Pages

ஞாயிறு, 9 ஜூலை, 2023

உயிரா ஜீவனா பிறப்பா?

 இதை இழுத்துவிரிக்காமல் சுருக்கமாகச் சொல்லிவிடுவோம்.

உயிர் என்பது முழுச்சொல்.

யிர் என்பது தலையெழுத்து நீங்கியது. இதனை முதற்குறை என்பர்.

யிகரத்தில் சொற்கள் தொடங்காமையின், மாற்றாக  இர் என்பதை இடுவோம்.  -யிர் என்பது உண்மையில் இர் தான்.  உ =  உள்ளே ;  இர் -  இருப்பது.  இர் என்பது இரு என்பதன் மூலம்.   யாரும் உள்ளே எந்தத் தொங்கலில் உயிர் உள்ளது என்று கண்டுபிடித்துவிட்டதாகத் தகவல் எம்மிடம் இல்லை. உங்களிடம் இருப்பின் எம்முடன் பகிர்ந்துகொள்ளுதலை வரவேற்கிறோம்.

உய்  ( உய்தல்) என்பதை முதலாகக் கொள்வர் சிலர்.  ஆனால் உய் என்பதும் உகரச் சுட்டடிச் சொல்லே ஆதலால்  வேறுபாடு ஒன்றுமில்லை.

இர் என்பதன் பொருண்மையை இரை என்பதிலும் கண்டுகொள்ளலாம்


இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய் (குறள் 946)

இரை என்பது விலங்குணவு பறவை உணவு முதலியன குறிக்கும். கழிபேருணவினனை இங்குக் கழிபேரிரையான் என்று ஏனை உயிரினங்கள் உண்பனபோல் உண்பவன் என்ற பொருள்பட நாயனார் உரைப்பது சிறப்பு.

 இர் - இங்கிருந்து,  அ - அங்குவரை ,  அய் =  அகல இருப்பது. ஐ என்பதும் அது.  அகல அறிவும்  அகல ஆளுமையும் உடைய மனிதரைக் குறிக்க "ஐ" அடிச்சொல்லாய் வரும்.  " ஐயர் யாத்தனர் கரணம் என்ப"  என்ற தொல்காப்பிய நூற்பாவில் ( கற்பியல்  4 )  இச்சொல்லுக்கு இதுவே பொருள்.  இர் அ அய் > இரை,  ( கோழிக்கு இரை முதலிய உணவுகள் ),  இரைத்தல் -  வினைச்சொல்.  இ, அ, அ(ய்) -  இவை சுட்டடிகள். இடையில் அகரமின்றியும் உரைக்கலாம். இடையில் அகரம் புணர்த்திக் கெடுத்தல் பொருளுணர்வுக்கு முழுமை தரும்.

இர் என்பது  சிர் என்று திரியும். யிர் என்பது புணர்ச்சித் திரிபு,  யகர உடம்படு மெய் வந்துள்ளது, 

இதை  அமண் - சமண் என்ற திரிபில் அடக்கிவிடலாம்.  அகரமும் அதன் வருக்கங்களும்  சகரமும் அதன் வருக்கங்களாகத் திரியும்.  இங்கு எல்லாவற்றையும் காட்ட இடமில்லை.  பழைய இடுகைகளில் படித்துப் பட்டியல் மேற்கொள்க.

சிர் என்பது அதற்கு இனமான முதலுடன் ஜிர் என்றும் பின் ஜிவ் என்றும் திரியும்.

ஜிவ்  -- ஜிவ் + அன் >  ஜீவன்   முதனிலை நீண்டு தமிழுக்குரிய அன் விகுதியும் பெற்று  ஜீவன் ஆனது.  தமிழில் இது ஆண்பால் விகுதி.  வேறு மொழிகள் அவற்றை வெற்று விகுதிகளாக்கிக்கொள்ளத் தடை எதுவும் இல்லை.

தமிழிலே கூட இவ்வாறு அன் பொது விகுதியாக வரும்,

உயர்திணை நீங்கிய பிற அணியினவாய உயிர்கள் பிற அணிகள் அல்லது பிரா(அ)ணிகள் >  பிராணிகள்.  அகரம் தொகுந்தது. பிராணியை இயக்குவது அதன் பிராணன்,  இங்கும் அன் விகுதி வந்து அழகு செய்யும். கக்குவான் என்பது நோய்ப்பெயர்,  அதில் ஏன்  ஆன் விகுதி?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.