங்களின் இயற்பெயர்களைக் கூறினாலும், அதனால் நீர் பெறும் அறிவு  0  என்பதாகவே இருக்கும்.  யாகத் தீயிற் புறப்பட்டுக் கருநிறம் கொண்டாள் என்பது,  அவ்வம்மையின் நிறத்திற்கு  ஏற்புறுத்தல் என்னும் உத்தியே  ஆகும்.   திற(ம்), திரு என்பவவையே  அல்லாமல்.  திரி ( திரிதல்) என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.  திரி+ அவி + பதை  என்றவாறு.

இவ்வம்மை ஒரு தென்னாட்டு அரசியாய் இருந்திருத்தல் இதனால் அறியக்கூடும்.  இவ்வம்மைக்குக் கிருஷ்ணை என்னும் பெயரும் உள்ளது.  கிரு என்பது  கரு என்பதன் திரிபு.   மூலம் கரு என்பதே. கரு -  கருப்பு என்பதன் அடிச்சொல்.  

ஒப்பிடுக:  கிருஷ்ணயசுர்வேதம் ,  சுக்கிலயசுர்வேதம்.   சுக்கில எனின் வெள்ளை நிறம்.

இனிப் பாஞ்சாலி என்பது:   பாண் என்பது  அம்மையார் பெயர்  பாண் +  சால் + இ என்று அறிய  வழிசெய்கிறது.   சால்  என்றது நன்மைப் பொருளது.  சாலுதல் - நிறைவும் ஆகும்.  இகரம் பெண்பால் விகுதி.  பரம்பரையாகப் பண்களில் சிறந்து விளங்கிய வழிவந்தவர் என்பது இதன் பொருள்.  பாணர்களும் அரசு ஓச்சிய காலம் பழங்காலம் ஆகும்.  ஆகவே இவ்வம்மை ஓர் இளவரசி என்றதில் ஓர் ஐயம் ஏற்படவில்லை.

பாணர் என்பதன் அடிச்சொல் பாண் என்பது.  பண் > பாண் தொடர்புடைய சொற்கள்.  பண்+ அர் =பாணர்.  முதனிலை நீண்டு அர் என்னும் பலர்பால் விகுதி பெற்றது. பண்ணன் எனினும் பாடுகிறவன் என்றே பொருள். ஒப்பு நோக்குமாறு:   வள்  என்பது வண் என்று திரியும்.  வண்ணம் என்பது பொருட்கள் (meanings ) பலவினொன்றாகும்.  வண் + இ =  வாணி.  முதனிலை நீண்டு இகர விகுதி பெற்று,  வண்ணம் உடையாள் என்று பொருள் படும்.  வாழ்நன் என்பதும் வாணன் என்று திரிதல் உளது.  [ பள்: பள்ளு, பாட்டு.  பள்> பண்,  இதுவும் பாட்டு. கண்டுகொள்க  ]

பாண் என்ற சொல் வாண் என்றும் திரியும்.  வாணபுரம் என்ற ஊர்ப்பெயர் பாணர்கள் ஆண்ட இடங்களில் ஒன்று  ஆகும்.  இது இன்று திருவல்லம் என்று அறியப்படுகிறது.  ( வேலூர்).  கர்நாடகாவில்  புங்கனூர் (  முனைவர் பேரா.இராசமாணிக்கனார், சோழர் வரலாறு.) என்பது இன்னொன்று.  பிற நூல்களில் அறிக.

னகர  ணகர ஒற்றீறும்  சொல்லாக்கப் புணர்ச்சியில்  ஞகர  ஒற்றாகும் என்று உணர்ந்துகொள்க.  வல் > வன் >  வன்+சு+ இ >  அனை >  வஞ்சனை என்பதுபோலும்  அமைந்தது.   வன்+ சி >  வஞ்சி -  வஞ்சிப்பா.

வான் >வான்+சை > வாஞ்சை   ( பொருள் உயர்ந்த அன்பு).

திரௌபதை அம்மன் என்னும் தெய்வம் பிராம்மணர் அன்று.  பாணர் குலத்து திரௌபதைக்குக் கண்ணன் உதவியதில் சாதி இல்லை என்பது தெளிவு.  

இந்தத் தெய்விக வடிவு,  வாழ்வாங்கு வாழ்ந்து விண்ணகக் கண்ணனருள் பெற்று,  வான் எய்தினள்,  அருள் பாலிக்கின்றனள்.  பால் = பகுப்பு. பாலித்தல் - யாவருக்கும் வேண்டியவிடத்து அருள் பகிர்ந்தளித்தல்.  பால்+ + தல்: இங்கு "இ" வினையாக்கவிகுதி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.