இது புதிய காலம் என்று பலர் நினைக்கின்றனர். பழங்காலத்தில் நாம் இருக்கவில்லை என்றாலும் அதைப் பற்றி பிறர் பேசக் கேள்விப் பட்டதாலும் சிலர் எழுதுவைத்துவிட்டுச் சென்றவற்றைப் படித்ததாலுமே இவ்வாறு நினைக்கத் தோன்றுகிறது. ஒப்பீடு செய்வதற்கு எந்தக் காலமும் நம் முன் இல்லையென்றால், புதிய காலம், புதிய யுகம் என்றெல்லாம் எண்ணுவதற்கு எந்தக் காரணமுமில்லை.
நம் முன்னோர் நான்கு யுகங்களை எண்ணி உள்ளனர். இவற்றில் முதலாவது யுகம் கிருதயுகம். இது 1728000 பகலோன் ஆண்டுகளைக் ( sun years) கொண்ட யுகம் என்றனர். இதைப் பற்றிய கதைகள் நம்மிடம் இருக்கின்றன. இதை எழுதியவர்கள் எப்படி இதனை அறிந்துகொண்டனர் என்பது நமக்குத் தெரியவில்லை யாதலால், சில அறிவாளிகள் இவை பற்றி அறிய எந்த அளவையும் இல்லை என்பதனால் நம்பவில்லை. ஆனால் இதை நம்புவோர் உண்டு. இந்த யுகத்தில் உண்மையே அதன் திறக்குறியாக இயங்கிற்று என்றனர். முன்னோர் எழுதிவைத்த - எழுதிவைக்காத எல்லாமுமா நமக்குத் தெரிந்துவிட்டது? கொஞ்சம் தெரிந்துகொண்டு எல்லாம் தெரிந்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல் இருப்பது முதன்மை.
இவர்கள் சொல்லமுனைவது என்னவென்றால் பொய்யும் வழுவும் மனிதர்களிடைத் தோன்றாத காலமொன்று இருந்தது, இவை பின்னர்தாம் தோன்றி மக்களைக் கெடுத்துவிட்டன என்பதுதான். இதை நம்புவதற்குக் காரணமுண்டு. மனிதன் ஒழுங்கான வீடு கட்டிக்கொள்ளும் திறனுமின்றி, முறையான உணவுக்கு வழியின்றி அலைந்துகொண்டிருந்த அந்தப் பழங்காலத்தில், காட்டில் கிடந்த அந்த இருண்ட காலத்தில், இவன் பொய்யைப் பேச முனைந்தாலும் அதைக் கேட்பவர் இல்லையாதலால், ஏமாற்ற எண்ணினாலும் ஏமாறுவதற்கு ஆளில்லை யாதலால், எல்லோரும் உண்மையைத்தான் பேசியிருக்கக் கூடும்! வேட்டைத் திறமுடையவன் மானிறைச்சியைத் தின்றுகொண்டிருக்கையில், அந்தத் திறமில்லாதவன் எதுவும் எடுபிடி வேலைசெய்து இறைச்சி கிடைக்காவிட்டாலும் தோலை வாங்கிச் சப்பிக்கொண்டிருந்த நிலையில், பொய் பேசவும் வழுவின செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் குறைவுதாம். ஆகவே கிருதயுகம் என்பது உண்மைகளே பெரிதும் நிகழ்ந்த காலமென்பதை ஒப்புக்கொள்ளலாம். அதனால் இது சத்தியயுகம் எனவும் பெயர் பெற்றது.
இத்தகைய ஓர் உண்மைக் காலநிலை, எல்லா மனித நாகரிகங்களிலும் நிலவிற்று என்பதில் புனைவில்லை. இது அறிவுக்குப் பொருத்தமான சிந்தனையில் தோன்றிய தென்று நாம் முடிக்கலாம்.
இந்தக் காலக்கணக்கைத் தீர்மானித்தவர்கள், உண்மைநிலை, பொய்ம்மை புகுதல், கேடுகள் விளைதல் என்ற நிலைக்களன்களி லிருந்து காலங்களை வகுத்திருத்தலை நாம் உணரவேண்டும். உண்மை ததும்பிய யுகமென்றால் பெரும்பான்மை பற்றிய பகுப்பு இதுவாகும். ஓரிருவர் பொய்யுரைத்தமை பற்றிய பகுப்பன்று.
திரேதாயுகம் என்ற இரண்டாம் காலக்கட்டம், 1296000 ஆண்டுகள் என்றனர். மூன்றாம் யுகம் என்பது துவாபரயுகம், 864000 ஆண்டுகள். அடுத்த பூவம் என்ற நான்காம் யுகமென்பது 84 இலக்கம் ( இலட்சம்) ஆண்டுகள். இதைப் பணையுகம் என்றும் கூறுவர்.
பணையுகமே கலியுகம் . இது 3102-ல் ( common era, now ) தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது என்பர். இவ் யுகம், கடையூழி, கடையுகம் எனவும் வேறுபெயர்கள் உடையவை. இதற்குப் பொய்யுகமென்றே திருவிளையாடற் புராணம் பெயரிட்டுள்ளது. ஆகவே பலரும் நேர்மை இன்றியே நடந்துகொள்வதைக் காணலாம். (திருவிளை. இரச. 30). நன்று செய்தாலும் அதைப் பொய்க்காரணத்துக்காகவே செய்வதையும் அதைக் மறைத்துக்கொள்வதையும் காணலாம். இந்தக் கணிப்புரையும் உண்மையாகவே நாம் உணர்கிறோம். தொடக்ககாலத்தில் பொய்ம்மைக்குரிய திறனை மனிதன் பெற்றிருக்கவில்லை. போகப்போகத்தான் திருடனும் திறமுடையவன் ஆகிறான். எதற்கும் அறிவற்ற ஒரு தொடக்கமும் பட்டறிவு நிரம்பிய ஒரு வளர்நிலையும் உள்ளனவென்பதை உணர அதிக மூளை ஒன்றும் தேவையில்லையே!
காவல்துறையும் நீதித்துறையும் மனிதர்களை இறுக்கிக் கட்டுப்படுத்தும் பல்வேறு சட்டங்களும் விரிந்துள்ளமைக்கு மனிதர்களின் தீய நடத்தையும் அதனைக் கட்டுப்படுத்த அரசுகள் வெளிப்படுத்தும் நடவடிக்கைப் பட்டியல்களுமே சான்றாவன.
இதில் வந்துள்ள சில சொற்களைப் பின்னர் விளக்க முயல்வோம். எடுத்துக்காட்டு: ஆண்டு என்றால் என்ன, வருடம் என்றால் என்ன, அடிச்சொற்கள் என்னென்ன ......?
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.