Pages

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

அருகில் என்ற புரிந்துகொள்ளும் "அருகாமை"ச் சொல்

 இச்சொல்லைப் பற்றிக் கூறும் இடுகைகள் எதுவும் இங்கு பதிவிடப் படவில்லை.  ஆதலினால் இதை இன்று கவனித்தறிவோம்.

இச்சொல்லுக்கு உரிய வினைச்சொல்லான " அருகுதல்" என்பது  "அரிதாகக் காணப்படுவது"  என்றோ  "குறைவான தொகையில்......" என்றோ பொருள்கொள்ளப்படவேண்டிய  சொல்லாகும்.   இச்சொல்லை நோக்க,  அருகாமை என்பது  எதிர்மறையாக  " குறையாத தன்மை " உடையதாதல் என்று பொருள்படும் என்று கொள்ளத் தோன்றுகிறது.  ஆனால் இப்பொருளில் இது எங்கும் கையாளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.  நீங்கள் இத்தகு பயன்பாட்டினைக் காணின்,  எந்த நூலில் எங்குக் கண்டீரென்பதைக் கருத்துரையாகப் பின்னூட்டம் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.   அருகுதல் என்பதற்கு எதிராகப்  "பெருகுதல்"  என்ற சொல்லிருப்பதனால்,  அருகாமை என்ற சொல் அருகுதலுக்கு எதிர்ச்சொல்லாக வழக்குப்பெறவில்லை என்பது தெளிவு.  எதிர்ப்பொருளில் இதை வாக்கியத்தில் அமைத்து காட்டும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆயின், தமிழில் "அருகாண்மை"  என்றொரு சொல் வழக்கில் இருந்துள்ளது.  இஃது  அருகிலிருத்தலை ஆளுந்தன்மை என்று பொருள்படும். எதுவேனும் ஒன்று அருகிலிருத்தலால் அதை ஏற்றாளும் தன்மை என்று பொருள்கொள்ளுதலே சரியானதாகும்.  "பகைநாட்டின் படைவீடுகள் அருகாண்மையில் கட்டப்பெற்றிருப்பதால்  நம்   அச்சம் ஒரு கட்டுக்குள் இல்லாமலாகிவிட்டது"  என்ற வாக்கியத்தில் இது சரியாகப் பொருள்தரும். இதுபோல், இச்சொல் சரியாகப் பொருள்தரும் வாக்கியங்களை  நீங்களும் வரைந்து நோக்கலாம்.

அருகாண்மை என்பது இடைக்குறைந்து  அருகாமை என்று வரும்.  அப்போது அருகிலிருக்கும் தன்மையைக் குறிக்கவழங்கும். இங்கு இடைக்குறைதலாவது, ணகர ஒற்று மறைதல்.

கூட்டிக்கழித்து நோக்குங்கால், அருகாமை என்பது அருகில் என்ற பொருளில் வருவது ஏற்கத்தக்கதே.  அருகாண்மை என்பதன் சிறப்புப் பொருள் அருகாமையில் நாளடைவில் வீழ்ந்துவிட்டது என்பது வெள்ளிடைமலை.

அருகமை  என்பதே அருகாமை என்று நீண்டுவழங்குகிறது என்பதும் கொள்ளற்பாலதே.   அருகமை என்பதில் அமை என்பது அருகமைவு என்று பொருள்தரும் முதல்நிலைத் தொழிற்பெயர் என்லும் கோடற்குரித்தே.  அருகமைவு > அருகிலமைவு,  இல் உருபு தொக்கது. ஐந்தாம் வேற்றுமை உருபு.

ஒரு சிற்றூரான் "நீங்கள் தேடும் வாத்தியார் வீடு அருகாமையில்தான் இருக்கிறது, நடந்தே போய்விடலாம்"  என்னுங்கால்,   அருகாமை என்பது அருகில் என்றே பொருள்தரும். "குறையாமை" என்று பொருள்தராது. இதைச் சில வாத்தியார்கள் பொருள்தெளிவற்ற சொல் என்று கருதியது, இஃது இரட்டுறலாக வரக்கூடுமான சொல் என்று கருதியதுதான். பேச்சுவழக்கில் இது அருகில் என்ற பொருளில்தான் வருகிறது.  மற்று "குறையாமை" என்ற பொருள், இலக்கிய வழக்கில் மட்டுமே வரத்தக்கது என்பது மட்டுமன்று, அங்ஙனம்  ஆளப்பட்டிருப்பதற்கான இலக்கிய வழக்கு தேடினே கிட்டக்கூடும் என்பதும் உண்மையேயாகும்.    

இன்னொரு காட்டு:  இல்லவள் என்ற சொல்லுக்கு,  இல்லாதவள் என்று பொருளில்லை.  இல்லறத்தாள் என்பதுதான் பொருள்.  ஆயினும் இல் என்பது இல்லம் (வீடு) என்றும் இல்லை ( பேச்சில்: கிடையாது என்பர்)  என்றும் பொருள் உள்ளது.  இதுகொண்டு,  இல்லவள் என்பது தவறாய் அமைந்தது என்று விரித்தல் ஆகாது.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

இஃது மீள்பார்வை செய்யப்பட்டது: 04082023 0805


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.