Pages

திங்கள், 12 ஜூன், 2023

குச்சி குறுச்சி கூர்ச்சி ( சொல்லியல் உண்மைகளும் மரபுகளும் )

 மொழி எனப்படும் தொடர்புக்கருவி,  நம் பிறப்புக்கு முன்னிருப்பது,  நமக்குப் பின்னரும் வெகுகாலம் வழங்கி மனிதர்களுக்கிடையில் பயன் தருவது ஆகும். யாரும் அதை முழுதுணர்ந்துவிட்டதாகக் கூறிவிட இயலாது. தொல்காப்பிய முனிவரே  தமக்கு முன்னிருந்தோர் சொல்லிவைத்தனவாகப் பலவற்றைக் கூறிச்செல்கின்றார். வள்ளுவனாரும்  பல கருத்துக்களிடையே,  பிறர் கூறியனவற்றையும் குறிப்பிட்டு,  அவற்றுடன் இயைந்தும் முரணியும் செல்கின்றார்.  எடுத்துக்காட்டாக,   "  அறத்திற்கே  அன்பு சார்  பென்ப  அறியார்!  மறத்திற்கும் அஃதே துணை" என்று இடித்துரை வழங்குகின்றார்.  "எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்றும் விளக்குகின்றார்.

"நான் சொல்வதே சரி"  என்று யாரும் முடிவாகக் கூறிவிடுதல் முடியாது. யாரும் முடிவென்று சொல்லியிருந்தாலும்,  அது முடிவாகிவிடாது என்பதை அறிதல் அறிவாகும்.இப்போது குச்சி என்பதையும்  குச்சு என்பதையும் இவற்றுடன் தொடர்புடைய சொற்களுடன் கண்டு சில விளக்கங்களை அடைந்து மகிழ்வோம்.  குச்சி என்பதில் கு என்பதே அடிச்சொல்.  சி என்பது விகுதி.   குச்சு என்பதிலும் அங்ஙனமே  சு என்பது விகுதி ஆகும்,  கு என்ற பகுதியின் பொருள்,  குறுகியது என்பதே ஆகும்   கு என்ற ஓரெழுத்து ஒருசொல்லின் பொருள் யாதோவெனின், அதற்கும் குறு  ( குறுகியது) என்பதற்கும் வேறுபாடின்மை அறிக.

இதைப் பின்வருமாறு மீட்டுருவாக்கம் செய்யின், பொருள் மிகத் தெளிவாம் காண்க:

குறு = கு,

குறுச்சி  : ( இது இடைக்குறைந்தால்  )  குச்சி  ஆகிவிடும்.

சி என்பதும்  சு என்பதும் விகுதிகளாதலின்,

குச்சி என்பதும் குச்சு என்பதும் ஒரு பொருளின் விரிவமைவுகளே.

இங்கு  வரும் "ச்"  என்னும் எழுத்து,  வல்லெழுத்து,  இதனை மென்மையாக்க எழுந்த சொல்லே:  குஞ்சு என்பதாகும். கோழிக்குஞ்சு கியாகியா என்று கத்திக்கொண்டு தொடுதற்கும் மிக்க மென்மையானதே.  குச்சு என்பது மெலிந்து குஞ்சு ஆனது பொருத்தமே ஆகும்.  பொருள் மென்மை உடையதாதலின் அதுவும் மெல்லெழுத்துக்களாலே குறிக்கப்படுதல் வேண்டுமென்பது தமிழ்ச் சொல்லியல் நெறியாகும். மெல்லிய பொருளைக் குறிக்குங்கால் தடபுட கடபுட என்று உருட்டுமுரடாக இல்லாமல்  குஞ்சு என்று வந்ததே சிறப்பமைவு என்பது கண்டுகொள்க.

கு என்பதிலிருந்து நேரடியாக, குன் என்ற அடிச்சொல் பிறக்கிறது. குன் என்பதிலிருந்து  சிறிதாகுதல் குறிக்கும் குன் + சு என்று இணைத்து,  குஞ்சு என்ற சொல்லை உருவாக்கியும் காட்டலாம்.    அதே தத்துவத்தை ( தன்+ து + அம்>  த + து + அம் > தத்துவம்)  அல்லது தன்மையை விளக்க,  இஃது இன்னொரு குறுஞ்சாலை  ஆகும் என்பதறிக. 

குன் > குன்றுதல்:  சிறிதாயமைவு.

கொடிநாட்டுக் குழி குறுமை உடையதாதலின்,  அதுவும் குஞ்சி எனப்பட்டது. மென்மையான கொடி தாங்கு கம்பு நிற்பிடம் இதுவாதலின் சொல்லும் மென்மை காட்டுகிறது.

குறு என்பது நீட்டப்படின்  கூற் என்றாகாது. கூறு என்பது கூடுமாயினும் அது கூர் என்று மென்மை காட்டுதலின், ஏற்புழி கொள்ளப்படும்.  அடி அகன்று இருப்பினும் நுனி குறுகியே கூராதல் கூடும்.  கூரான கால்களை உடைய சிறு இருக்கை கூர்ச்சி ஆகிப்   பின் குருச்சி ஆகித் திரிந்தது.  இதில் வரும் குரு என்பது ஆசிரியன் என்று பொருள்படும் குரு என்பதனுடன் தொடர்பிலாதது, கூர் என்பது குரு என்று திரிந்தது.  முற்படக் கூரியது எனவாகும் பொருளில் கூரியம் > குரியம் >  குயம் என்பது பெண்ணின் மார்பகம் குறித்தது,  நெடில் குறுகியதும் இடைக்குறை கொண்டதும் ஆன சொல்.

குச்சு  இல் என்பது குச்சில் ஆகிச் சிறு வீட்டைக் குறித்தது.

தொடர்புடையன  பிற, பின்னொரு நாள் எடுத்துக்கொள்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.

பார்வை: 13062023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.