விலாசம் என்பதென்ன? பெயர் என்பதென்ன?
ஒரு மனிதனுக்குப் பெயர் என்பது மிக்கத் தேவையானது ஆகும். இதனாலே பெயர் என்ற சொல்லுக்குப் புகழ் என்ற பொருளும் நாளடைவில் மக்களிடையே ஏற்படுவதாயிற்று. பெயர்தலாவது ஓரிடத்தினின்று இன்னோரிடம் செல்லுதல். இதிலடங்கிய கருத்தை, ஒரு மனிதனிலிருந்து இன்னொருவனைப் பெயர்த்து அல்லது வேறுபடுத்தி அறிய உதவுவது என்று விரிவுபடுத்தினர். எவ்வளவு சிறிய இடமாயினும் ஒரு மனிதன் இன்னொருவனிடமிருந்து அப்பால்தான் இருக்கமுடியும். ஒருவனின் கால்வைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் இன்னொருவன் கால்வைக்கமுடிவதில்லை. அதற்குப் பக்கத்தில் கால்வைக்கலாம், இதன் காரணமாகப் பெயர்த்தறிதல் என்பதைத் தமிழன் கூர்ந்துணர்ந்துகொண்டான். இடப்பெயர்வு போன்றதே மனிதக் குறிப்பின் பெயர்வும் ஆகும். ஆதிமனிதற்கு மிகுந்த அறிவு இருந்தது என்பது இதனால் புரிந்துகொள்ளமுடிகிறது. The space occupied by an individual on ground can only be taken up by one person at a time. Different persons occupying the same place at different times must be differentiated.
ஒருவன் தன் வீட்டைக் கட்டிக்கொண்டு அதில் வாழ்கிறான். இன்னொருவன் அதற்கு அடுத்துக் கட்டுவான். இப்போது உள்ள அடுக்குமாடி வீடுபோல், அதே இடத்தில் முற்காலங்களில் வீடமைக்கும் வழக்கமோ திறனோ வளர்ந்திருக்கவில்லை என்றாலும் ஒருவீட்டிலிருந்து இன்னொரு வீட்டைப் பெயர்த்தறிதல் நடைபெறவே செய்தது. வீட்டுக்கும் பெயரிட்டுக் குறித்தான். அந்தப் பெயர், அழகாக, "நீவாசம்" என்றோ " அக்காவீடு" என்றோ இருந்திருக்கலாம். பெயர்ப்பலகை போடாமல் குறிப்பிட்டு அறிந்துகொள்வது " அக்காவீடு" என்பது. மாமாவீடு என்பது வேறுவீடு. இதன்மூலம், மாமாவீடு என்பது அக்காவீட்டிலிருந்து " விலக்கி" அறியப்பட்டது. விலக்குதலுக்கான இந்த சிந்தனைத் தெளிவு 'பெயர்" என்பதன் தன்மையை உணர்ந்ததனால் ஏற்பட்டதாகும்.
இவ்வாறு விலக்கி அறிய ஏற்பட்டதுதான் விலாசம் என்பது. வில என்பது அடிச்சொல். ஆசு என்பது விலக்க ஆவதான பற்றுக்கோடு ஆகும். ஆகவே வில+ ஆசு+ அம் = விலாசம் ஆகும். நல்ல தமிழ்ச் சொல் என்று அறிந்து, உங்கள் மாணவர்களுக்கோ கேட்பவர்களுக்கோ விளக்கிச் சொல்லுங்கள். பிற்காலத்தில் இது முகவரியைக் குறித்தது. கடைகள் முதலிய இடங்களுக்கு இடப்படும் குறிப்புச்சொல்லையும் முன்நிறுத்தியது. விலாசம் என்பதை விலாஸ் என்று பலுக்கினால் அது பிற சொல்லைப் போல் தெரியும். அன்று என்று அறிக.
ஆசு என்பது முண்டாசில் கூட இருக்கிறதே. முண்டு என்பது துண்டுத்துணி. முண்டு ஆசு முண்டாசு.
வில்லிருந்து அம்பு புறப்படுகிறது. அம்பை விலகிச் செல்ல உதவுவதே வில். வில் என்பது இங்கு அடிச்சொல் - பிரிந்து சொல்லுதல் குறிக்கும். இதிலிருந்து விலகுதல் என்ற சொல் ஏற்பட்டது. விலாசம் என்பது இவ்வடியிற் பிறந்ததுதான்.
வில்லா என்ற இலத்தீன் சொல்லும் இதனோடு தொடர்புடைய இரவல்தான். வில்லாக்கள் தனித்தனியான மாளிகைகள்.
வங்காளத்தில் தாம் கண்ட வளையல்களை வங்காளம் > பங்காள் > பேங்கள் என்று குறித்த ஆங்கிலேயனும் கெட்டிக்காரனே.
வில் ஆசு அம் என்பது வில்லாசம் என்று லகரம் இரட்டிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், ஒரு லகர ஒற்றை இடைக்குறைத்து விளக்கலாம். உங்கள் மனநிறைவுக்கு. எம் சிந்தனையில் அது தேவையில்லை.
விலகி விலகி அமைந்த உடற் பக்க எலும்புகள் விலா என்ற பெயர் பெற்றன. ஒரு மனிதனிடமிருந்து ஏதேனும் பெற்றுக்கொண்டு அடுத்தவனிடம் சென்ற பொருள் வில்> வில்+தல் > விற்றல் ஆனது. வில் > விலை. வில் பு அன் ஐ > விற்பனை.
ஒரு சொல்லமைவது, அந்த அமைப்புச் செயலின் முன்நிற்போனையும் அவன்றன் சுற்றுச்சார்பினையும், அவன் சிந்தனையையும் சிறிதளவு அவன் சார்ந்துள்ள மொழிமரபினையும் நிலைக்களனாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும். எடுத்துக்காட்டாக பெயர்தல் என்ற சொல் அவன் சிந்தைக்குள் வரவில்லை என்றால், "வேறு" என்பதையே அவன் எண்ணிக்கொண்டிருந்திருப்பான் என்றால், பெயர் இட்டுக்கொள்ளப்படுவதன்று, ஆடைபோல் உடுத்துக்கொள்ளப்படுவது என்று கருதிக்கொண்டிருந்திருப்பான் என்றால் அவன் அமைக்கும் சொல்: வேறுடை என்று வந்துவிடும். உடுத்தும் உடையைக் குறிப்பதால் சரியில்லை, அடை என்பதே சரி என்று அவன் மனைவி சொல்கிறாள் என்றால் அதை அவன் வேறடை என்று மாற்றிக்கொள்வான்.இதில் இன்னும் கருதுவதற்கு இடமுள்ளது. இத்துடன் நிறுத்துவோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.