Pages

வியாழன், 8 டிசம்பர், 2022

மதுரம் என்ற சொல். அமைபு

அமைபு,  அமைப்பு வேறுபாடு:  

அமைப்பு என்ற சொல்லுக்கும்  அமைபு என்ற சொல்லுக்கும் வேறுபாடு உள்ளது. இது தெரியவில்லை என்றால் அதை அறிந்துகொள்ளுவது நன்று.  அமைபு என்ற இச்சொல்லில்,  தன்வினைக் கருத்து உள்ளது.   இதையும் அறிந்துகொள்ளுதல் இனிதேயாகும்.

மொழிநூலறிஞர் வேங்கடராஜ்லு ரெட்டியார், " தமிழ்ச்சொல்லமைபு" என்ற சொல்லாய்வு நூலை எழுதியுள்ளார். சுருக்கமாகச் சொல்வதானால்,  தமிழ்ச் சொற்கள் தாமே எவ்வாறு உருவெடுத்தன  என்பதைப் பற்றிய நூலே அவர் எழுதி வெளியிட்டது ஆகும்.  தமிழின் பல சொற்கள்,  மக்களின் பயன்பாட்டில் இயற்கையாக எழுந்தவை ஆகும்.  A similar incidence is the distinction  between Natural Law and Positive Law.

மதுரம்:

இன்று மதுரம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

மது என்ற சொல்லே " மயங்குவது"  அல்லது  " மயக்குவது" என்ற சொல்லுருக்களின் குறைச்சொல்லே  ஆகும்.  இவை இரண்டையும் குறைச்சொற்களாய்க் கருதாமல்,  பகுபதங்கள் ஆதலின், தொகைச்சொற்களாய்  ஆசிரியர் சிலர் காண்பர். இப்படிக் குறியீடுகள் செய்வதில் பயன் இருந்தால் அதுவும் நன்றே.  பயனில்லை என்பது எம் கருத்தன்று.  எத்தகு பயன் எங்கு என்பவற்றைப் பொறுத்து, இக்குறியீட்டை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

மது + உரு + அம் >  மதுரம்  ஆகும்.  அதாவது இச்சொல்லின் பொருண்மை யாதெனின்,  உண்மை மதுவாக இல்லாமல், மதுவைப்போன்ற ஓரின்பத்தை வருவிக்கும் பொருள் என்பதே  அர்த்தம் ஆகும்.  அப்பொருள் தரும் சுவையையும் இச்சொல் குறிக்குமாறு விரியும்.  இஃது ஒப்பீட்டு அமைவு ஆகும்.

மதுரம் என்ற சொல்லில் தகரம் இரட்டிக்கவில்லை. அதாவது " மத்துரம்" என்று வரவில்லை.  அப்படி வந்திருக்கவேண்டுமென்று கருதினாலும், அஃது பின் இடைக்குறைந்து மதுரம் என்றாவதனால், இந்த வாதத்தில் அத்துணைப் பயனில்லை என்று தள்ளுபடி செய்யவேண்டும். வலி இரட்டித்தல் முதலியவை சொல்லமைபில் முதன்மை உடையதன்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.