Pages

சனி, 10 டிசம்பர், 2022

வேங்கடமும் குடமும்.

 சொல்லமைப்பில் இவ்விரண்டு சொற்களுக்கும் மிக்கத் தொடர்பு உள்ளது.

அகரத் தொடக்கத்துச் சொல்,  உகரத் தொடக்கமாகும்  என்பதை  முன் இடுகைகளில் உணர்த்தியிருந்தோம். சொல்லாய்வுகளில் இதுபோலும் திரிபுகளை மறந்துவிடுதல் ஆகாது.  இவை நினைவிலிருத்தப் படும்வரை பயிலப்படுதல் வேண்டும்.  இவற்றையெல்லாம் நினைவு கூர்தல் கடினம் என்று நினைப்போனுக்கு,  இவற்றுடன் உள்ள தொடர்புறவு நீடிக்குமாறு ஓர் வழியில்லை என்பதறிக.

எடுத்துக்காட்டு:   அதழ் > இதழ்.   முறைமாற்றுத் திரிபும்  அதுவே. ( இதழ் - அதழ் எனினுமது ).

அதுபோலவே, கடம் என்பதும் குடமென்று வரும்.  ( அ - இ அல்லது இ-அ).

கடமென்பது  காடு அல்லது தாழ்வரு செடிகொடிகளும்  ( தாழ்வரம்> தாவரங்(கள்)  நிறைய வளர்ந்து  கடந்துசொல்லற்கு  இயலாமை போலும் ஓர் அரிய நிலையை உண்டாக்குமிடம்.  கடு > கடம்;  கடு > (முதனிலை நீண்டு) காடு என்று இச்சொற்களின் உறவு கண்டுகொள்க.

கடம்  மற்றும் குடம் என்ற இருசொற்களும்,  திரிபெழுத்துக்களால் உறவாயின என்பது மட்டுமன்றி.  பொருளிலும் தொடர்பு உள்ளவை.

குடத்திட்டவை,  அதைக் கடந்து செல்ல இயலாமையும் இச்சொற்களின் பொருளுறவு ஆகும்.  காட்டையும் கடத்தல் கடினம்.  குடத்தின் சுற்றுக்கட்டினையும் உள்ளூற்றிய நீரினால் கடந்து செல்ல முடியாது.  இங்கு முடியாது என்று நாம் சொல்வது,  மிகமுயன்றாலே முடியுமென்று பொருள்கொள்ளவேண்டும். 

மனிதன் காட்டைக் கடப்பதற்கு விடா முயற்சி தேவை.  நீருக்கோ இட்ட அரிசி முதலியவற்றுக்கோ,  நிறைவடைந்தாலன்றிக் கடத்தல் இயலாது.  நிறைவு கொண்டாலும், குடவாய் கடக்கும் நிலை எய்தினாலன்றிக் கடக்க இயல்வதில்லை.

கடம்  - மலைச்சாரல் -  அடிப்படைப் பொருள்:  கடக்கக் கடினம்,

குடம் -  குடவாய் கடக்க நிறைந்தாலன்றி,  கடக்க இயலாமை.

வேங்கடம் என்பது வேகும் அளவு வெப்பமிகை உணர்த்துகிறது.

வேகு கடம் என்பவற்றில்,  கு என்னும் வினையாக்க விகுதியும் கெட்டது. மூளையற்றவன் தான் விகுதிகளைக் கட்டி மாரடிப்பவன். இன்னொரு சொல்லிருந்து உதவுமா என்பதே கேள்வி. இல்லையேல் இல்லை பயன்.

இனி,  குடம் எனற்பாலது,  குடைவாகவு மிருத்தலால்,  குடை + அம் > குடமாகும். பகுதியும் விகுதியுமிணைய,  ஈற்று ஐ  கெட்டது.   கடு > குடு> குடம் என்றும் விளக்கலாம். வேறு சொல் அமையுங்கால்,  விகுதிகளை விடாமல் வைத்திருத்தல் சில வேளைகளில்  வேண்டற்பாலதால்.   குடையம் என்று ஒரு புதுச்சொல் அமைக்கையில் வேறுபடுத்த,  அதை வைத்துக்கொள்ளலாம்.  

வாத்தியக்குழுவில், குடம் கடமெனப்படும்.  இது Gadam  அன்று.  கடம் தான். எடுத்தொலித்தல் தவிர்க்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.