Pages

சனி, 24 ஜூன், 2023

சரு > சருகு > சரக்கு

 சரக்குப்புரக்கு என்று சத்தமாக ( ஒலியெழலாக) இருக்கிறது என்பது நாம் பேச்சுமொழியில் கேட்குமொன்று  ஆகும். நகரும்போது சரசர என்று ஒலியெழுப்பும் பாம்புக்கு,  சாரைப்பாம்பு என்று பெயருள்ளதையும் நாம் அறிவோம். இதற்குச் சேரை என்ற பெயருமிருப்பதால்,  சாரை><சேரை  என்னும் ஆ<>ஏ என்னும் திரிபுக்கு எடுத்துக்காட்டாகவும் இச்சொல் வரும்.  நிலத்துடன் சார்ந்து அல்லது சேர்ந்தபடி சென்று எலி முதலியவற்றை வேட்டையாடி வாழ்வதால் இப்பெயர் பெற்றது என்று கருதுதற்கும் இச்சொல் இடம்தருவது.  இதற்கு இலஞ்சி , இராசிலம், துண்டம்  என்ற பெயர்களும் உள்ளன.

காய்ந்த இலைகளே சரசர என்று ஒலி எழுப்ப  வல்லவை ஆகும்.  சரசரத்தல் என்பதும் காய்ந்தமையால் ஒலிஎழல் காட்டுவதே.

எனவே சரக்கு  ---  சரு என்ற அடியினின்று எழுந்த சொல்.  பெரும்பாலும் பச்சைக்காய் கறிகள் தவிர்த்தன காட்டும் சொல்லே  " சரக்கு" என்ற சொல்.

சருகு சுருங்கிக் காய்ந்த இலை குறிப்பதாலும்,   அஃகு  என்பது சுருங்குதல் குறிப்பதாலும்  சரக்கு என்பது  காய்ந்த பொருள் குறித்துப் பின் பொருள் சற்று விரிவடைந்த சொல். அக்கி என்ற சொல்லும் வெப்பம் குறிப்பது.  சுருங்குதலும் வெப்பத்தினால் நடைபெறும்.

சரு  + அஃகு >  சரு+ அக்கு >  சரக்கு   ஆகும்.

சருகு என்பது  சரி என்றும் வருவதால்,   சரி+ அக்கு > சரக்கு எனலும் ஆம்..

உலகில் காணப்படும் பொருட்கள் பன்முகத் தன்மை கொண்டவை.  காய்ந்தவை, பச்சையானவை என இரண்டு முன்மை வாய்ந்தனவாகும்.  இவற்றுள் சரக்கு என்பவை, காய்ந்தவை.  பச்சையை இடம்பெயர்த்தலும் காய்ந்தவையை இடம்பெயர்த்தலும் மனிதனின் வெவ்வேறு திறனையும் செய்ம்முறையையும்  எதிர்கொள்பவை ஆகும்.  அதனால் சரக்கு என்ற சொல் தேவையாயிற்று.  சரக்கு என்ற சொல் இவ்வாறு எழுந்தாலும், இதன் பொருள் பிற்காலத்து ஏற்பட்ட  விரிவினால்,  பச்சைப்பொருட்களையும்  உள்ளடக்க வேண்டியதாயிற்று. குளிர்ப்பதன முறைகள் பிற்காலத்தில் ஏற்பட்டு காயாத பச்சைப் பொருட்கள் வெகுதொலைவு இடம்பெயர்க்கப்படுதற்கு உதவியாய் மலர்ந்தன வென்பது நீங்கள் அறிந்ததே.

வியாபாரம் என்ற பொருட்கள் விலைப்பொருட்டு விரிந்து பரவும் தன்மையையும் முறையையும் காட்ட எழுந்த சொல். இதில் இரண்டு மூலங்கள் உள்ளன. வியன் - விரிவு;  பரவு: பர >பர+ அம் > பாரம்.  முதனிலை நீண்டு,  அம் விகுதி ஏற்ற சொல்.  வியன்பாரம் >  வியபாரம் > வியாபாரம்.  விர் - விரி;  விர்>விய்> வியன். (வியத்தல் என்பது உறவுச்சொல்.).  வணிகமுறையில் பொருட்களைக் கொண்டுசென்று பரப்புதல்  ( பகிர்மானம்)  முன்மையானதாகும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.