Pages

திங்கள், 20 பிப்ரவரி, 2023

இலம்போதர சுந்தரன் விநாயகன்--- தமிழ்ப் பொருண்மை

முற்சொலவம்:-
(foreword)
  இதற்கான தமிழ்ப்பொருளை இங்கு ஆய்வோம்.  அதற்குமுன் இதற்குக் கூறப்படும் சங்கத  ( சம்ஸ்கிருதப்) பொருளை  அறிந்துகொள்வோம்.  எத்தனை பொருள்கள் இவ்வுலகில் உண்டோ,  அத்தனையையும் ஆய்ந்து கூறுவதுதான் உண்மை ஆராய்ச்சி.  ஒன்றை அறிந்து இன்னொன்றை ஆய்ந்தறியாமல் விடுவது  ஆய்வாளன் செய்வதன்று.  பற்றன் மனத்தால் நாடுவோன் ஆதலின், அவன் தன் மனத்துக்கண் தோன்றுவதையே  உண்மைப் பொருள் என்று கொள்வது அவன் காட்சிக்கு ஏற்புடைத்தாகலாம்.

ஒன்றுக்கு ஒன்றன் மேற்பட்ட பொருளிருந்தால் அவற்றுள்  ஒன்று பொய் 
என்கின்றான் ஒரு மேல்நாட்டு ஆய்வாளன்.  இது சரியன்று.  தலைவலி வந்தால் அதற்கு மருத்துவத்தில் ஒரு காரணம் என்று கூறமுடியாது.  அது பல காரணங்களால் எழலாம் என்பதுபோல்,  சொல்லிலும் பல காரணங்கள் ஏற்படலாம். ஒன்றுதான் வேண்டும் எனின் அதைக் கண்டுபிடிக்க முயலலாம். உலகில் மொழிகள் பல.  விநாயக வணக்கம், இந்தியாவிலும்  தாய்லாந்திலும் இந்தோனேசியாவிலும் தென் கிழக்காசியாவிலும் இருந்துள்ளபடியால்,  பொருண்மைகள் எல்லை கடந்துவந்துமிருக்கலாம் என்று அறிக.  ஒரு குறுகிய புட்டிவாயிலின்மேல் கட்டிப்பிடிக்கும் பருமன் உள்ள கல்லை நிறுத்திக்காட்டுபவன், வேறு நிலப்பகுதிகளிலும் உள்ளான். நம்பிக்கை இல்லாதவன் அதைச் செய்து காட்டினால் அதை அப்போது ஆராயலாம்.  பொருண்மை இரண்டிருந்தால்  இரண்டையும் ஏற்று அமையலாம்.  இரண்டு கடைகளில் சாப்பிட்டு சாம்பார் இருவ்கைச் சுவைதருமேல்,  ஒன்றை இன்றும் இன்னொன்றை அடுத்தநாளிலும் சாப்பிடலாம்.

பொருண்மைகள்:

சங்கதத்தில்:

லம்போதர.   இதை லம்போ + உதர என்று பிரித்து,  நெடிதான வயிறு உடைய   என்று உணர்த்துவர்.

விநாயகனுக்கு  ( வினை ஆய் அகன் > வினாயகன் )  ( வி + நாயகன் என்பது இன்னொன்று)   பெருவயிறு என்பது உருவவழிபாட்டு முறையில் அறியப்படுவது.  லம்போ உதர.  சங்கத எழுத்துக்களைப் பார்த்து ளகர இருப்பு இன்மை உணர்ந்த காலை இன்னும் சுவை ஆகுமே.   முதற்குறை என்பது தமிழிலக்கணத்தில் உள்ள எழுத்துச்சுருக்க வசதிதான். 

நீளம் என்ற சொல்லின் முதற்குறை இச்சொல்.  நீளம்போ >  லம்போ.   ல-வுக்கும்  ளவுக்கும்  மாற்றீடாக சங்கதத்தில் ல-   என்பதே (லகரமே) வரும்.. ஆனால் தமிழில்  மொழிமுதலாக ( சொன்முதலில்)  லகரம் வராது என்னும் இலக்கணதத்தால் இதை ஒன்று சங்கதச்சொல் எனவேண்டும்,  அல்லது தவற்று வீழ்ச்சி எனவேண்டும்.  முன்னதே கடைப்பிடித்தனர்.

இனி உதரம்.    முதுகுத் தண்டு பின்புறம்  அருகிலும்,  உடலின் முன்புறமாகவும் இருப்பது வயிறு.   ஆதலின்,  உது -  முன்புறமாகாவும்,  அரு - முதுகெலும்புக்கு  அருகிலும்  அம் - அமைந்திருப்பது  உதரம்.  ஆகவே வயிற்றுக்கு நல்ல பெயராய் அமைந்தது.  தமிழ்மூலங்களால் அமைந்த சொல் உதரம். சுட்டடியில் எழுந்தது.   அது, இது, உது என்பன சுட்டுச்சொற்கள்.  "போஉதர(ம்)"  தமிழ் வினைத்தொகைப் பாணி.   நீளம்போ உதரம்!!

தமிழில்:

இப்போது  லம்போதர என்பதை  இரண்டாம் (தமிழ்) முறையில் பார்க்கலாம்.
லம்  என்பது  இல் + அம் .  இலம்பாடு என்பது போல.  இலம்பாடு என்பது  வறுமை.

இலம் போது என்றால்  இல்லாத காலம் .  இன்மை, வறுமை.

அற -  இல்லாமல்.

இலம்போதற  -  இலம்போதர:   வறுமைத் துன்பமில்லாமல்.   றகரத்துக்கு ரகரம்.

வறுமை என்னும் துன்பம் இல்லாத  (  தினமும் கொழுக்கட்டை கிடைக்கிற என்றும்  வைத்துக்கொள்ளலாம்.).  யாருக்கும் வறுமையைக் கொடுக்காத,  வளம் தருகிற என்றெல்லாம் கொள்ளலாம்.

வயிறு நீண்டவன் என்பதினும் வளமெலாம் தருகிறவன் என்பது ஆன்மிகத்துக்கு மேலும் உகந்தநிலை.  எல்லாம் நன்று  என்றும்  ஏற்றுக்கொள்ள இயலும். 

விண்ணில் நாற்றிசையிலும் உள்ள இடங்கள்,   கண் - இடம்,   கணம்   ( கண்+அம் >  ~: திசையாமிடங்கள்.)  விண் என்பது ஐம்பூதங்களில் ஒன்று. விண்டிசைக் காவலன் தான் விநாயகன் - வினாயகன்.  கணங்களில் அதிபதி,  ஆதலின் கணபதி.  பூமண்டலத்தினுள் கேடுறுத்தும் யாதும் வந்துவிடாமல் காக்கும் இயற்கை ஆற்றல். இந்த இயற்கையுண்மையில் அறியப்பட்ட தெய்வத்திருவே கணபதி. இயற்கையன்னையின் மறுவிளக்கமே நம் மதம் அல்லது கொள்கை.  சூரியன்,  சந்திரன் முதலியன இயற்கைத் தேவர்கள்.  ஆகவே எந்தக் கற்பனையும் இல்லை.  இவற்றினை வணங்குமுறைகளை  நெறிப்படுத்தியே கொள்கை அமைந்தது காண்க.  விண்ணனோ நீரைக் குடிக்கிறான்.  நெருப்பைக் கக்குகிறான்.  எல்லாம் நடக்கிறது.  அவன்- அவள் பெருமூச்சு ஒரு புயல்.  எல்லாம் இல்லை இல்லை என்று பழித்தாலும், துருக்கியில் ஆட்டம் கண்டபோது -  இயற்கை அன்னை கூத்தாடியபோது செத்துக்கிடப்பது தவிர மாற்றொன்று உண்டோ?  அலையாகவும் வருகிறாள், கலையாகவும் வருகிறாள் அன்னை.  நீ என்பது இல்லை என்றே அடங்குவது நன்று.
அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.