Pages

சனி, 12 ஆகஸ்ட், 2023

திறம் என்னும் பின்னொட்டு வருமிடங்கள்

 திறமென்பது ஒரு தனிச்சொல்  ஆகும்.  அதற்கென்று ஒரு பொருளிருக்கிறது.  ஆனால் அன்பு என்ற சொல்லில்  ~பு என்பது ஒரு தனிச்சொல்லாய் இல்லை, அதற்குக் காரணம் அதற்குத் தனிப்பொருளில்லை.

~பு என்பது நாம் கற்பனைசெய்யவியலாத மிகப்பழைய காலத்தில்,  மொழியில்,  பெரும்பாலும் ஓரெழுத்து ஒருசொல் முறையில் வழங்கிய காலத்தில்,  ( அப்போது எழுத்துகள் உண்டாகிவிட்டனவா என்பதும் ஆய்வுக்குரியது, இல்லை எனலே பொருந்துவது)  ஒரு பொருளுடைய சொல்லாய் வழங்கி இருக்கக்கூடும்.  இத்தகைய இருட்கால வரலாறுகளை அறிந்த யாரும் இன்றில்லை யாதலால்,  இது தெரியாது என்று தான் சொல்லவேண்டும். என்றாலும்  பின், புல் என்ற மெய்யொடும் கூடிய  உயிரும் - உயிர்மெய்யும் - இணைந்த சொற்கள் தமிழில் இன்றும் கிடைப்பன வாதலின்,  பு என்ற ஒரு சொல் இருந்திருக்கவேண்மென்றே தோன்றுகிறது.  அவ்வாறாயின் அஃது நாளடைவில் பொருளிழந்து ஒரு வெற்று விகுதியாகிவிட்டது என்று சொல்லுதல் ஏற்புடையதே. ஆனால்----

பண்டை அறிஞர்  நெடில் ஒலிகளைப் பெண்ணொலிகள் என்று பாகுபடுத்தினர். அதாவது பூ என்பது ஓரெழுத்தாயும் ஒரு பொருளைக் குறிப்பதாயு மிருத்தலால், அது பெண்ணொலி என்றனர்.  அது எழுத்தொலி மட்டுமின்றி, ஒரு பொருளையும் குறிக்கின்றது.  ஒன்று இன்னொன்றைப் பிறப்பித்தலான்,  அஃது பெண்ணொலி, அதைக் குறிப்பிக்கும் எழுத்து பெண்ணெழுத்து.  அது குறுகி, பு என்று வரின்,   அதனின்று பொருளொன்றும் தோன்றாமையின், அது ஆணெழுத்து ஆகும். புல் என்று ஒரு மெய்யணைந்தாலே  அது சொல்லாகிறது என்று அறிந்துகொள்ளவும்.  அது இனி புலால், புலை, புலி என்று நீண்டு பற்பலவாய் சொற்களாகிவிடும். 

பூ - பெண்ணெழுத்து,  பொருள்  பொதுவாகத் தோன்றுதல்.  பூ : பூ + (உ)ம் + இ = பூமி,   தோன்றுதலும் அதிலிருந்து நிலம் உருக்கொள்ளுதலும்..  பூத்து இங்கு நிலன் தோன்றியது..வானில் பூத்து என்று பொருள் முழுமை ஆகிறது.  பின் பு என்று குறுக,  ஒரு விகுதி இணைந்து, புவி ஆயிற்று.  புவி எனினும் அதுவேயாகும்.  இங்கு ஓர் உயிர்மெய்  (வி) இணைந்து சொல்லாம்.

ஆண் முதலில் உண்டானான் என்பது நடுவண்கீழை நாடுகளில் தோன்றிய கருத்தாக உள்ளது. இதற்குச் சான்று ஆதாம் ஏவாள் கதை.  அதாவது மக்கள் சிந்தித்தது அப்படி.  ஆனால் இந்திய நாட்டில் ஆதிபராசக்தி பற்றிய கதை இருப்பதால்,  பெண்ணே முதலில் தோன்றினாள் என்ப. அதுவும் அவள் சக்தி யாகவே உருக்கொண்டாள்.  சக்தி என்பது அருவம் ஆதலினால், அதைக்  குறியீடுகளால் காட்டுதல் இயலாது. அதனால் அது ஆதிபராசக்தி எனப்பட்டது.  பர சக்தி என்றால் அது தெய்வ சக்தி ஆகும். முதலில் தோன்றியதால்  ஆதி.  ஆதி என்னில் அது ஆக்கம் என்பது.  ஆக்கிய சக்தி.  சக்தி என்பதால் உருவமில்லை.   ஆதலின் குறில் நெடில் என்ற ஒலிகளில்,  நெடிலே தோற்றமாகும்.  குறில் தோற்றமென்று நீங்கள் வாதாடலாம்.

பெரும்பாலான மொழிகளில் நெடிலே சிறப்பாக ஒலிக்கிறது.  குறில்களை அவர்கள் உச்சரிக்கத் திணறுவர்.   கடா என்பதை காடா என்று சொல்லவே அவர்களுக்கு வாயும் நாக்கும் இயல்கின்றன.  இதிலிருந்து என்ன உண்மை தெரிகிறது என்பதை நீங்கள் சொல்லுங்கள். இத்துடன் இதை விடுக.

நீங்கள் கூர்ந்து  செவிமடுத்து நோக்கின்,  திறம் என்பதை ஒலிக்குங்கால்,  றகரத்தை நன்கு ஒலிக்கவருகிறது.  தரித்திரம் என்று சொல் ஒலிக்குங்கால்  இதிலுள்ள ரகரம்,  உண்மையில் றகரமே  ஆனாலும்,  ஒடுங்கியே ஒலிக்கிறது. வறுமையில் செம்மையாய் வாழவேணடுமென்று நம் முன்னோர் உரைத்துள்ளதனால், வறுமை என்பதும்  ஓர்   அணிகலனே என்று நம் முன்னோர் கருதினார்கள்.  பூணத் தகுந்தது வறுமையா என்று ஏழையின் பக்கமாய் நின்று ஒரு கவி கேட்டார்.  ஆம்,  அஃது உம் அணிகளில் ஒன்றாகிவிடுகிறது.  உரிய கவனத்துடன் வெளியில் தெரியாமல் அணிந்துகொண்டு போகவேண்டும்.  இஃது வறுமையிற் செம்மை. பசியின்போது ஒரு நண்பன் வரினும் அவனிடத்துத் தன் பசிபற்றிக் கூறலாகாது. ஆவிற்கு நீரெனினும் இரத்தல் ஆகாது என்பது தமிழன் பண்பாடு.  சாப்பிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.  இதைத்தான் அணிதல் என்று சொல்வர்.  வறுமையைத் தரிக்கிறோம்.  பசியைப் பொறுத்துக்கொள்கிறோம்.  இவை அணிகலன்கள்.    ஆகையினால் தரிக்கும் திறனே தரித்திரம்.   ற என்பது ர  ஆகிவிட்டது,  என்ன காரணத்தால் அது அழுத்தி உச்சரிக்கப்பட்வில்லை என்பதற்கு விளக்கம் ,  சொல் உங்களை மயக்காமல்,  அது தன் அழுத்தம் குன்றி,  திரம் என்றே ஆகும்.  திறம் என்பது ஒரு தனிச்சொல்லாக இல்லாமல் ஒரு பின்னொட்டாக வருமாயின்,  தன் அழுத்தம் இழந்தும் ரகரமாகும்.

தரித்ரம் என்று இன்னும் குறைத்தோருமுண்டு.  திரம் என்று முடியும் பல சொற்களுக்கும் இது பொருந்துவதாகும்.  ஒரு சொல்லாக்கத்தில் இணைந்தபின் அதன் றகரம்,  ரகர மாகிவிடும்.   எ-டு: பாத்திரம்,  பா என்பது பரவலான வாயைக் குறிக்கும்.  திறமாகப் பரவாலான வாயுடன் உருவாக்கப்பட்டது.  கண்களால் ஓரளவு பக்கவாட்டில் பார்க்க முடியுமென்றாலும்,   நேராகத் தோன்றும் பொருள்களைக் கண்கள் பார்க்கும்.  பின்னால் இருந்து வரும் வாசனையை மூக்கு அறியும்.  இத்தகைய ஆற்றல் கண்களுக்கு இல்லை.  அதனால் அவை நேர்த் திறத்தில் மட்டுமே காண்பவை.  " நேத்திரம்".  நேர் என்பதன் ஈற்று ரகரம்  குன்றிற்று..  திரிசொல்.  ஓர்  ர்  ஒழிந்தது. இன்னொரு ற என்பது ர ஆனது காண்க.

பின்னொட்டினை விகுதி எனலும் ஆகும்.இரண்டும் ஒரே  வேலையைத்தான் செய்கின்றன.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

மெய்ப்பு:: 130823 1006



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.