தகர சகரப் போலியில் நாம் கவனித்துக்கொண்டிருக்கும் "இந்தச் சொல் " (ஏதேனும் ஒன்று) --- திரிந்திருக்கிறது என்று சொல்லுகையில், அதை இணையத்தின் மூலம் படிக்கும் ஒரு தமிழறிந்தார் தம் மனத்தினில் இதனைப் பதிவு செய்திருப்பார் என்று நாம் நினைக்கவில்லை. எனினும் எல்லா வாசிப்பாளர்களும் ஒரே மாதிரி அவ்விடுகையைக் கடந்து சென்றிருப்பர் என்று கூறிவிடவும் முடியாது. ஓரிருவர் அதைப் பசுமரத்தாணிபோல் மனத்தினுள் அமர்த்திக்கொண்டிருப்பர். பெரும்பாலோர் இன்னொரு முறை அதைச் சந்தித்தால் ஓரளவு அது அவர்களுக்குத் தெரியவரும்.
ஒரு மனிதன் ஒன்றை 5 முறையாவது கடந்து சென்றிருக்கவேண்டும். அப்போதுதான் ஒருவன் அதை நினைவுகூரும் திறத்தினை அடைவான் என்று சொல்லப்படுகிறது. இவை எல்லாம் பிறர்தரு ஆய்வு முடிவுகள்.
கல்விக்குப் பெரிய எதிரி எதுவென்றால் அது மறதி தான். கல்வி என்பது பெரிதும் நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.
நினைவாற்றல் தடுமாற்றம் பள்ளிகளில் போலவே வழக்குமன்றச் சாட்சிகளிடமும் காணப்படுவதொன்றாகும். மாறுபாடுகள் எனப்படும் இவற்றையெல்லாம் முறையாக உணர்ந்து இறுதியில் தீர்ப்பை உரைக்கும் நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். அவர்களின் வேலை மிக்கக் கடினம்
பகர்ப்புச் செய்வதென்பது இன்னும் எளிதானது. இதைக் காப்பி அடிப்பது என்பர். காப்பி அல்லது பகர்ப்புச் செய்வோன் அறிந்துகொண்டது சொற்பமே.
இப்போது ஆய்வுக்கு வருவோம்.
இகரம் அகரமாகத் திரிவதென்பது, தகரச் சகரப் போலியினும் குறைவான நிகழ்தலை உடையதுதான். இதழ் என்பது அதழ் என்று திரிதல் போலும் நிகழ்தல் சொற்களின் எண்ணிக்கையில் குறைவே ஆகும். சில முன் இடுகைகளில் எடுத்துக்காட்டப் பட்டன.
இசடு என்பதும் அசடு என்று வரும் அல்லது ஒன்று மற்றொன்றாக வரும். அசடு என்பது மூடத்தன்மையையும் குறிக்கும். புண்ணின் வடிநீர் அல்லது குருதி, மேலாகக் காய்ந்து, நன்கு காய்ந்த பின் எடுபட்டுப் புதிய தோல் முளைக்கும். இதை அசடு என்பர். புண்வடிகை காய்ந்து பெயர்தல்.
இசடு என்பது கசடு என்று திரிதல் காணலாம். கசடு என்பது குற்றம் குறை என்றும் அணியியல் வகையில் குறிக்கும். " கற்கக் கசடற கற்பவை" என்பது ஒரு குறள் தொடர்.
வானின்மதிபோல் மேவும் வாழ்வே இசடே இல்லாததே" என்று ஒரு பாடல்வரி வருகிறது. வான்மதியில் இசடு இருந்தாலும், எம் வாழ்வில் அது இலது என்பதை இதன் பொருளாகக் கொள்ளல் வேண்டும். இங்கு இசடு என்பது களங்கம் அல்லது கசடு என்று கொள்க.
இச்சொற்களின் திரிந்தமைவை இன்னோர் இடுகையில் காணலாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.